Friday, November 27, 2009

ஹங்கேரியில் அம்பேத்கர்!


சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட போதிலும் இந்தியாவில் இன்னும் தீண்டாமைத்தீ அணையவில்லை. கீழவெண்மணிகளும், திண்ணியங்களும், கயர்லாஞ்சிகளும் தீண்டாமைக் கொடுமையின் உச்சகட்டத்தைக் காட்டின. உத்தப்புரங்களும், செட்டிப்புலங்களும் அந்த அவலத்தின் மிச்ச சொச்சங்கள் இன்னும் துடைத்தெறியப்படவில்லை என்பதை உணர்த்துவனவாக உள்ளன. தலித் மக்களின் வாழ்நிலை இன்னும் மோசமாகவே உள்ளது. அவர்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கான போராட்டங்களும் மார்க்சி°ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் முற்போக்கு சக்திகளால் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் வாழும் ரோமர்கள்(சுடிஅயள) என்ற ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் உரிமைக்கான போராட்டங்களை அம்பேத்கரிய முறையில் நடத்துவதாகக் கூறுகின்றனர். ஜிப்சி மக்கள் என்று அழைக்கப்படும் ரோமர் இன மக்கள் வட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாவர். ஐரோப்பிய நாடுகளில் இந்திய தலித் மக்களைப் போன்றே கடுமையான ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டலுக்கும் இவர்கள் ஆட்பட்டு வருகிறார்கள். பொதுவாக நாடோடி வாழ்க்கைமுறையை மேற்கொண்டிருந்த ரோமர் இன மக்கள் ஐரோப்பாவின் முக்கிய சிறுபான்மையினராவர். உலகம் முழுவதும் சுமார் 1.2 கோடி ரோமர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஐரோப்பாக் கண்டத்தில் மட்டும் 80 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கிய சிறுபான்மையினராக இருந்த போதிலும் அவர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக் கூட பெற முடியாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆதிக்கம் நிறைந்த ஐரோப்பிய வெள்ளை இனத்தவரின் இன ரீதியான கொடுமைகளும், காரணமற்ற வெறுப்புகளும் தொடர்கதையாக உள்ளதாகக் கூறுகிறார்கள்.
ஹங்கேரி நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ரோமர் இன மக்களின் பங்கு 7 சதவிகிதமாகும். அங்கும் புறக்கணிப்புகளும், ஒடுக்குமுறைகளும் மட்டுமே இவர்களுக்கு பரிசாகக் கிடைக்கின்றன. அந்நாட்டின் சஜோகாசா(ளயதடிமயணய) என்ற கிராமத்தில் வசிக்கும் பாதிப்பேர் ரோமர்கள்தான். ஆனால் அவர்கள் நமது தலித் மக்கள் போன்று கிராமத்தின் வெளிப்பகுதியில் இருக்கும் சேரி போன்ற பகுதிகளில்தான் வசிக்க வேண்டியுள்ளது. மற்ற இனத்தவருடன் சேர்ந்து இல்லாமல் பிரத்யேகக் குடியிருப்புகளிலேயே வசிக்கின்றனர். அந்த குடியிருப்புகளுக்கு அருகில் குடிநீர்க் குழாய்கள் இல்லை; தெருவிளக்குகள் இல்லை; அதேபோல் முறையான சாக்கடை வசதிகளும் இல்லை. ஆனால் அதற்கு அடுத்தாற்போல இருக்கும் ஐரோப்பியக் குடியிருப்புகளில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஒரு காலத்தில் அருகில் உள்ள சுரங்கங்களில் பெரும்பாலான ரோமர் இன மக்கள் பணியாற்றி வந்ததாகவும், ஆனால் இப்போது யாருக்கும் வேலையில்லை என்றும் அவர்கள் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். அரசு தரும் சிறிய அளவிலான உதவித்தொகையைக் கொண்டே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இன்னும் ரோமர் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் தனி வகுப்பறைகளில் இருந்துதான் கல்வி கற்க வேண்டியுள்ளது. மேலும் பல இடங்களில் அவர்களுக்கு என்று தனிப்பள்ளிகளே இயங்கி வருகின்றன. இந்த தனிப்பள்ளிகளில் உள்ள வசதிகள் பற்றி கூற வேண்டியதில்லை. மற்ற ஐரோப்பியர்கள் படிக்கும் பள்ளிகளுடன் ஒப்பிடுகையில் அவற்றில் வசதி குறைவாகவே உள்ளது. மேலும் அங்குள்ள தேவாலயங்களில் ரோமர்களுக்கு அனுமதியில்லை. இவை அம்மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைப் போக்கில் இந்திய தலித் மக்கள் போன்றே இன்னல்களைச் சந்தித்து வருவதை உணர்த்துவனவாக உள்ளன.
இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அம்மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஹங்கேரி நாடாளுமன்ற உறுப்பினரான டெர்டாக் டைபர் என்பவர் ரோமர் இனத்தைச் சேர்ந்தவராவார். சமூகவியலாளருமான அவர் தங்கள் இன மக்களின் வாழ்நிலையை மாற்றுவதற்கான போராட்டங்களில் முன்னிலையில் இருக்கிறார். தங்கள் இன மக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகள் பற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்:
“கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹங்கேரியப் பள்ளிகளில் ரோமர் இன மாணவர்களுக்கு தனி டம்ளர்களும், தட்டுக்களும் இருந்தன. பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அம்முறை ஒழிக்கப்பட்டது. எங்கள் பிள்ளைகள் இனவெறி காரணமாக தொடர்ச்சியான அவமானங்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகி வருகின்றனர். மனரீதியில் வளர்ச்சியடையாதவர்கள் என்று கூறி தனிப்பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். ஹங்கேரியில் இயங்கி வரும் இதுபோன்ற தனிப்பள்ளிகளில் பயிலும் 90 சதவிகித மாணவர்கள் ரோமர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மாணவர்கள் மட்டுமே புறக்கணிக்கப்படுவதில்லை. கடந்த 2003 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ரோமர் இனப் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள தனி பிரசவ வார்டுகளும் (ஜிப்சி ரூம் என்ற பெயரில்) உள்ளன என்பது தெரிய வந்தது’’.
இவ்வாறு கூறும் டைபர் கடந்த 2005 மற்றும் 2007 ம் ஆண்டுகளில் இந்தியா வந்துள்ளதாகக் கூறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர் இந்திய தலித் மக்களின் நிலையுடன் தங்கள் நிலை ஒத்துப்போவதாகக் கூறுகிறார். மேலும் தலித் மக்களின் விடுதலைக்காக போராடிய அம்பேத்கரின் கொள்கைகள் (குறிப்பாக அம்பேத்கரின் புத்தமதக் கொள்கைகள்) தங்களை ஈர்த்துள்ளதாகவும் கூறுகிறார். இவரும் மற்றொரு ரோமர் இனத் தலைவர் ஓர்சோ° ஜானோ° என்பவரும் தற்போது அம்பேத்கரிய வழியில் தங்களது உரிமைக்கான போராட்டங்களை நடத்தி வருவதாகக் கூறுகின்றனர்.
ரோமர் இன மக்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளின் உச்சகட்டம் ஏற்கனவே பொதுப்புத்தியில் பதிய வைக்கப்பட்ட எண்ணங்களாகும். ஜிப்சி இன மக்கள் குறித்து ஏராளமான வதந்திகள் மற்றும் தவறான கருத்துகள் ஐரோப்பாவில் பரப்பப்பட்டுள்ளன. ரோமர்கள் அல்லது ஜிப்சி மக்கள் என்றாலே அவர்கள் கண்டிப்பாக பிறரை ஏமாற்றுபவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும், திருடர்கள், வழிப்பறி செய்பவர்கள், நாடோடிகள், பிச்சைக்காரர்கள், அழுக்கான சூழ்நிலையில் வாழும் மக்கள் என்று ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டுவதாகக் கூறும் இணையதளங்களும் “ஜிப்சி மக்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!’’ என்று கூறத் தவறுவதில்லை. இத்தனை இன்னல்களையும் எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில்தான் அவர்கள் உள்ளனர்.
ஆதாரம்: தி இந்து (நவ.22,2009)

No comments:

Post a Comment