மனிதன் வென்றான்! மனித குலம் தோன்றிய காலம் முதல் மனிதன் கொண்டிருந்த ஆசைகளுள் ஒன்று தான் பறக்க வேண்டும் என்பது. பறவைகளைப் போலத்தானும் பறக்க முடிந்தால் பலவற்றைச் சாதிக்கலாம் என்ற கனவை அவன் கொண்டிருந்தான்.இக்கனவுகள் கதைகளில் அல்லது புராணங்களில் வெளிப்பட்டுள்ளதை நாம் காண முடியும் கிரேக்கப் புராணங்களில் கூறப்பட்ட ஐகாரஸ் மெழுகினால் செய்யப்பட்ட இறகுகளைக் கொண்டு பறந்ததாகவும், சூரியனுக்கு அருகில் சென்ற போது மெழுகு உருகியதால் அவன் கீழே விழுந்ததாகவும் ஒரு கதை உண்டு. அதே போல இந்தியப் புராணங்கள் கருடன், அனுமன் உள்ளிட்ட பறக்கும் சக்தியுடைய கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளன. இது ஒருபுறமிருக்க நடைமுறையில் இதைச் சாத்தியமாக்கப் பலர் முயன்றனர். தன் தோள்களோடு மரத்தாலான இறகுகளைக் கட்டிக்கொண்டு குதித்தார் ஆலிவீர் என்பவர். முயற்சி தோல்வியுற்றது; அதன் பரிசு மரணம்! ஆயினும் தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்தகட்ட முயற்சியானது வீரத்தைத் தவிர்த்து விவேகத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. பிரெஞ்சுக்காரர்களான மான்ட்கோபயர் சகோதரர்கள் (Montgofier Brothers) பலூனைக் கண்டறிந்தனர். கூடையுடன் கூடியதாகப் பின்னால் அமைக்கப்பட்ட பலூன்களின் முன்னோடியாகும். இது இப்பலூனில் நெருப்பிலிருந்து வெளிவரும் வாயுவை அவர்கள் பயன்படுத்தினர். 1783 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரெஞ்சு அரச குடும்பத்தின் முன்னிலையில் அவர்கள் வெப்பக்காற்று பலூனைப் பறக்க விட்டனர். இதன் அடுத்தக் கட்டமாக ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆகாயக்கப்பல்கள் 1850 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. ஆனால் ஹைட்ரஜன் பலூன்கள் எளிதில் தீப்பிடித்து விபத்தினை உண்டாக்கும் ஆபத்துடையனவாய் இருந்தன.
உலகை மாற்றிய அற்புத வீரர்கள்:
1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் நாள் ஒரு குறிப்பிடத்தக்க பெருமையைக் கொண்டு விடிந்தது. ஆம்... அன்றுதான் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற பெயர்களைக் கொண்ட ரைட் சகோதரர்கள் தங்கள் கண்டுபிடிப்பை உலகிற்குக் காண்பித்தனர். அவர் உருவாக்கிய அந்த ஆகாய விமானம் அன்று 36 மீட்டர்கள் தூரத்திற்கு 62 வினாடிகள் பறந்தது. உலகம் ஆச்சரியத்தில் மூழ்கியது. அன்றுவரை மனிதன் பறப்பதற்காகப் பயன்படுத்திய பொருட்கள் அல்லது கண்டு பிடிப்புகள், காற்றைவிட இலேசான பொருட்கள்தான் காற்றில் மிதக்க அல்லது பறக்க முடியும் என்ற தத்துவத்தை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன. ஆனால் முதன்முதலாகக் காற்றைவிட கனமான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது அவ்விமானம். துணி மற்றும் குச்சிகள் கொண்டு உருவாக்கப்பட்டது அது. எனவே அது ஒரு அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் கருதப்பட்டதில் வியப்பில்லை. அதிசயம் என்பதையும் தாண்டி அதனை ஒரு தொழிட்நுட்பமாகப் பார்க்கும் வேலையை அன்றைய அறிவியல் செய்ததன் பயனாய் இன்று ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் பல்வேறு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் வானில் உலா வருகிறது.
எவ்வாறு விமானம் பறக்கிறது?
