Saturday, December 13, 2008

தீண்டாமையின் கோரப்பிடியில் உயர் கல்வி நிலையங்கள்...

நம் நாட்டில் இன்னும் தீண்டாமைத்தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதை ஆங்காங்கே நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன.கயர்லாஞ்சி படுகொலையும், உத்தபுரம் தீண்டாமைப் பெருஞ்சுவரும் அதற்கு அண்மைக்கால உதாரணங்களாகும். இச்சம்பவங்களை மேலோட்டமாகப் பார்க்கும் சிலர், சில கிராமப்புறங்களில் மட்டுமே இன்னும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாகவும், நகர்ப்புறங்களில் எல்லாம் மாறிவிட்டதாகவும் கூறுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நகர்ப்புறங்களிலும் சாதீய ஒடுக்கு முறைகள் தொடரத்தான் செய்கின்றன.நகர்ப்புறங்களில் நிலவும் தீண்டாமைக்கு உதாரணமாக கல்வி நிலையங்களில் நடைபெறும் சம்பவங்களைக் கூறலாம். உதாரணமாக, `தகுதி, திறமைகள் நிரம்பி வழியும்'.உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில்தான் இந்த சாதீய ஒடுக்கு முறைகள் அதிகம் நடக்கின்றன. இங்குள்ள ஆசிரியர்களில் பெரும்பாலானோர் இன்னும் தங்கள் உயர்சாதி ஆதிக்க மனோபாவத்தை கைவிடவில்லை. தலித் மாணவர்களின் மனதில் ஆறாத ரணங்களை அவர்கள் ஒவ்வொரு நாளும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக அனைவராலும் மதிக்கப்படும் இக்கல்வி நிறுவனங்கள், தலித் மாணவர்களை சராசரிக்கும் கீழாக நடத்துவதுடன், தொடர்ந்து கல்வி கற்பதற்கு தகுதி இல்லை என்று கூறி பலரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியும் விடுகின்றன என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.இட ஒதுக்கீட்டின் மூலம் இக்கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளப்படவேண்டிய தலித், பழங்குடியின மாணவர்களில் சரிபாதிப்பேர் சேர்த்துக்கொள்ளப்படுவதேயில்லை என்பதும், அவ்வாறு இடம் கிடைத்த மாணவர்களிலும் 25 சதவீதம் பேர் தொடர்ந்து கல்வி கற்கத் தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றப்படுவதும் ஒரு புள்ளி விவரம் நமக்கு அளிக்கும் வேதனையான தகவலாகும். ஐஐடிக்களில் நடைபெறும் இத்தகைய சாதி ரீதியான பாகுபாடுகள் ஒருபுறம் இருக்க ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு முனைவர் பட்டத்திற்கான ஆய்வு மேற்கொண்டு வந்த செந்தில்குமார் என்ற தலித் மாணவர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்குத் தரப்பட வேண்டிய கல்வி உதவித்தொகையை பல்கலைக்கழக நிர்வாகம் திடீரென்று நிறுத்தியது தற்கொலைக்கான ஒரு முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.செந்தில்குமார் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பன்னியாண்டி என்ற சமூகப்பிரிவைச் சார்ந்த அவரது குடும்பத்தினர் பன்றி வளர்க்கும் தொழில் செய்துவருகிறார்கள். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் எம்.பில் பட்டம் பெற்ற செந்தில்குமார், பொருளாதாரக்காரணங்களால் ஏற்பட்ட சிறு இடைவெளிக்குப்பின் கடந்த 2007ம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி மாணவராகச் சேர்ந்தார். சமூக, பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய ஒரு சமூகத்திலிருந்து பி.எச்டி போன்ற உயர்கல்வி வரை ஒருவர் கற்பதற்கு உண்மையிலேயே கடுமையான முயற்சியும், அர்ப்பணிப்பும் தேவை. செந்தில்குமாரும் அதுபோன்ற ஒரு சிறப்புத்தகுதியோடுதான் ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தார்.