Wednesday, May 20, 2009

தேனீக்கள் தேனை உறிஞ்சுவது எப்படி?ஆய்வில் புதிய தகவல்கள்




மலர்களில் இருந்து தேனீக்கள் எவ்வாறு தேனைச் சேகரிக்கின்றன என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
மலர்களில் எவ்வாறு தேனீக்கள் அமர்கின்றன என்பது இந்த ஆய்வின் முக்கிய அம்சமாகும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி பிவர்லி க்ளோவர் என்பவர் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இதில் மலர்களின் இதழ்களில் உள்ள செல்களின் அமைப்பு தேனீக்கள் தேனை உறிஞ்ச மிகவும் உதவுவதாகத் தெரியவந்துள்ளது. மலர்களின் இதழ்களில் கூம்பு வடிவிலான செல்கள், தட்டையான செல்கள் என இருவகை செல்கள் காணப்படுகின்றன. இவற்றில் கூம்பு வடிவ செல்கள் சிறிது சொரசொரப்பான மேற்பரப்பைக் கொண்டுள்ளன. எனவே தேனீக்கள் இச்செல்களின் மீது அமரும்போது தடுமாற்றம் இன்றி உறுதியாக அமர முடிகிறது. இதில் வியப்பான தகவல் என்னவென்றால் தேனீக்களின் கால்களின் அமைப்பு கூம்பு வடிவச் செல்களில் அமர்வதற்கேற்ப தகவமைக்கப்பட்டுள்ளதாம்! அதாவது தேனீ இச்செல்களின் மீது அமரும் போது ஏறக்குறைய ஒட்டிக் கொள்கிறது. இது பைகளை மூடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சொர சொரப்பான மற்றும் பஞ்சு போன்ற அமைப்பை (ஏநடஉசடி) ஒத்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால் தட்டைச் செல்கள் வழுக்கும் தன்மையுடையவை. இவற்றில் அமர பெரும்பாலும் தேனீக்கள் விரும்புவதில்லை. விஞ்ஞானிகளின் இந்த ஆய்வில் ஒரு வகை ரெசினால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் கூம்பு வடிவ செல்களும், தட்டை செல்களும் மலர்களில் உள்ளது போலவே அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் தேனீக்களை அப்பகுதியில் விட்டு ஆய்வு நடத்தப்பட்டது. தேனீக்கள் என்ன செய்கின்றன என்பது அதிவேக வீடியோவில் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டது.
பூக்கள் சாய்வாக இல்லாமல் நேரான நிலையில் வைக்கப்பட்டிருந்த போது தேனீக்கள் இருவகை மலர்களிலும் சரிசமமாக அமர்ந்தன. தட்டைச் செல்களைப்பற்றியோ, கூம்பு வடிவ செல்களைப் பற்றியோ அவை கவலை கொள்ளவில்லை. ஆனால் பூக்களின் கோணம் மாற்றப்பட்டு சாய்வாக வைக்கப்பட்டபோது கூம்பு வடிவ செல்களை உடைய பூக்களில் அமர்வதையே தேனீக்கள் விரும்பின. 74 சதவீதம் அவை கூம்பு செல்களிலேயே அமர்ந்தன.
தேனீக்கள் தட்டைச் செல்களை உடைய மலர்களில் அமரும்போது மிகவும் தடுமாறினவாம். அது பனிக்கட்டிகளில் வீரர்கள் ஸ்கேட்டிங் செய்வதைப் பார்ப்பது போன்று இருப்பது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தேன் சேகரிப்பது உண்மையில் கடினமான பணி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இயற்கை அதிக சிரமத்தை அவற்றுக்குக் கொடுப்பதில்லை. உலகில் உள்ள மலர்களில் சுமார் 80 சதவீத மலர்கள் கூம்பு வடிவ செல்களைக் கொண்டிருக்கின்றன. தேனீக்கள் மட்டுமல்ல பட்டாம்பூச்சிகள், வண்டுகள் உள்ளிட்ட மற்ற பூச்சியினங்களும் இதேபோல்தான் தேன் உறிஞ்சுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment