Saturday, June 12, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே!


மக்களின் அடிப்படை வாழ்க்கையோடு எந்தவித சம்பந்தமும் இல்லாத மெகா சீரியல்கள், மாயாஜால பேய்க்கதைகள், நிஜம் என்ற பெயரில் அவிழ்த்து விடப்படும் பொய்கள், நடிக,நடிகைகளின் அருவெறுக்கத்தக்க நடனங்கள் என்று ‘மக்களின் ரசனை’ என்ற போர்வையில் இன்றைய காட்சி ஊடகங்கள் கல்லாப்பெட்டியை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. அதற்கு விதிவிலக்காக, சமூகப் பொறுப்புணர்வுடனும் ஊடகங்கள் செயல்பட முடியும் என்பதற்குச் சான்றாக உள்ள, விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சியின் நீயா... நானா? நிகழ்ச்சியும் ஒன்று.

இந்நிகழ்ச்சியில் அண்மையில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தும் நோக்கில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை ஒட்டி எழுந்துள்ள சூழ்நிலை குறித்த விவாதத்தைப் பார்க்க நேர்ந்தது. கட்டணத்தைக் குறைத்த அரசின் முடிவு வரவேற்கத்தக்கது; தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையை அது தடுக்கும் என்று ஒரு தரப்பும், அரசின் முடிவு அநீதியானது, அக்கிரமமானது, தமிழக மக்களின் கல்வித்தரத்தை(?) அது பாதிக்கும் என்ற ரீதியில் தனியார் பள்ளி நிர்வாகிகள் தரப்பும் வாதிட்டன. கல்விச்சேவை ஆற்றுவதற்காகத்தான் தாங்கள் பள்ளியைத் துவக்கி நடத்தி வருவதாக துவக்கத்தில் ஒலித்த பள்ளி நிர்வாகிகளின் குரல், விவாதம் வளர,வளர அப்பட்டமான வியாபாரிகளைப் போன்று மாறியது. ஒரு கட்டத்தில் தங்களை பகிரங்கமாக வியாபாரிகள் என்று அழைத்துக் கொள்ளவும் அவர்கள் தயங்கவில்லை என்பது ஆங்கில வழி தனியார் பள்ளிகள் மீது பெருமதிப்பு வைத்திருந்தவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்திருக்கும்; இருந்திருக்க வேண்டும்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலித்தால் ஆசிரியர்களுக்கு உரிய சம்பளம் தர முடியாது என்றும், அதனால் கல்வித்தரம் குறையும் என்றும் வாதிட்ட பள்ளி நிர்வாகிகள், தற்போது நீங்கள் ஆசிரியர்களுக்கு அளித்து வரும் சம்பளம் என்ன என்ற கேள்வியை எதிர்கொண்டபோது தடுமாறித்தான் போனார்கள். சுதாரித்துக்கொண்டு ரூ.15 ஆயிரம், ரூ.30 ஆயிரம் என்று சிலர் அள்ளி விட்டாலும், அதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதை அவர்களது முகமே கட்டிக் கொடுத்தது. உண்மையில் கொத்தடிமைகளை விட மோசமாகத்தான் தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களை நடத்துகின்றன என்று எதிர்த்தரப்பில் இருந்தவர்கள் வாதிட்டார்கள்.
பி.எட் முடித்தவர்களுக்கு சராசரியாக ரூ.2 ஆயிரம்தான் ( பல இடங்களில் ரூ. 1500 க்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது) தரப்படுகிறது. அதைக்காட்டிலும் குறைவான கல்வித்தகுதியுடன் கூடிய நபர்கள் மாதம் ரூ.500, ரூ.600 க்கு வேலை பார்க்க வேண்டிய அவலம் உள்ளது என்பதை சொல்லத்தேவையில்லை. உண்மை அப்படி இருக்க ஏதோ ஒரு ஞானோதயத்தில் அரசு தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஒட்டுமொத்த கல்வித்தரத்தையும் பாதிக்கும் என்பது போல் இவர்கள் பாசாங்கு செய்வது, தங்களது வணிக நலன்கள் பாதிக்கப்படுவதால் எழுந்த புலம்பலே அன்றி வேறல்ல.
