
ஆந்திர மாநிலப் பகுதியில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் சில பழங்குடி இன மக்கள் பேசும் மொழிகளுக்கான வரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியின் ஒலியமைப்புக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த எழுத்துக்களை உருவாக்கியவர் ஆந்திர பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பிரசன்ன ஸ்ரீ என்பவர். கடந்த 19 ஆண்டுகளாக முயன்று அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தைக் கண்டுபிடித்ததுதான் மனித குலத்தின் நாகரிக வாழ்வைத் துவக்கி வைத்தது என்பது மானுடவியல் அறிஞர்கள் கூற்று. அந்த வகையில் இப்பழங்குடி மக்கள் அவர்களுக்குச் சொந்தமான நாகரிகத்தை உருவாக்கிக் கொள்ள பேராசிரியர் பிரசன்ன ஸ்ரீ வாய்ப்பளித்துள்ளார் என்று கூறலாம்.