தனது நெடுநாள் கனவான முனைவர் பட்டம் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது என்று சேர்க்கையின்போது செந்தில்குமார் நினைத்திருக்கக்கூடும். ஆனால் அது தான் நினைத்ததுபோல் அவ்வளவு எளிதல்ல என்பதை சில நாட்களுக்குள்ளாகவே அவர் உணர்ந்து கொண்டதாகத் தெரிகிறது. தலித் மாணவர்கள் குறிப்பிட்ட வகையில் திட்டமிட்டு ஒடுக்கப்படுவதை அவர் உணர்ந்து கொண்டார். சிஎஸ்ஐஆர் உதவித்தொகை பெற்று நன்முறையில் படித்து வந்த சக மாணவர் ஒருவர் முக்கியமான ஒரு வாய்மொழித்தேர்வில் தோல்வியடைந்தது அவரை மிகவும் பாதித்தது. இதனை அவர் சகமாணவர்களிடம் சொல்லி வேதனையடைந்துள்ளார்.அது போன்ற ஒரு சூழ்நிலை அவருக்கும் விரைவிலேயே நேர்ந்தது. பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஓராண்டிற்கு மேலாகியும் அவருக்கு வழிகாட்டி ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. அவரது வகுப்பிலேயே அவருக்கு மட்டும்தான் வழிகாட்டுதல் இல்லாமலிருந்தது. மற்றவர்கள் அனைவருக்கும் வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். பி.எச்டி மாணவர்களின் ஆய்வுப்பயணத்தில் வழிகாட்டும் ஆசிரியர்கள் ஒவ்வொரு நிலையிலும் முக்கியமானவர்களாவர். எனவே வழிகாட்டுதல் இல்லாத செந்தில்குமார் துவக்கத்தில் சிறிது சிரமப்பட்டார். வழிகாட்டி நியமிக்கப்படாததற்கு செந்தில்குமார் தலித் என்பதைத் தவிர வேறு காரணம் ஏதும் இல்லை.இந்நிலையில் கோர்ஸ் வொர்க்(1) எனப்படும் ஆய்வுத்திட்டத்தில் உள்ள 4 பாடங்களில் ஒன்றில் செந்தில்குமார் தோல்வியடைந்தார். இப்பாடத்தை மீண்டும் அடுத்த பருவத்தில் நடக்கும் தேர்வின்போது எழுதிக்கொள்ள முடியும். மேலும் அத்தோல்வி எவ்விதத்திலும் செந்தில்குமாரின் தகுதியைக்குறைப்பதல்ல. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகமோ இத்தோல்வியைக்காரணம் காட்டி அவருக்குத் தரப்பட்டுவந்த நான்-நெட் ஃ பெல்லோஷிப் (சூடிn-நேவ கநடடடிறளாiயீ) என்ற கல்வி உதவித்தொகையை நிறுத்திவிட்டது. பல்கலைக்கழக அறிவிப்புப்பலகையில் ஒட்டப்பட்ட இத்தகவலைக்கண்ட செந்தில்குமார் வேதனையடைந்தார். இந்த உதவித்தொகை அவரது நடைமுறைச் செலவுகளுக்கு மட்டுமல்லாது, அவரது குடும்பத்திற்கும் பலவிதங்களில் உதவி வந்தது. திடீரென்று அத்தொகை நிறுத்தப்பட்டதானது அவரை நிலைகுலையச் செய்தது. (2)உதவித் தொகையை நிறுத்திய பல்கலைக்கழகத்தின் இச்செயல் உண்மையில் அதன் விதிமுறைகளுக்கே முரணானதாகும். பல்கலைக்கழக விதிமுறைகளின்படி பி.எச்டி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இடைக்காலத் தேர்வுகளில் அவர்கள் பெறும் வெற்றி, தோல்விகளைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. உதவித்தொகை வழங்கப்படுவதன் உண்மை நோக்கமே மாணவர்கள் எவ்வித சிரமமும் இன்றி உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் ஹைதராபாத் பல்கலைக்கழகமோ இதனை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு மாவர்களை தண்டித்து வந்தது. அதிலும் செந்தில்குமார் போன்ற தலித் மாணவர்களை தண்டிப்பது என்றால் கேட்கவா வேண்டும்!? மிகுந்த உவப்புடன் செய்து வந்தது.உதவித்தொகை நிறுத்தப்பட்ட சில நாட்களுக்குள்ளாகவே செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டார். பிப்ரவரி 24, 2008ல் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. அவரது மரணம் குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட முதல் தகவல், செந்தில்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை, திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால்தான் அவர் இறந்தார் என்பதாகும். தனது மதிப்பீடே சரியானது என்று அது சாதித்தது. ஆனால் பிரேத பரிசோதனை முடிவுகள் வேறுவிதமாக