மேலும் கல்வித்தரம் என்று பொத்தாம்பொதுவாக இவர்கள் கூறுவது என்ன? மனனம் செய்து தேர்வில் வாந்தி எடுத்து மதிப்பெண்களைப் பெறும் இயந்திரங்களாக குழந்தைகளை மாற்றுவதைத் தவிர இவர்கள் வேறொன்றும் செய்வதில்லை. தாய்மொழியில் பேசவே அனுமதிக்காமல், சுயசிந்தனையற்ற ஏட்டுச்சுரைக்காய்களாக மாணவர்களை உருவாக்கும் இக்கல்விக் கூடங்களை எவ்விதத்திலும் தரமானதாக ஏற்க முடியாது. 1980 களின் பிற்பகுதியில் முளைத்த இந்தக் குப்பைக்காளான்களால்தான் இன்று அரசுப்பள்ளிகளையும் 100 சதவிகித தேர்ச்சி என்ற மதிப்பெண் பைத்தியம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.
பத்துக்குப் பத்து இடத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளை அடைத்து வைத்து ‘கல்விச் சேவை’ ஆற்றி வரும் தனியார் பள்ளிகள் ஏராளமாக உள்ள நிலையில், ‘ஒரு வகுப்பறையில் 40 குழந்தைகளுக்கு மேல் அனுமதிப்பதில்லை என்றும், ‘சுகாதாரமான’, ‘விலாசமான’ வகுப்பறைகளில் குறைந்தது 4 மின் விசிறிகள் சுற்றிச் சுழன்று மாணவர்களுக்கு காற்று வீசுவதாகவும், பரந்து விரிந்த விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் துள்ளித்திரிந்து விளையாடுவதாகவும்’ ஒரு பள்ளியின் நிர்வாகி அளந்து விட்டதில் அவரது அணியைச் சேர்ந்தவர்களே கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்.
இதற்கு மறுப்பு தெரிவித்து எதிரணியினர் கருத்து தெரிவித்தபோது, தடாலடியாக ஒரு பள்ளியின் நிர்வாகி, “நான் கட்டியிருக்கும் டை முதற்கொண்டு உங்களது காசுதான்,” என்று சென்டிமென்டாகப் பணிந்தார். ஆனால் நீங்கள் காரும், பங்களாவும், டையும் வாங்கக் காசு கொடுக்கும் குழந்தைகளின் பெற்றோரை எவ்வளவு மரியாதையுடன் நடத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது அவரது தொனி முற்றிலும் வித்தியாசமாக மாறியது. ‘பள்ளி நிர்வாகிகள் பெற்றோரை உட்கார வைத்துக் கூடப் பேசுவதில்லை; சுயமரியாதையை எல்லாம் எதிர்பார்ப்பவர்கள் வேறு பள்ளிக்குச் செல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் இல்லை என்ற ரீதியில்தான் அராஜகமாக நடந்து கொள்கிறார்கள்‘ என்று ஒரு பெண் கூற ‘அப்படித்தான் செய்வோம்’ என்று அந்த நிர்வாகி முகம் சிவந்து கூறினார். அதற்கு மற்றவர்கள் என்ன கூறினார்கள் என்று தெரியவில்லை. அப்பகுதி எடிட்டிங்கில் காணாமல் போனது ஒரு குறைதான்.
விவாதத்தில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் தலைவராக உள்ள ராஜன் என்பவர் கலந்து கொண்டு பேசினார். காமராஜர் பெயரில் சென்னையில் பள்ளி நடத்தி வரும் அவர் தரம் வேண்டுமென்றால் பிள்ளைகளை கேட்கும் கட்டணத்தை வாய் பேசாமல் கொடுத்து தனியார் பள்ளிகளில் படிக்க வையுங்கள்; இல்லாவிட்டால் அரசுப்பள்ளிகளில் சேருங்கள் என்று ஆணவத்துடன் இரண்டு மூன்று முறை அவர் கூறினார். ‘நாங்கள் வியாபாரிகள்தான், வியாபாரம்தான் செய்வோம். உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள் என்ற ஏளனமும், எங்களை யார் என்ன செய்து விட முடியும் என்ற திமிரும்தானே இப்பேச்சில் தெரிகிறது? இவர்கள் ஒழுக்கத்தையும், சிறந்த எதிர்காலத்தையும் தங்கள் குழந்தைகளுக்கு அளிப்பார்கள் என்று நம்பி அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கும் மக்களின் அறியாமையை என்னென்பது? நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் பாடல் வரிகள்தான் அப்போது நினைவுக்கு வந்தது.
