Wednesday, September 16, 2009

ஓசோன் ஓட்டை: பாதிப்புகள் கடுமையாக அதிகரிக்கும்!

புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் வளிமண்டலத்தின் மேற்பகுதியில் உள்ள ஓசோன் படலம் பாதிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. வளிமண்டலத்தில் 10 கி.மீ முதல் 50 கி.மீ வரை பரவியுள்ள ஸ்ட்ரேட்டோஸ்பியர் என்ற பகுதியில் உள்ள இந்த ஓசோன் படலம்தான் ஒரு திரை போல் செயல்பட்டு புவியை சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து காக்கிறது. அப்படலத்தால் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான புற ஊதாக்கதிர்கள் உள்வாங்கப்பட்டு தடுக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லாமல் அவை நேரடியாக பூமியை வந்தடைந்தால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பல்வேறு புற்றுநோய்களை ஏற்படுத்தும். மேலும் மரபியல் ரீதியான பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெப்பநிலையில் ஏற்பட்டு வரும் உயர்வால் ஓசோன் படலம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது, வெப்பநிலை உயரும்போது ஸ்ட்ரேட்டோஸ்பியரில் உள்ள ஓசோன் மூலக்கூறுகள் அதிகமான இடப்பெயர்வுக்கு ஆளாகின்றன. கீழும் மேலுமாக அவை அலைக்கழிக்கப்படுகின்றன. இதனால் குறைந்த அளவிலான மூலக்கூறுகளே ஸ்ட்ரேட்டோஸ்பியரில் இடம்பெற்றிருக்கும் என்பதால், ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைகிறது. இதைத்தான் எளிமையாக `ஓசோனில் ஓட்டை' என்று சொல்கிறோம். இந்த ஓட்டை வழியாக புவியின் தென் அரைக்கோளம் ஏற்கனவே அதிகளவிலான புற ஊதாக்கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் வெப்பநிலை மேலும் உயரும்பட்சத்தில் இன்னும் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று கனடா நாட்டு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அந்நாட்டின் டொராண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தியோடர் ஷெப்பர்டு மற்றும் மைக்கேலா ஹெக்லின் ஆகியோர் அண்மையில் ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.புவியின் வெப்பநிலை உயர்வால் அடுத்த 100 ஆண்டுகளில் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து கணினி மாதிரிகள் வடிவமைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் நடந்த ஆய்வின் முடிவில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால் தென் அரைக்கோளம் இன்னும் 20 சதவிகிதம் அதிகமாக புற ஊதாக்கதிர்களின் பாதிப்புக்கு உள்ளாகும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதனால் புற்றுநோய்கள் மற்றும் மரபியல் ரீதியான பாதிப்புகளுடன் காற்றின் தரமும் வெகுவாகக் குறையும் அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தென்பாதி பாதிக்கப்படும் அதேவேளையில் உலகின் வடபாதி ஏற்கனவே பெற்று வரும் புற ஊதாக்கதிர்களின் அளவில் 9 சதவிகிதம் குறைவாகப் பெறும் என்ற ஆச்சரியமான தகவலையும் அவ்விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஓசோனுக்கு மிக அதிக பாதிப்பு ஏற்படுத்தும் என்று கருதப்படும் குளோரோ ப்ளூரோ கார்பன் போன்ற சில வேதிப்பொருட்களுக்கு 1987 ம் ஆண்டிலேயே உலகளாவிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அது இன்னும் வளிமண்டலத்தில் இருந்து கொண்டு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது. மேலும் நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட மற்றும் சில வேதிப்பொருட்கள் இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ளன. சிரிப்பூட்டும் வாயு என்று அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு, செயற்கை உரங்கள் பயன்பாட்டால் அதிகம் வெளியாகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் டன் என்ற அளவில் வெளியாகும் இந்த வாயு தற்போது ஓசோன் படலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மேலும் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கான மிக முக்கிய காரணம் வளிமண்டலத்தில் அதிகளவில் பசுங்கூட வாயுக்கள் வெளிவிடப்படுவதாகும். படிம எரிபொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதன் மூலம் இது நிகழ்கிறது. பணக்கார நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் பசுங்கூட வாயுக்களை அதிக அளவில் வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவை வளரும் நாடுகள் மீது இப்பழியைப் போடுகின்றன. வளரும் நாடுகள் படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்று ஓயாது கத்திக்கொண்டிருக்கின்றன. மேலும் படிம எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதாகக் கூறிக்கொண்டு அவை உணவுப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் உயிரி எரிபொருள் பயன்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
இந்நிலையில்தான் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வரும் டிசம்பர் மாதம் டென்மார்க் நாட்டின் கோபன்ஹெகன் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் மாநாடு நடக்கிறது. இதில் கொள்கை அடிப்படையிலான பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் விற்கும் செஸ் வீராங்கனை!

