அமெரிக்க அரசின் கொடுஞ்சிறையான குவாண்டனாமோவில் நடைபெறும் சித்ரவதைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து அதிர்ச்சி தரும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் `தீவிரவாதத்திற்கு எதிரான போர்' என்ற பெயரில் நடத்திய பேரழிவுத் தாக்குதல்களின் போது அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகள் பெரும்பாலானோர் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறை பற்றி ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்கள் உலகில் மிக மோசமான முறையில் மனித உரிமைகள் மீறப்படும் இடம் என்று தெரிவித்தன. மேலும் அமெரிக்க ராணுவதத்தினர் கைதிகளை சித்ரவதைக்கு உள்ளாக்கும் காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியளித்தன. இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து பாரக் ஒபாமா அதிபராகப் பதவியேற்றார். புஷ் ஆட்சிக் காலத்தில் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் அரங்கேறிய இச்சிறையை தான் ஆட்சிக்கு வந்ததும் மூடப்போவதாக ஒபாமா வாக்குறுதி அளித்தார். ஆனால் வாக்குறுதி வாக்குறுதியாகவே நீடிக்கிறது. சிறையை மீட எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ராணுவக் கட்டுப்பாட்டிலேயே சிறை தொடர்ந்து நிர்வகிக்கப்படும் என்றும் அதை மீடும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார். விதிவிலக்காக சில குறிப்பிட்ட சில கைதிகளுக்கு மட்டும் விடுதலையும், வேறு சிலருக்கு நீதிமன்ற விசாரணையும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் கைதிகளிடம் ராணுவத்தினர் `விசாரணை'(?) நடத்தியபோது எடுக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று அவர் தடை விதித்து விட்டார். அவை ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை அம்பலமாக்கிவிடும் என்பதால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குவாண்டனாமோ சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஸ்பெயின் நாட்டின் குழு ஒன்று நடத்திய விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன.
சொல்லவே முடியாத வகையில் சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுகின்றனர். அங்கு கடுமையான சித்ரவதைகளை நிறைவேற்றுவதற்கு என்றே ஒரு சிறப்புப்படை உள்ளதாம். ஐ ஆர் எப் (Immediate Reaction Force) என்று அழைக்கப்படும் இப்படையினர் குறித்து இதுவரை எந்தவிதத் தகவல்களும் வெளியே கசிய விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஊடகங்களும் இது குறித்து வாயே திறக்கவில்லை.
சித்ரவதைகளையும், கொடூரதண்டனைகளையும் நிறைவேற்றுவதற்கென்றே இப்படையினர் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனராம். விசாரணையின் போது சிறிது அலட்சியமாக கைதி பதில் சொல்லி விட்டால் போதும், அதற்காகவே காத்திருந்தது போல் ஐஆர்எப் படையினர் உள் நுழைந்து விடுவார்கள். ஒரு கைதிகள் உடலில் உள்ள பல்வேறு பாகங்களையும் இப்படையில் உள்ள ஒவ்வொருவரும் பரித்துக் கொண்டு அப்பகுதியில் மட்டும் குறிவைத்து அடிப்பார்களாம்.
மேலும் உணவு தராமல், கைதிகளைத் தூங்கவும் விடாமல் இருண்ட பாதாளச் சிறைகளில் அடைத்து துன்புறுத்துவது கைதிகளின் தலையை டாய்லெட் பேசின்களில் வைத்து அழுத்துவது, கூரிய ஆயுதங்களால் கண்களைக் குத்துவது, கைதிகளின் மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்துவது என்று அவர்களின் சித்ரவதைகள் நீண்டுகொண்டே போகின்றன. கைதிகளை நாயை விடக் கேவலமாக நடத்துங்கள் என்று ஒரு உத்தரவே அங்கு உள்ளதாம்.
விசாரணையின்போது ஒத்துழைக்காத கைதிகள் என்றில்லை. வேண்டுமென்றே கைதிகளிடம் வம்பு செய்து அதற்கு அவர்கள் சிறிது கோபமானால் கூட உடனடியாக ஐஆர்எப் படையிடம் அனுப்பி விடுவார்களாம். பெரும்பாலும் இஸ்லாம் மதம் குறித்து அவதூறாகப் பேசி கைதிகளைக் கோபமடையச் செய்து பின்னர் துன்புறுத்துவதாக ஸ்பெயின் குழுவின் அறிக்கை கூறுகிறது.
எந்த வித தாமதமும் இன்றி குவாண்டனாமோ சிறையை மூடுவதே இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
No comments:
Post a Comment