Friday, December 12, 2008

அக்கறையற்ற ஆளுங்கட்சியும், பொறுப்பற்ற எதிர்க்கட்சியும்!

சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில், வித்தியாசமான எதிர்க்கட்சியான பா.ஜ.க தரப்பிலிருந்து வித்தியாசமான கோரிக்கை எழுந்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்கக் கூடாது என்று கோரி அக்கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் சுவரில் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச நிலவரப்படி கச்சா எண்ணெயின் விலை மிக, மிகக் குறைந்து விட்ட நிலையிலும் பெட்ரோலியப்பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏதுமின்றி. `எதன் மீதோ மழை பெய்தது போல்’ மத்திய அரசு இருந்து வந்தது. இந்நிலையில் இந்த அநீதியை இனியும் பொறுக்க முடியாது என்று கூறி டிசம்பர் 2 ம் தேதி மக்களைத்திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என இடதுசாரிக்கட்சிகள் அறிவித்தன. அதன் பின்பு என்ன நினைத்தாரோ, என்னவோ டிசம்பர் 24ம் தேதிக்குப் பிறகு பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஒரு பொத்தாம் பொதுவான அறிவிப்பை வெளியிட்டார். மிக மிகச் சிறுபான்மை மக்களுக்கும், இலாபவெறி பிடித்த தனியார் விமான நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் விமான எரிபொருளின் விலையைக் குறைக்கும் அறிவிப்பை வெளியிடுவதில் இந்த அளவு நிதானத்தை மத்திய அரசு காட்டவில்லை. தவிர தற்போதைய அறிவிப்பு விலையைக் குறைக்கும் நோக்கத்துடன்தான் வெளியிடப்பட்டது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. மக்கள் விரோத மைய அரசிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும் எனும் போது, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு இதைக் கண்டிக்கும் விதத்தில்தான் அமைய வேண்டும். பெட்ரோல் விலையை உடனடியாகக்குறை என்ற கோரிக்கைதான் உடனடியாக எழுந்திருக்க வேண்டும். இடதுசாரிக்கட்சிகள் இதை சரியாகத்தான் செய்து கொண்டிருக்கின்றன. பேராட்டத்தையும் திட்டமிட்டபடி நடத்துகின்றன. ஆனால் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வோ மக்கள் நலனை மறந்து இழந்த ஆட்சியைத் திரும்பக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற குறுகிய நோக்கத்துடன் பெட்ரோல் விலையைக் குறைக்கக்கூடாது என்று கூக்குரலிட்டு வருகிறது. மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைப்பதாக அறிவித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணானது என்று அது வாதம் செய்கிறது. (அக்கட்சியின் முறையீட்டை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் பெட்ரோலிய அமைச்சருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தனிக்கதை! ) இது ஏற்றுக்கொள்ளவே முடியாத வாதமாகும். பெட்ரோல் மீது அடுக்கடுக்கான வரிகளைப் போட்டு மக்களுக்கு வினியோகிக்கும் மத்திய அரசு (மாநில அரசு வரியும் இதில் அடக்கம் என்பது தெரிந்ததே) வரலாறு காணாத விலையுயர்வுக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததே காரணம் என்று சமாதானம் கூறி வந்தது. அந்த மழுப்பல் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை நன்றாகவே எடுபட்டது. ஆனால் உலக எண்ணெய்ச்சந்தையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அரசுக்கு இயல்பாகவே ஏற்படுத்தியுள்ளது. அந்த நிர்ப்பந்தம் இடதுசாரிகளின் போராட்ட அறிவிப்பால் மேலும் அதிகரித்தது. இந்நிலையிலேயே அந்த `வெற்று' அறிவிப்பும் அமைச்சரிடமிருந்து வந்தது. நிலைமை இவ்வாறிருக்க தேர்தல் நோக்கத்துடனேயே அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று பா.ஜ.க கூறுவது சிறுபிள்ளைத்தனமானது; கண்டிக்கத்தக்கது. ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியின் கடமை அரசு முறை தவறும் போது அதை சுட்டிக்காட்டி திருத்துவதாகத்தான் இருக்க வேண்டும். அதைவிடுத்து அப்படி நாம் திருத்துவதால் மக்களுக்கு நன்மை ஏற்பட்டு அது ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் போய்விடுமோ என்று யோசித்து எந்நேரமும் ஆட்சிக் கனவிலேயே மிதப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
 
**** பெட்ரோலியப் பொருட்களின் வரலாறு காணாத விலையுயர்வுக்கு பங்குச்சந்தை சூதாட்டமும், உலக வணிகமுமே காரணங்களாக இருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது குறைந்துள்ள நிலையில் அதிரடியாக பெட்ரோல் விலையும் குறைந்து விட்டது. ஒரு பீப்பாய் 160 டாலருக்கு மேல் விற்கப்பட்ட பெட்ரோல் விலை தற்போது 50 டாலருக்கும் கீழாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விலை கூடும் வரை பெட்ரோலை இருப்பு வைக்க பகாசுர எண்ணெய் நிறுவனங்கள் (கோஷ் (மடிஉh), ராயல்டச்சு ஷெல் போன்றவை) பெரிய, பெரிய கப்பல்களை `புக்' செய்து வருகின்றனவாம். மத்திய அரசு பெட்ரோல் விலையைக் குறைப்பதில் காட்டும் தாமதமும், பா.ஜ.க வின் செயல்பாடுகளும் அந்நிறுவனங்களுக்கே சாதகமாக இருக்கும்.

No comments:

Post a Comment