Saturday, March 14, 2009

வேளாண் வர்த்தகம்: தேவை அரசு கண்காணிப்பு!

ந.இராதாகிருஷ்ணன்
விவசாயம் சார் தொழிற்துறை மக்கள் நலனை மனதில் கொள்ளாமல் வெறும் இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கி வருகிறது என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று. வீரிய ரகப்பயிர்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் என்று புதிய, புதிய பெயர்களில் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை தொடர்ந்து விரிவாக்கி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் 26 விஞ்ஞானிகள் மற்றும் சில பூச்சியியல் அறிஞர்கள் அந்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையிடம் அண்மையில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தனர். தாங்கள் உருவாக்கும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு வேளாண் வர்த்தக நிறுவனங்கள் அறிவு சார் சொத்துரிமை (யீயவநவே சiபாவள) பெற்று விடுவதால் அந்த ரகப் பயிர்களைத் தங்களால் சுதந்திரமாக ஆய்வு செய்ய முடிவதில்லை என்று அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பது இதுதான்: "மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் முக்கிய பிரச்சனையான விவசாய ஆராய்ச்சிகளில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையும் தெளிவான வழிகாட்டுதல்களும் இல்லை. இலாப வெறி கொண்ட பன்னாட்டு உயிரியல் தொழில் நுட்ப நிறுவனங்கள் சிலருக்கு வரைமுறையற்ற அளவில் ஆராய்ச்சிக்கு பண உதவி செய்து தங்களுக்கு விருப்பமான முறையில் பயிர்களை உருவாக்குகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்ட ரகங்களில் விஞ்ஞானிகள் சுதந்திரமாக ஆய்வு மேற்கொள்ள முடிவதில்லை. இத்தகு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமே ஒரு ரகம் சிறந்த பலன்களைக் கொண்டதா, மக்களுக்கு நன்மை பயப்பதா என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இதற்கு கம்பெனிகள் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றன. அதே வேளையில் அக்கம்பெனிகள் அவர்களது கண்டுபிடிப்புகளை பெரும் முன்னேற்ற முள்ளவை என்றும் இலாபகரமானவை என்றும் கூறிக் கொள்கின்றன. போதுமான ஆய்வுகள் நடத்தப்படாமல் ஒரு பயிர் சிறந்தது என்று எப்படித் தீர்மானிக்க முடியும்?" இதுவே அவர்களது கேள்வியாகும். இது உண்மையிலேயே மிகவும் நியாயமான வாதமாகும். பொது சுகாதாரத்துறையில் மருந்து கம்பெனிகளின் தலையீடு மருத்துவர்களிடையே முரண்பட்ட ஆர்வங்களையும், ஒழுங்கீனங்களையும், ஊழலையும் ஏற்படுத்தி இருப்பதை அறிவோம். இதை கட்டுப்படுத்தி பொது மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஒரு மருந்து நிறுவனம் கண்டறிந்த மருந்தை தர நிர்ணய சோதனைகளுக்கு உட்படுத்தி அதன் பின்னரே மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் தேவையான சமயத்தில் கிடைக்க செய்ய வேண்டிய பொறுப்பும் அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும் கடமையும் அரசுக்கு இருக்கிறது. ஏறக்குறைய வேளாண் வர்த்தக நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இதே போன்ற நடைமுறைகளைத்தான் அரசு கடைப்பிடிக்க வேண்டும். பல்வேறு தாவர இனங்களை வளர வொட்டாமல் தடுத்து அவைகளின் இருத்தலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை வேரறுப்பதும் மக்களுக்கு உணவு உத்தரவாதம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசர அவசியத்தேவையாகும். பன்னாட்டு கம்பெனிகளில் இலாபநோக்கத்தை மேலும் வளர்த்தெடுக்கும் விதத்தில் அறிவியல் ஆய்வுகளை நடத்தி பரிந்துரைகளை வெளியிட்டு வரும் விவசாய பல்கலைக்கழக விஞ்ஞானிகள், விவசாயத்துறை உயர் அதிகாரிகள் மீது தொடர் கண் காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். பொதுமக்களின் நல வாழ்வுக்கு வேளாண் துறையில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள் மீது அறிவியல் அறிஞர்கள் சுதந்திரமாக ஆய்வு செய்வது அவசியம். தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கே அதிகளவில் அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஆனால் அவை உணவுப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதோடு பல்வேறு எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துபவையாகும். திசு வளர்ப்பு முறை, பல்லுயிர்ப் பாதுகாப்புக்கு உறுதி நல்கும் விவசாய நடைமுறைகள் ஆகியவை மரபணு மாற்றுப் பயிர் வகைகளுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தால் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. இவற்றுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதும் அரசின் இன்றியமையாத கடமையாகும்.

No comments:

Post a Comment