அந்த நெஞ்சக்குமுறல் எதிர்த்தரப்பில் இருந்து துவக்கத்திலிருந்தே உணர்ச்சிகரமாக வாதிட்டு வந்த பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் மாநில அமைப்பாளர் பிரின்° கஜேந்திரபாபுவின் ஆவேசமான குரலில் இவ்வாறாக வெளிப்பட்டது:
“கல்வித்துறையில் 2002 க்கு முன்பு இருந்த நிலை வேறு, அதற்குப் பின்புள்ள நிலை வேறு என்பதை கல்வித்துறையில் இருப்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 2002 க்கு முன்பு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுள் ஒன்றாக இருந்த கல்வி, 86 வது சட்டத்திருத்தத்திற்குப் பிறகு மக்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக மாறி விட்டது,”என்று கூறிய அவர், “இந்தச் சூழ்நிலையில் கல்விக்காக அருகில் அமைந்துள்ள பள்ளியை நாடி வரும் ஒரு மாணவனை எப்பள்ளியும் மதிப்பெண்களைக் காரணம் காட்டியோ, கல்விக்கட்டணம் செலுத்த முடியாததாலோ வெளியே அனுப்ப முடியாது. முடியா விட்டால் கார்ப்பரேசன் பள்ளியில் சேர்த்துக் கொள் என்று கூறுவது கிரிமினல் குற்றமாகும். அவ்வாறு கூறும் பள்ளி நிர்வாகி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியது எதிர்த்தரப்பை கலக்கத்திற்குள்ளாக்கியது. ஆனால் தன்னை கிரிமினல் என்று கூறிய பின்பு கூட தொனியை மாற்றிக் கொள்ளாத ராஜன், “அவருக்கென்ன பேசி விட்டுப் போய் விடுவார். ஒரு பள்ளியை நடத்திப் பார்த்தால்தான் அவருக்கு எங்கள் கஷ்டம் புரியும்,” என்றார்; கஜேந்திரபாபு ஒரு பள்ளியை நடத்தி வருவதை அறியாமலேயே! அதை கஜேந்திரபாபு கூறிய போது அவரது முகத்தில் மட்டுமல்ல, கல்வி வள்ளல்கள் யார் முகத்திலும் ஈயாடவில்லை.
கல்வி வியாபாரிகளின் அப்பட்டமான முகத்தை வெளிக்காட்டிய விவாதம், அந்த வியாபாரம் நடப்பதற்கு மூலகாரணமாக உள்ள மக்களின் அறியாமையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தன் பிள்ளை நன்றாக ஆங்கிலம் பேச வேண்டும். நல்ல மதிப்பெண் பெற்று, நல்ல வேலையில் அமர்ந்து விட வேண்டும். அதற்கு தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதுதான் சிறந்தது. போட்டி நிறைந்த உலகில் நல்ல குதிரைகளை உருவாக்குவது இத்தகைய பள்ளிகள்தான் என்று கண்ணை மூடிக்கொண்டு பிள்ளைகளை மக்கள் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதும் கல்வி வியாபாரமயமானதற்கு ஒரு காரணம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் சரியாகச் சுட்டிக்காட்டினார். சாமானிய மக்கள் அவ்வாறு செய்தால் அதை ஒருவாறாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தனியார் பள்ளிகளை நன்கு அறிந்த, அவற்றைக் கடுமையாக விமர்சிக்கும் தனது நண்பர்களே ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் நிலை இருப்பதாக வேதனை தெரிவித்தார் அவர்.
இத்தகைய முரண்பாடுகள் என்று மாறுகிறதோ அன்றுதான் கல்விமுறையிலும், சமூகத்திலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதற்கு இதுபோன்று ஆரோக்கியமான, ஏராளமான விவாதக் களங்கள் வேண்டும்.

No comments:

Post a Comment