Wednesday, December 9, 2009

ஊழலை ஒழிக்க ஒன்றுபடுவோம்!


ன்று (டிச.9) ஊழலுக்கு எதிரான நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. “வளர்ச்சியை ஊழல் கொன்று விட அனுமதிக்காதீர்கள்!’’ என்ற நோக்கத்துடன் இவ்வாண்டின் ஊழல் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
நாடும், நாட்டு மக்களும் வளர்ச்சி பெற முட்டுக்கட்டையாக இருக்கும் பல்வேறு காரணங்களுள் ஊழலும் ஒன்று. ஆயுதம் வாங்குவது முதல் சவப்பெட்டி வாங்குவது வரை அங்கிங்கெணாத படி எல்லாவற்றிலும் ஊழல் தலைவிரித்து ஆடி வருகிறது என்பது வெள்ளிடை மலையாகும்.
அண்மையில் மிக அதிக ஊழல் நடைபெறும் நாடுகள் பட்டியலை டிரான்°பரன்சி இன்டர்நேசனல் என்ற ஒரு சர்வதேச நிறுவனம் வெளியிட்டது. அதில் இந்தியா 84 வது இடத்தைப் பிடித்திருந்தது. நமக்கு முன்னால் 83 நாடுகள் உள்ளனவே, நமது நாடு கொஞ்சம் பரவாயில்லைதான் போலிருக்கிறது என்று யாரும் நினைத்து விடக் கூடாது. உண்மையில் இது மிக மோசமான நிலையாகும். இந்தப் பட்டியலை வெளியிட்ட அவ்வமைப்பின் தலைவர் ஆர்.எச்.டஹிலானி என்பவர், “வறுமைக்கும், ஊழலுக்கும் இடையே மிகவும் வலிமையான பிணைப்பு உள்ளது. இது உலக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது,’’ என்று கூறினார். அவரின் இக்கூற்றுக்கு ஆதாரமாக இந்தியாவையே எடுத்துக்கொள்ளலாம். அனைத்துக் குடிமக்களுக்கும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு அளிப்பது உள்ளிட்ட மனிதவளம் சார்ந்த செயல்களை திருப்திகரமாக நிறைவேற்றும் நாடுகளின் பட்டியல் என்று வரும்போது இந்தியாவால் 100 வது இடத்திற்குள் கூட வர முடியவில்லை. மனிதவள அறிக்கையில் இந்தியாவின் தற்போதைய நிலை 134 என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலைக் கட்டுப்படுத்தவும், தவறு செய்தவர்களை தண்டிக்கவும் பல்வேறு சட்டங்கள் உள்ளன. இருந்த போதிலும் தவறு செய்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதில்லை; அவ்வாறு நிறுத்தப்பட்டாலும் தண்டிக்கப்படுவதில்லை.
எனவே ஊழலை ஒழிக்க ஆட்சியாளர்கள் உறுதியான நிலை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்துகின்றன. ஆனால் அவற்றை அவர்கள் குறைந்தபட்சம் காதிலாவது போட்டுக் கொள்கிறார்களா என்பது சந்தேகமே. சட்டத்தின் பிடியில் அகப்படாமல் சுதந்திரமான மனிதர்களாக உலா வரும் எத்தனையோ பேரை உதாரணமாகக் காட்ட முடியும். சட்டத்தின் ஆட்சியை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள நீதிபதிகள் கூட இதற்கு விதிவிலக்கில்லை என்பது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.தினகரன் விஷயத்தில் இருந்து தெளிவாகிறது. ஆயுதம் வாங்குவதில் நடந்த மிகப்பெரிய முறைகேடான போபர்° ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான இத்தாலியைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாத்ரோச்சி பல்லாண்டுகளாக சிபிஐ யால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்தார். ஆனால் தற்போது அவர் மீதான வழக்குகளை அற்பத்தனமான காரணங்களைக் கூறி சிபிஐ திரும்பப் பெற்று விட்டது. இதேபோல் முத்திரைத்தாள் ஊழல், சவப்பெட்டி ஊழல் ஆகியவை சில காலங்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கின. அவ்வழக்குகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. தற்போது 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான °பெக்ட்ரம் ஊழல் முன்னுக்கு வந்துள்ளது. இதற்குக் காரணமான மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் இன்னும் குற்றவாளிகளாகக் கூட அடையாளம் காட்டப்படவில்லை. வெறும் அரசியல் விளையாட்டுதான் இதுவிஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இவை குறித்து எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் பதிலளிக்கும் மனநிலையில் இல்லை. கேட்டால் கேட்டு விட்டுப் போங்கள் என்பது போல் அவர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.
ஆனால் இவை மட்டும்தான் ஊழல் என்பதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது. தற்போது நடைபெற்ற தேர்தலில் நடந்த முறைகேடுகளும் ஊழல் வகையைச் சேர்ந்தவைதான். வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது முதல், விளம்பரம் என்று குறிப்பிடாமல் பத்திரிகைகள் மூலம் விளம்பரம் தேடிக் கொண்டது வரை ஒவ்வொன்றும் ஊழல்தான்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி தற்போது விண்வெளியையும் தாண்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இத்தகைய வரலாறு காணாத விலையுயர்வுக்குக் காரணமான ஊக வணிகம், முன்பேர வர்த்தகம் என்ற பல்வேறு பெயர்களில் செய்யப்படும் வர்த்தகங்களை அனுமதிப்பது கூட ஒரு வகையில் ஊழல்தான். மேலும் பதுக்கல்காரர்களுக்கும், கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கும் வசதியான நிலைகளை உருவாக்கி வைத்திருப்பதும் ஊழல்தான்.
இவையெல்லாவற்றையும் எப்போது ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்துகிறார்களோ அப்போதுதான் ஊழல் என்ற கொடிய நோய் நாட்டை விட்டு அகலும். மேலும் அந்நிலை சாத்தியமாவதற்கு நடைமுறையில் உள்ள பொருளாதாரக் கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இவற்றை ஆட்சியாளர்கள் தாமாகச் செய்ய மாட்டார்கள். மக்கள் போராட்டங்கள்தான் சாத்தியமாக்கும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்:



ஊழலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்களுள் மிக முக்கிய சட்டமாக இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகும். கடந்த 2005 ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், இடதுசாரிகளின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களால்தான் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 1, 2009

போபால் பேரழிவை நினைவு கூர்வோம்!


(உலகையே உலுக்கிய போபால் விஷவாயு பேரழிவு நிகழ்ந்து 25 ஆண்டுகள் முடிவடைந்து விட்டன. இக்கொடூர சம்பவத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அண்மையில் புது தில்லியில் நடந்த சர்வதேச கம்யூனி°ட் கட்சிகளின் மாநாடு விவாதித்தது. அதன் தீர்மானத்தில் இருந்து...)


1984 ம் ஆண்டு டிசம்பர் 2,3 ஆகிய நாட்களில் போபால் பேரழிவு ஏற்பட்டது. உலகில் தொழிற்சாலைகளால் நிகழ்ந்த பேரழிவுகளில் குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படும் அந்தப் பேரழிவில் சிக்கி 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.
ஆனால் அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டபோதிலும் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வில் அரசு போதிய அக்கறை செலுத்தாததால் இன்றும் அந்தப் பேரழிவின் பாதிப்புகள் உணரப்படுகின்றன. அந்த மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை அரசு செய்து தரவில்லை. மேலும் அவர்களது இழந்த வாழ்வை மீட்கத் தேவையான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. இதனால் அவர்களது வாழ்வில் துன்பம் தொடர்கதையாகியுள்ளது. அத்துன்பங்களைப் போக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அதே சமயத்தில் இந்தியாவிலோ அல்லது மற்ற வளரும் நாடுகளிலோ மீண்டும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்பதும் முக்கியமாகும். இதனால் போபால் சம்பவம் எடுத்துக்காட்டியிருக்கும் பிரச்சனைகள் குறிப்பாக ஏகாதிபத்தியத் தன்மை வாய்ந்த உலகமயமாக்கலும், புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும் ஆதிக்கம் செலுத்தும் இந்தச் சூழ்நிலையில் என்றென்றும் மறக்கக்கூடாதவையாகும்.
இந்த பேரழிவுக்குக் காரணமான தொழிற்சாலையான யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்தின் பயங்கர குற்ற முகம் அது அமெரிக்காவின் மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் நடத்தி வந்த ஆலையைப் பார்த்த போது தெரியவந்தது. அங்கு இருந்த பல பாதுகாப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் போபால் நகரில் அந்நிறுவனம் நடத்திய பேரழிவுக்குக் காரணமான ஆலையில் இல்லை. போபால் விஷவாயு கசிவுக்குப் பின் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனம் டவ் கெமிக்கல்° என்ற ஆலையால் விலைக்கு வாங்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் இந்திய அரசுடனும், யூனியன் கார்பைடு நிறுவனத்துடனும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு- உயிரிழந்தவர்களுக்கு 1200 அமெரிக்க டாலர்கள்(அன்றைய மதிப்பில்), உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 550 டாலர்கள் என்று- மிகச்சிறிய தொகையை இழப்பீடாக வழங்கியது. அப்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு இந்திய அரசு பணிந்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் முற்போக்கு சக்திகள் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்களே இந்தியாவில் யூனியன் கார்பைடு நிறுவனம் மீதான வழக்குகள் மீண்டும் நடத்தப்படக் காரணமாகும். இருந்த போதிலும், இச்சம்பவத்திற்கு மிக முக்கிய காரணமாக இருந்த குற்றவாளியான அப்போதைய யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் இதுவரை இந்தியாவிடம் சரணடையவில்லை. அவர் மீதான குற்றத்தை இந்திய நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தி, பகிரங்கமாக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு விட்ட போதிலும் அவரை அமெரிக்கா இன்று வரை பாதுகாத்து வருகிறது.
குற்றம் செய்த யூனியன் கார்பைடு நிறுவனம் இவ்வாறு சட்டத்தில் இருந்து தப்பியுள்ள வேளையில் அதைப் பின்னர் கைப்பற்றிய டவ் கெமிக்கல்° நிறுவனம், பொது மக்களைக் காட்டிலும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்ட தவறான நிறுவனச் சட்டங்கள் காரணமாக தன்னைப் பாதுகாத்துக் கொண்டுள்ளது. ஆனால் இந்தக் குறைவான அபராதங்கள் கூட அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவுடனான அணு உடன்பாட்டை செயல்படுத்துவதில் மும்முரமாக இருக்கும் அமெரிக்கா போபால் சம்பவத்தை குறிப்பாக கோடிட்டுக்காட்டி, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்தால் அது அமெரிக்க நிறுவனங்களை பாதித்து விடக்கூடாது என்று கூறி குறைவான சட்டக்கட்டுப்பாடு கொண்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியாவை நிர்ப்பந்தித்து வருகிறது.
இந்த சங்கிலித்தொடர் நிகழ்வுகள் உலக முதலாளித்துவத்தின் உண்மையான முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை மையமாகக் கொண்ட பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள் தற்போது வளரும் நாடுகளில் கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவை தொழிற்சாலை பாதுகாப்பு, பாதிப்பு ஏற்படுத்தும் விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்களை வெளிப்படையாக மீறி வருகின்றன. அபாயம் நிறைந்த தொழிற்சாலைகள், பாதிப்பை ஏற்படுத்துவதும், தரமற்றதுமான தொழில்நுட்பங்கள், தடை செய்யப்பட்ட அல்லது மிக அதிக நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வருவதன் மூலம் அவை இச்சட்டங்களை வெளிப்படையாக மீறி வருகின்றன. வளரும் நாடுகள் சொந்தமாக தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் பெற்றுள்ள போதிலும் வளர்ந்த நாடுகளால் அவ்வாறு செய்வதிலிருந்து தடுக்கப்படுகின்றன. பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் இவ்வாறு வளரும் நாடுகள் மீது திணிக்கப்படுகின்றன. ஐஎம்எப், உலக வங்கி மற்றும் அது போன்ற நிறுவனங்களின் நிர்ப்பந்தத்தால் வளரும் நாடுகள் அமல்படுத்தி வரும் புதிய, தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக ஒரு பன்னாட்டு நிறுவனம் சட்டத்தை மீறுகிறது என்று தெரிந்தாலும் அவற்றின் மீது அந்நாட்டால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. பன்முகத்தன்மை வாய்ந்த காட் மற்றும் உட்டோ போன்ற பொருளாதார உடன்பாடுகள் மூலமும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள் வளரும் நாடுகளைக் கட்டுப்படுத்தி வருகின்றன.
தொழிற்சாலைகளின் உரிமம், பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துதல், தொழில்நுட்பங்களில் சுய சார்பான தன்மை, இறக்குமதி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்த கொள்கை மற்றும் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகளை உருவாக்கும் தேவை, பன்னாட்டு நிறுவனங்களின் பாத்திரத்தை தீர்மானித்தல், தொழிற்சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதிக்காமல் நிறுவனங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்தவுமான சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்துவது, நகர மேம்பாடு, தொழிற்சாலைகளுக்கான சரியான இடங்களைத் தேர்ந்தெடுத்தல், விவசாயக் கொள்கைகளைத் தீர்மானித்தல் போன்ற பல்வேறு விஷயங்களை போபால் சம்பவம் உலகின் முன்பு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள், ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகள் மீது திணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்கள், இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் நிலைக்குக் காரணமான புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவை குறித்து குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில், உலக கம்யூனி°ட் கட்சிகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து முற்போக்கு சக்திகளையும் போபால் விஷவாயு சம்பவத்தின் நினைவு நாளை கடைப்பிடிக்குமாறு அறைகூவி அழைக்கின்றன.