Wednesday, December 9, 2009

ஊழலை ஒழிக்க ஒன்றுபடுவோம்!


ன்று (டிச.9) ஊழலுக்கு எதிரான நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. “வளர்ச்சியை ஊழல் கொன்று விட அனுமதிக்காதீர்கள்!’’ என்ற நோக்கத்துடன் இவ்வாண்டின் ஊழல் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
நாடும், நாட்டு மக்களும் வளர்ச்சி பெற முட்டுக்கட்டையாக இருக்கும் பல்வேறு காரணங்களுள் ஊழலும் ஒன்று. ஆயுதம் வாங்குவது முதல் சவப்பெட்டி வாங்குவது வரை அங்கிங்கெணாத படி எல்லாவற்றிலும் ஊழல் தலைவிரித்து ஆடி வருகிறது என்பது வெள்ளிடை மலையாகும்.
அண்மையில் மிக அதிக ஊழல் நடைபெறும் நாடுகள் பட்டியலை டிரான்°பரன்சி இன்டர்நேசனல் என்ற ஒரு சர்வதேச நிறுவனம் வெளியிட்டது. அதில் இந்தியா 84 வது இடத்தைப் பிடித்திருந்தது. நமக்கு முன்னால் 83 நாடுகள் உள்ளனவே, நமது நாடு கொஞ்சம் பரவாயில்லைதான் போலிருக்கிறது என்று யாரும் நினைத்து விடக் கூடாது. உண்மையில் இது மிக மோசமான நிலையாகும். இந்தப் பட்டியலை வெளியிட்ட அவ்வமைப்பின் தலைவர் ஆர்.எச்.டஹிலானி என்பவர், “வறுமைக்கும், ஊழலுக்கும் இடையே மிகவும் வலிமையான பிணைப்பு உள்ளது. இது உலக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது,’’ என்று கூறினார். அவரின் இக்கூற்றுக்கு ஆதாரமாக இந்தியாவையே எடுத்துக்கொள்ளலாம். அனைத்துக் குடிமக்களுக்கும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு அளிப்பது உள்ளிட்ட மனிதவளம் சார்ந்த செயல்களை திருப்திகரமாக நிறைவேற்றும் நாடுகளின் பட்டியல் என்று வரும்போது இந்தியாவால் 100 வது இடத்திற்குள் கூட வர முடியவில்லை. மனிதவள அறிக்கையில் இந்தியாவின் தற்போதைய நிலை 134 என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலைக் கட்டுப்படுத்தவும், தவறு செய்தவர்களை தண்டிக்கவும் பல்வேறு சட்டங்கள் உள்ளன. இருந்த போதிலும் தவறு செய்தவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதில்லை; அவ்வாறு நிறுத்தப்பட்டாலும் தண்டிக்கப்படுவதில்லை.
எனவே ஊழலை ஒழிக்க ஆட்சியாளர்கள் உறுதியான நிலை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்துகின்றன. ஆனால் அவற்றை அவர்கள் குறைந்தபட்சம் காதிலாவது போட்டுக் கொள்கிறார்களா என்பது சந்தேகமே. சட்டத்தின் பிடியில் அகப்படாமல் சுதந்திரமான மனிதர்களாக உலா வரும் எத்தனையோ பேரை உதாரணமாகக் காட்ட முடியும். சட்டத்தின் ஆட்சியை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள நீதிபதிகள் கூட இதற்கு விதிவிலக்கில்லை என்பது கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.தினகரன் விஷயத்தில் இருந்து தெளிவாகிறது. ஆயுதம் வாங்குவதில் நடந்த மிகப்பெரிய முறைகேடான போபர்° ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான இத்தாலியைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாத்ரோச்சி பல்லாண்டுகளாக சிபிஐ யால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருந்தார். ஆனால் தற்போது அவர் மீதான வழக்குகளை அற்பத்தனமான காரணங்களைக் கூறி சிபிஐ திரும்பப் பெற்று விட்டது. இதேபோல் முத்திரைத்தாள் ஊழல், சவப்பெட்டி ஊழல் ஆகியவை சில காலங்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கின. அவ்வழக்குகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. தற்போது 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான °பெக்ட்ரம் ஊழல் முன்னுக்கு வந்துள்ளது. இதற்குக் காரணமான மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் இன்னும் குற்றவாளிகளாகக் கூட அடையாளம் காட்டப்படவில்லை. வெறும் அரசியல் விளையாட்டுதான் இதுவிஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இவை குறித்து எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஆட்சியாளர்கள் பதிலளிக்கும் மனநிலையில் இல்லை. கேட்டால் கேட்டு விட்டுப் போங்கள் என்பது போல் அவர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.
ஆனால் இவை மட்டும்தான் ஊழல் என்பதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது. தற்போது நடைபெற்ற தேர்தலில் நடந்த முறைகேடுகளும் ஊழல் வகையைச் சேர்ந்தவைதான். வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது முதல், விளம்பரம் என்று குறிப்பிடாமல் பத்திரிகைகள் மூலம் விளம்பரம் தேடிக் கொண்டது வரை ஒவ்வொன்றும் ஊழல்தான்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி தற்போது விண்வெளியையும் தாண்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இத்தகைய வரலாறு காணாத விலையுயர்வுக்குக் காரணமான ஊக வணிகம், முன்பேர வர்த்தகம் என்ற பல்வேறு பெயர்களில் செய்யப்படும் வர்த்தகங்களை அனுமதிப்பது கூட ஒரு வகையில் ஊழல்தான். மேலும் பதுக்கல்காரர்களுக்கும், கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கும் வசதியான நிலைகளை உருவாக்கி வைத்திருப்பதும் ஊழல்தான்.
இவையெல்லாவற்றையும் எப்போது ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்துகிறார்களோ அப்போதுதான் ஊழல் என்ற கொடிய நோய் நாட்டை விட்டு அகலும். மேலும் அந்நிலை சாத்தியமாவதற்கு நடைமுறையில் உள்ள பொருளாதாரக் கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இவற்றை ஆட்சியாளர்கள் தாமாகச் செய்ய மாட்டார்கள். மக்கள் போராட்டங்கள்தான் சாத்தியமாக்கும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்:



ஊழலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்களுள் மிக முக்கிய சட்டமாக இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகும். கடந்த 2005 ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டம், இடதுசாரிகளின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களால்தான் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment