Wednesday, May 20, 2009

சிந்துவெளி மக்களின் மொழி!




சிந்துச்சமவெளி நாகரிகம் ஆரியர்களுடையது என்று காவிக் கூட்டம் சர்ச்சைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அது திராவிடர் நாகரிகமே என்பதைப் பறைசாற்றும் பல்வேறு ஆதாரங்கள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது சிந்துச் சமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்திய குறியீடுகள், எழுத்துருக்கள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
சிந்துச் சமவெளி நாகரிக மக்கள் பயன்படுத்தியவை வெறும் குறியீடுகள் மட்டுமே என்றும், அவற்றில் ஒரு மொழிக்குரிய கட்டமைப்பு இல்லை என்றும் சிலர் வாதாடி வந்தனர். அக்குறியீடுகளை இதுவரை யாரும் விளக்கிச் சொல்லாதது அவர்களது வாதத்திற்குச் சாதகமாக இருந்தது. ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள ஒரு ஆய்வு அவர்களது வாதங்களைத் தவிடு பொடியாக்கியுள்ளது. சிந்துச்சமவெளி மக்கள் பயன்படுத்திய குறியீடுகள் மொழிக்கான அடிப்படைக்கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் அந்த மொழியும், ஆதிகாலத் தமிழ் மொழி வடிவத்தோடு பலவகைகளில் ஒத்துப்போகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால் சிந்துச்சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே என்பது மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழக கணினி அறிவியலாளர் ராஜேஷ் பி.என்.ராவ், மும்பை டாடா அடிப்படை ஆய்வு மையத்தைச் சேர்ந்த வானியல் துறை வல்லுனர்கள் நிஷாயாதவ்மற்றும் மாயங்க் என்.வாஹியா, மும்பையைச் சேர்ந்த மென்பொருள் வல்லுனர் ரிஷிகேஷ் ஜோக்லேகர், சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் ரோனோஜோய் அதிகாரி மற்றும் சென்னையில் உள்ள சிந்துவெளி நாகரிக ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஜராவதம் மகாதேவன் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். நவீன புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சிந்துச் சமவெளி எழுத்துருக்கள் பல்வேறு மொழி வடிவங்களோடு ஒப்பீடு செய்யப்பட்டன. சுமேரிய சித்திர எழுத்துருக்கள், ஆதிகால தமிழ் எழுத்துருக்கள், சமஸ்கிருத எழுத்துருக்கள், ஆங்கில வார்த்தைகள் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் ஆகியவற்றோடு சிந்து எழுத்துக்கள் ஒப்பிடப்பட்டன. எழுத்துக்களின் கோர்வையில் உள்ள ஒழுங்கற்ற தன்மை (entropy)குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வை இன்னும் துல்லியப்படுத்தும் நோக்கில் தற்போது நடைமுறையில் இருக்கும் மொழிகள் அல்லாத சில வடிவங்களோடும் (மனித டி.என்.ஏ.குறியீடுகள், பாக்டீரியாவின் புரதக்குறியீடுகள், ஃபோர்ட்ரான் என்ற கணினி மொழி ஆகியவை) சிந்து எழுத்துக்கள் ஒப்பிடப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில் சிந்து எழுத்துக்கள் மொழிக்கான கட்டமைப்பைக் கொண்டுள்ளன என்பது உறுதியானது. மேலும் மற்ற மொழி வடிவங்களைக் காட்டிலும் ஆதிகால தமிழ் மொழியின் எழுத்துருக்களோடு அவை மிகவும் பொருந்திப் போகின்றன என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது சிந்துச்சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதை உறுதிப்படுத்துவதாக ஆய்வு மேற்கொண்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் `சயின்ஸ்' அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன. சிந்துவெளி நாகரிக எழுத்துக்களைப் பற்றி தற்போது பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் இது குறித்து இன்னும் பல உண்மைகள் வெளிவரக்கூடும்.
இரா.நந்தகுமார்

No comments:

Post a Comment