தொலைத்தொடர்புத் துறையில் மிகபெரும் புரட்சியை ஏற்படுத்திய வேர்ல்டுவைடு வெப் (றுறுறு) என்று அழைக்கப்படும் வலைத்தளம் கண்டறியப்பட்டு மார்ச் 13ம் தேதியோடு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
1989ம் ஆண்டு மார்ச் மாதத்தில் டிம் பெர்னர்ஸ் லீ என்ற இளைஞர் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் (செர்ன்) ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். " தகவல் மேலாண்மை-ஒரு திட்ட அறிக்கை" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த அறிக்கையே வலைத்தளங்களுக்கான முன்மாதிரி வரைபடமாக மாறியது. டிம் பெர்னர்ஸ் லீ அப்போது செர்ன் மையத்தின் அணுத்துகள் ஆராய்ச்சி நிலையத்தில் மென்பொருள் வல்லுனராக இருந்தார். அங்கு நூற்றுக்கணக்கான அறிவியலறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பணிபுரிந்தனர். அவர்களின் ஆய்வு முடிவுகளை ஒருங்கிணைப்பதும், அதை ஒப்பிட்டு ஆய்வு செய்வதும் செர்ன் மையத்திற்கு மிகுந்த சவாலாக இருந்தது. மேலும் ஒவ்வொரு ஆய்வாளரும் தனித்தனியாக தங்கள் சொந்தக் கணினிகளைக் கொண்டு வந்து ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால் அங்கு ஒரு கடினமான சூழல் நிலவியது. டிம் லீ தான் ஆய்வாளர்களின் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்தார். முதலில் சில மென்பொருட்கள் மூலம் இதைச் செய்த அவர் கணினிகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணியதன் விளைவே வலைத்தளமாக (வெப்) உருமாறியது. வெற்றி அவருக்கு எளிதாகக் கிடைத்து விடவில்லை. செர்ன் மையத்தின் கணினி வல்லுனர் ராபர்ட் கெய்லியாவுடன் இணைந்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் 1990ம் ஆண்டு டிசம்பர் 25 அன்றுதான் வெற்றியைப் பெற்றுத்தந்தன. அதன் பிறகும் டிம் லீ ஆய்வாளர்கள், அறிவியலறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களிடமும் விரிவான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 13 அன்று டிம் லீ, கெய்லியா மற்றும் அவர்களது சக தோழர்கள் செர்ன் ஆய்வு மையத்தில் கூடி வலைத்தளத்தின் பிறந்த நாளைக் கொண்டிடாடினர். •
No comments:
Post a Comment