இருந்தன. செந்தில்குமார் விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டார் என்பதை அம்முடிவுகள் உறுதிப்படுத்தின. அவரது தற்கொலைக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டதைத் தவிர வேறு காரணங்கள் இல்லை என்பதைச் சொல்லத்தேவையில்லை. செந்தில் குமாரின் மரணத்திற்குப்பின் நீதி விசாரணை கோரி போராடிய அமைப்பு தலித் மாணவர்கள், ஆசிரியர்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக்குழுவாகும். இவ்வமைப்பில் கோரிக்கைகள் முதலில் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கண்டுகொள்ளப்படவே இல்லை. பிறகு போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த நிர்வாகம் உண்மை அறியும் குழு அமைப்பது போன்ற சில தற்காலிக நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் இதெல்லாம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்று கூறி கூட்டு நடவடிக்கைக்குழு விசாரணையைப்புறக்கணித்தது. உண்மையில் செந்தில்குமாரின் மரணத்தைத் தற்கொலை என்று சொல்வது பொருந்தாது. தகுதி, திறமை, கண்டிப்பு என்று சொல்லிக்கொண்டு தங்கள் அதிகாரத்தையும், மேலாதிக்கத்தையும் தக்கவைத்துக்கொள்ள ஆதிக்க சக்திகள் மேற்கொண்ட திட்டமிட்ட படுகொலை என்றே அதனைக் கூற வேண்டும். இத்தகைய ஆதிக்க வெறிக்கு எதிராக முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதே அவசர, அவசியத் தேவையாகும்.1. கோர்ஸ்வொர்க் பாடத்திட்டத்தில் உள்ள ஒரு பிரிவில் தோல்வியடைந்ததைக் காரணமாகக் கூறித்தான் செந்தில்குமாருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டது. கோர்ஸ்வொர்க் என்றால் என்ன? தலித் மாணவர்களை கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்றுவதற்காக உயர்கல்வி நிறுவனங்களால் இப்பாடத்திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் கிடையாது. ஒட்டுமொத்தமாக மாணவர்கள் பெறும் மதிப்பெண்களில் இருந்து ஒரு சராசரி மதிப்பெண் தேர்ந்தெடுக்கப்படும். அதற்குக் குறைவாக இருப்பவர்கள் தோல்வியடைந்தவர்களாகக் கருதப்படுவர். ஐஐடிக்களில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. உண்மையில் ஹைதராபாத் பல்கலைக்கழகம் மட்டுமே இம்முறையை பாடத்திட்டத்தில் கொண்டுவந்த அறிவியல் பல்கலைக்கழகமாகும். தனிப்பயிற்சி நிலையங்களுக்குத் தண்ணீராகப்பணத்தை இறைக்கும் `தகுதி வாய்ந்த' உயர்சாதி மாணவர்கள் பொதுவாகவே அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். முக்கியமான சராசரியைத் தீர்மானிப்பதில் இந்த மதிப்பெண்கள் பெரும்பங்கு வகிப்பதால் கஷ்டப்பட்டு 75 சதவீத மதிப்பெண் பெறும் தலித் மாணவர் கூட தோல்வியைத் தழுவுகிறார். அதுபோன்ற ஒரு நிலைதான் செந்தில்குமாருக்கும் ஏற்பட்டுள்ளது. அவர் ஒன்றும் 50 மதிப்பெண்கள் கூடப்பெறமுடியாமல் தோல்வியடைந்தவரல்ல என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.2. உதவித்தொகையை நிறுத்தும் பல்கலையின் முடிவுக்கு தலித் மாணவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து பல்கலைக்கழகம் டீன் தலைமையில் ஒரு கூட்டத்தைக் கூட்டியது. அதில் நிறுத்தப்பட்ட உதவித்தொகையை மீண்டும் வழங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பொறுப்பற்ற நிர்வாகம் இம்முடிவை செந்தில் குமாருக்குத் தெரிவிக்கவில்லை. உதவித்தொகையை நிறுத்திய செய்தியை கொட்டை எழுத்தில் வெளியிடக்காட்டிய அவசரத்தில் ஒரு இம்மியளவு இதில் காட்டியிருந்தால் கூட ஒரு உயிர் போவது தவிர்க்கப்பட்டிருக்கும் என்று மாணவர்கள் கூறுகின்றனர்.- இரா. நந்தகுமார்ஆதாரம்: எக்கனாமிக் & பொலிடிக்கல் வீக்லி கட்டுரை

No comments:

Post a Comment