புவி வெப்பமடைதல் காரணமாக கடல்நீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று அறிவியலறிஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல் காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து நாள்தோறும் புதிய, புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியளித்த வண்ணம் உள்ளன. கடல்நீரின் அமிலத்தன்மை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட கருத்தும் அவ்வகையைச் சேர்ந்ததுதான். ஜெர்மனி நாட்டின் பான் நகரில் பல்வேறு நாடுகளின் தேசிய அறிவியல் கழகங்களின் மாநாடு நடந்து வருகிறது. ஜுன் 1ம் தேதி துவங்கிய இம்மாநாடு வரும் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் முக்கிய விவாதப்பொருள் புவி வெப்பமடைதல் காரணமாக கடல்நீரில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியதாகும். உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 70 நாடுகளின் அறிவியற் கழகங்கள் இதில் பங்கேற்றுள்ளன. வரும் டிசம்பர் மாதம் கோப்பன்ஹெகன் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா.வின் சுற்றுச்சூழல் மாநாட்டில் புவி வெப்பமடைதலைச் சமாளிப்பது குறித்து புதிய ஒப்பந்தம் போடப்படுகிறது. அதில் கடலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்த தீர்மானங்களைச் சேர்க்க வேண்டும் என்று இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
புவி வெப்பமடைதல் எவ்வாறு கடல் நீரை பாதிக்கிறது? அறிவியலறிஞர்கள் கூறும் விளக்கம் இதுதான்: கரியமிலவாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) உள்ளிட்ட பசுங்கூட வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகரிப்பதே புவி வெப்பமடைதலுக்குக் காரணமாகும். குறிப்பாக கரியமில வாயு அதிகளவில் வெளியேறுகிறது. இவ்வாறு வெளிப்படும் அவ்வாயு கடல் நீரால் உள்வாங்கப்படுகிறது. இதன் பின்னர் அவற்றிற்கிடையே நடக்கும் சில வேதிவினைகள் கடல்நீருக்கு அமிலத்தன்மையைத் தருகின்றன. இதுவரை சிறிய அளவில் ஏற்பட்டு வந்த இவ்வினை, புவி வெப்பமடைதலால் அதிகளவில் நிகழ்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததை விட கடல்நீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாக மாறிவருகிறது என்கிறார்கள் அவர்கள்.
இவ்வாறு திடீரென அமில-காரச் சமநிலை(pH) பாதிக்கப்படுவதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. புதிய சூழல் அவை உயிர்வாழத்தகுதியுடையதாக இருக்குமா என்பது ஆய்வுக்குரிய ஒன்றாகும். மேலும் கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் உடலில் ஓடுடைய கடல்வாழ் உயிரிகள் வித்தியாசமான பிரச்சனையைச் சந்திக்கின்றன. அவற்றின் ஓடுகள் அரிக்கப்படும் அபாயம் உள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கிளாம் (clam) என்று அழைக்கப்படும் ஒருவகை ஓட்டு மீன் (shell fish) ஆர்க்டிக் கடலில் வசிக்கிறது. அக்கடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் 2060ம் ஆண்டு வாக்கில் கிளாம் மீன் பெரும் அபாயத்தைச் சந்திக்கும் என்று சில கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இதனால் கடல் வாழ் உயிரினங்களின் உணவுச்சங்கிலியில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று அறிவியலறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு ஏற்பட்டால் உயிரினங்கள் பெரும் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
கடல் நீரில் ஏற்படும் இந்த அதிரடி மாற்றம் மீளாத்தன்மை கொண்டது (irreversible) என்று கூறும் அறிவியலாளர்கள், இதனைச் சரி செய்ய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவை என்று எச்சரிக்கிறார்கள். இதனால் கரியமிலவாயு உள்ளிட்ட பசுங்கூட வாயுக்கள் வளிமண்டலத்தில் கலப்பதை மிகுந்த அக்கறை எடுத்து கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் கடமை என்று அவர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment