கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் சைபீரியா பகுதிக்கு மேலே விண்வெளியில் ஒரு பயங்கர விபத்து நடந்தது. மோதிக்கொண்டவை இரண்டு செயற்கைக் கோள்கள். ஒன்று அமெரிக்காவின் இரிடியம் 33 என்ற வர்த்தக செயற்கைக்கோள். மற்றொன்று செயல்பாட்டை நிறுத்திவிட்ட ரஷ்யாவின் செயற்கைக்கோள் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து விண்வெளிக் குப்பைகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருவது குறித்து நாம் மிகுந்த கவலைப்படுகிறோம். ஏறக்குறைய இதே போன்று விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. முன்னர் கோள்களை ஆராயவும், விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளவும் மட்டும்தான் செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டன. ஆனால் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வர்த்தக நோக்கில் ஏராளமான செயற்கைக்கோள்கள் அனுப்பப்படக் காரணமாகியுள்ளது. விண்வெளித்துறையே வணிகமயமாகி விட்டது என்று கூடச் சொல்லலாம். இவ்வாறு அனுப்பப்படும் செயற்கைக் கோள்கள் நீண்ட காலத்திற்கு இயங்குபவையல்ல. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அவை செயல்படும். பின்னர் எவ்விதப் பயனுமின்றி அவை விண்வெளியில் சுற்றி வரும். கோள்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை காரணமாக எவ்வித எரிபொருள்களின் தேவையும் இன்றி அவை விண்வெளியில் சுற்றி வருகின்றன.
செயற்கைக் கோள்கள் மட்டுமல்ல. விண்வெளி வீரர்கள் பயன்படுத்தி தூக்கி எரியும் கழிவுப்பொருட்கள், ராக்கெட்டுகளை விண்வெளியில் செலுத்திப்பின் அப்படியே விண்வெளியில் தங்கி விடும் எரிபொருட்கலன்கள், செயற்கைக் கோள்களில் இருந்து வெடித்துச் சிதறிய பகுதிகள், சிறிய திருகாணிகள் என அனைத்துமே விண்வெளிக் குப்பைகளாகும். விண்வெளியில் அவை ஏராளமாக உள்ளன. சாலையில் உள்ளது போன்று போக்குவரத்து நெரிசல் அங்கு இல்லையென்றாலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து யோசிக்காவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அவை மாறிவிடும் ஆபத்து உள்ளது. அதாவது கோடிக்கணக்கில் செலவு செய்து அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய பொருள் இழப்பு ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதற்குக் காரணம் அவை சுற்றி வரும் வேகமாகும். அவை வினாடிக்கு சராசரியாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றன. அதிகபட்ச வேகம் 16 கி.மீ. ஆகும்.
சாலையில் செல்லும் வாகனங்கள் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லும் போதே நாம் மிகுந்த வேகத்தில் செல்வதாகக் கூறுகிறோம். அப்படிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் அதோ கதிதான்! ஆனால் ஒரு மணிக்கு சராசரியாக 57,600 கி.மீ. வேகத்தில் செல்லும் போது மோதிக்கொண்டால் என்ன நடக்கும்? நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது அல்லவா? ஆம். வெறும் 10 கிராம் அளவுள்ள ஒரு திருகாணி ஒரு செயற்கைக்கோள் மீது மோதினாலே அது ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். வளர்ந்த நாடுகளின் நிலை பரவாயில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்களது தேசிய மொத்த வருவாயிலிருந்து பெரும் தொகையைச் செலவு செய்து செயற்கைக் கோள்களை அனுப்பி வருகின்றன. அப்படியிருக்கும்போது இது போன்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன ஆகும்?
விண்வெளியில் நெரிசல் ஏற்படுவதற்கு நீண்ட காலம் ஆகாது. அண்மையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ள ஒரு தகவல் கண்களால் காணக்கூடிய அளவில் சுமார் 17 ஆயிரம் கழிவுகள் விண்வெளியில் உள்ளதாகக் கூறுகிறது. கண்காணிப்புக் கருவிகளால் காண முடியாத கழிவுகளின் எண்ணிக்கை குறித்து யாராலும் சரியாகச் சொல்ல முடியவில்லை. விண்வெளி விஞ்ஞானிகளின் கணிப்பின்படி 150 மில்லியன் துண்டுகளுக்கும் மேல் விண்வெளியில் கழிவுகள் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதனால் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள நாடுகள் இது குறித்து கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன. விண்வெளிக் கழிவுகளைக் குறைப்பதற்கான சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அறிவியலாளர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. செயற்கைக் கோள்கள் செயலிழப்பதற்கு முன்பே அதிக உயரத்திற்கு அனுப்புவது மற்றும் தொழில்நுட்பத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துவது என்பவை பரிசீலனையில் உள்ள யோசனைகளாகும். ஆனால் பொருட்செலவு அதிகம் ஆகும் என்பதாலும் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட அதிக காலம் தேவைப்படும் என்பதாலும் விரைவில் இந்த யோசனைகள் சாத்தியமாக வாய்ப்பு இல்லை என்கின்றனர் அறிவியலாளர்கள்
No comments:
Post a Comment