"பெர்னாலியின் தத்துவம்" (Bernauli's Principle)காற்றில் அதைவிட கனமான ஒரு பொருள் எவ்வாறு மிதக்க பறக்க முடியும்? இதற்கு விடைகாண நாம் பெர்னாலியிடம் போவோம். "பாய் பொருட்களின் (வாயு மற்றும் திரவம்) ஓட்டம் அதாவது காற்றோட்டத்திலோ அல்லது நீரோட்டத்திலோ வேகம் குறைவாயிருக்கும் போது அழுத்தம் அதிகமாகவும், வேகம் அதிகமாயிருக்கும் போது அழுத்தம் குறைவாகவும் இருக்கிறது." இத்தத்துவமே ஆகாய விமானம் காற்றில் எழும்பக் காரணமாகும். ஆகாய விமானத்தின் இறகுகளுக்கு மேற்புறத்தில் மிகன் வேகமாகக் காற்றைச் செலுத்தும்போது அங்கே அழுத்தம் குறைகிறது; வெளிக்காற்றில் அழுத்தம் அதைக்காட்டிலும் அதிகம். எனவே வெளிக் காற்று விமானத்தை உயர்த்துகிறது. இதற்கு இறகுகளின் சிறப்பான வடிவமைப்பும் ஒரு காரணமாகும். இவ்வாறு பறத்தலின் முதல்கட்டம் நிறைவேறுகிறது. இது உயர்தல் (Lifting) என்று அழைக்கப்படுகிறது. இதில் பெறும் வெற்றி மட்டுமே மனிதனின் பறக்கும் கனவை நிறைவேற்றி விட முடியாது. ஊடுருவிச் செல்லல் (thrust) என்ற அடுத்த நிலையில் பறத்தலுக்கு மிகவும் அவசியமான காற்றோட்டம் செலுத்தப்படுகிறது. இக்காற்றோட்டம் இறகுகளை உயர்த்தி முன்னோக்கிப் பறத்தலுக்கு உதவி செய்கிறது. இதற்கு முன் இயக்கி (propeller) பயன்படுத்தப்படுகிறது. விமானத்தின் பாகங்களை அறிந்து கொள்வது இதனை நாம் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். விமானத்தின் இறகுகள் மேற்புறம் வளைவாகவும், அடிப்புறம் தட்டையாகவும் இருக்குமாறு அமைக்கப்படுகின்றன. இறகுகளின் இச்சிறப்பான வடிவமைப்பின் காரணமாக காற்று வீசும் பொழுது இறகுகளின் மேற்புறத்தில் வேகம் அதிகமாகவும், அடிப்புறத்தில் வேகம் குறைவாகவும் இருக்கும். பெர்னாலி கோட்பாட்டின் படி, இதன்காரணமாக மேற்புறம் அழுத்தம் குறைவாகவும், கீழ்ப்புறம் அழுத்தம் அதிகமாகவும் இருக்கும். இவை இரண்டும் இணைந்து செயல்படுவதால் விமானம் மேலே தூக்கப்படுகிறது. விமானத்தின் மற்றுமொரு முக்கியமான பாகம் அதன் ப்ரொபல்லர் ஆகும். ஜெட் விமானங்களில் இப்பாகம் இருக்காது. அது மற்றொரு முறையில் செயல்படுகிறது. அதைப்பின்னால் காண்போம். propeller- ஐ ஒரு பெரிய விசிறி என்று சொல்வதில் தவறு ஏதும் இல்லை. இது வளைவாக உள்ள தகவல்களைக் கொண்டுள்ளது. அவை காற்றைக் கிழித்துச் செல்லும் வண்ணம் கூர்மையாக இருக்கம். இவற்றின் வளைந்த தன்மை கிழிக்கப்படுகின்ற காற்றைப் பின்னுக்குத் தள்ளுகிறது. தள்ளப்பட்ட இக்காற்றானது விமானத்தை முன்னுக்குத் தள்ளுகிறது. இது நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியை அடிப்படையாகக் கொண்ட தாகும். நாம் எல்லோரும் நன்கு அறிந்த ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பதாகும் அது. முன்-இயக்கி காற்றைப் பின் தள்ளுவதை வினை என்போம். இங்கு எதிர்வினையானது காற்று. அதனைத் தள்ளுவதாகும். இதன் காரணமாக விமானம் முன் செல்கிறது.
ஜெட் விமானங்கள்: ஜெட் விமானங்களும் நியூட்டனின் மூன்றாம் விதியைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் புரொப்பல்லர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. ஜெட் என்ஜின்கள் காற்றை, உள்ளிழுக்கின்றன. இதற்குப் பல்வேறு தகடுகளாலான ஒரு அமைப்பு உதவுகிறது. இழுக்கப்பட்ட காற்றானது ஒரு கலத்தில் சேகரிக்கப்பட்டிருக்கும் எரி பொருட்கலவை (fuel mixture) யுடன் கலந்து அதை எரியச் செய்கிறது. எரியும்போது, வெளிப்படும் காற்று மிகுந்த வேகத்துடன் வெளியிடப் படுகிறது. எந்த அளவுக்கு வேகத்துடன் காற்று வெளியிடப்படுகிறதோ, அவ்வளவு வேகத்துடன் விமானம் முன்னோக்கிச் செல்கிறது. இந்த முறையிலேயே விண்கலங்களும் (Rockets) செல்கின்றன. இத்தகு முறையில் செயல்படும் விமானங்கள் இரண்டாம் உலகப்போரின் போது முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டன. அதற்கு முன் இருந்த அனைத்து விமானங்களும் புரொப்பல்லர்-ஐப் பயன்படுத்தியே இயக்கப்பட்டன.இங்கு விமானம் பறப்பதைப் பற்றிய அடிப்படையான சில தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன. விமானத் தொழில் நுட்பமானது மிகவும் சிக்கலானதும் (complicated and challenging), சவால் நிறைந்ததும் ஆகும். இது மறுக்க முடியாத உண்மையாகும். ஆயினும் மனித மூளை இதனை வென்றுள்ளது. இன்னும் அத்தொழில்நுட்பம் என்பது இவ்வளவு சிக்கலாக இல்லாமல் மேலும் எளிமையானதாக ஆக்கப்படவும் கூடும்.
This is my first ever science article;published in KALAIKATHIR.
No comments:
Post a Comment