ஜே.சரண்யா... 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசத்திய இச்சிறுமி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சென்னை திருவொற்றியூரில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார்.
பொதுவாக செஸ் விளையாட்டு பணக்காரர்களுக்கான விளையாட்டு என்று கருதப்படுகிறது. ஆனால் சரண்யா விஷயத்தில் இது தலைகீழாக உள்ளது. அவரது தாய் தங்கம் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில் வாயிலில் பிளாஸ்டிக் மற்றும் மண்ணால் ஆன சிறு பொருட்களை விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை குடும்பத்தை கைவிட்டுச் சென்று விட்டாராம். அவர் எங்கிருக்கிறார் என்றே எந்தத் தகவலும் இல்லாத நிலையில், தாய் தங்கத்தின் வருமானத்தைக் கொண்டு மட்டுமே குடும்பம் நடந்து வருகிறது. அருகில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் சரண்யாவும் அவரது சகோதரியும் விடுமுறை நாட்களில் தாய்க்கு உறுதுணையாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவரது தாய் தங்கம் கூறுவதாவது: "வெள்ளிக்கிழமை மட்டும்தான் கோவிலுக்கு கூட்டம் வரும். அப்போதுதான் நிறைய விற்பனை நடக்கும். மற்ற நாட்களில் மந்தமாகத்தான் இருக்கும். அதுவும் மழைக்காலம் என்றால் வியாபாரம் நடப்பதே அரிது", என்கிறார்.
சரண்யா படித்து வரும் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி அவரது செஸ் ஆர்வம் காரணமாகவும், குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகவும் அவருக்கு இலவசக் கல்வியை அளித்து வருவதாக தங்கம் கூறுகிறார். அவரது சகோதரிக்கும் இலவசக் கல்வியை அப்பள்ளி அளித்து வருகிறது. மேலும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஆகும் செலவையும் பெரும்பாலும் பள்ளியே ஏற்றுக் கொள்கிறது என்கிறார் தங்கம். சரண்யாவின் ஆசிரியர்களும் அவருக்கு மிக்க உறுதுணையாக இருக்கின்றனர். போட்டிகள் காரணமாக சரண்யா தவற விடும் வகுப்புகளுக்காக சிறப்பு வகுப்புகளை அவர்கள் எடுக்கின்றனர் என்று நன்றியுடன் கூறுகிறார் அவர்.
"நான் விரைவில் சர்வதேச மாஸ்டர் ஆகிவிடுவேன்", என்று நம்பிக்கையுடன் சரண்யா கூறும் போதும், அவர் மிகப்பெரிய அளவில் சாதிக்க பள்ளியின் உதவி மட்டும் போதாது. அவரை ஸ்பான்சர் செய்ய நல்ல நிறுவனம் வேண்டும் என்று அவரது பயிற்சியாளரான வேலாயுதம் கூறுகிறார். ஏனெனில் சரண்யா சர்வதேச மாஸ்டராக இன்னும் நிறையப் போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது என்கிறார் அவர்.
குடும்பத்தின் வறுமை காரணமாக மிகச்சிறந்த செஸ் வீராங்கனையே தெருவோர வியாபாரியாக மாறும் இந்நாட்டில்தான் கோடிக்கணக்கான டாலர்களில் புரளும் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். அண்மையில் பணக்காரர்களை பட்டியல் போடும் போர்ப்ஸ் இதழில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதில் இந்திய கேப்டன் தோனி 1 கோடி டாலருக்கும் அதிகமான ஆண்டு வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளார். அவரை 17 நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்பான்சர் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள்ளாக 5 இந்தியர்கள் உள்ளனர். சச்சின்(80 லட்சம் டாலர்கள்-2ம் இடம்), யுவராஜ்(55 லட்சம்-3), டிராவிட்(50லட்சம்-4). சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 35 லட்சம் டாலர் சம்பாத்தியத்துடன் ஆஸ்திரேலிய கேப்டன் பான்டிங்குடன் இணைந்து 6ம் இடத்தில் உள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் இவ்வாறு கோடிகளில் புரண்டு கொண்டிருக்கும் வேளையில், திறமை வாய்ந்த இளம் செஸ் வீராங்கனை ஸ்பான்சர் செய்வதற்கு யாரும் இல்லாமல் தவிப்பது விசித்திர முரணாகும்.