Tuesday, July 7, 2009

வரலாறு படைத்தார் ரோஜர் பெடரர்!



சாதனைகள் நிகழ்த்தப்படுவதே முறியடிக்கப்படுவதற்காகத்தான் என்று ஒரு முதுமொழி உண்டு. அந்த வகையில் பீட் சாம்ப்ராஸ் என்ற மகத்தான டென்னிஸ் வீரர் 7 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்திய 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பெடரர் என்ற மற்றொரு மகத்தான வீரர் தற்போது 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று வரலாறு படைத்துள்ளார்.
123 வது விம்பிள்டன் போட்டியின் இறுதியாட்டத்தில் அமெரிக்க வீரர் ஆண்டி ராடிக்கின் கடுமையான சவாலை 5-7, 7-6 (6), 7-6 (5), 3-6, 16-14 என்ற புள்ளிக்கணக்கில் முறியடித்து இந்த வெற்றி மகுடத்தைச் சூடியுள்ளார் பெடரர்.
சாதாரண வெற்றி பெறுவதற்கே கடும் முயற்சி அவசியம். அப்படியிருக்க, சாதனை வெற்றி பெறுவதென்றால்....? இல்லை. வாத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வகையில் இந்த இறுதியாட்டம் இருந்தது. ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்ற வகையில் பெடரரும், ராடிக்கும் விளையாடினார்கள். போட்டியின் பல கட்டங்களில் பெடரரைக் காட்டிலும் ராடிக்கே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி வரை அவர் தனது சர்வீசையே இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதன் முறையாக அவர் இழந்த சர்வீஸ் பெடரரின் வெற்றிப்புள்ளியாக மாறி விட்டது.
ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் வென்ற ராடிக், இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்தினார். இருவருமே 6-6 என்று சமநிலையில் இருந்ததால் டை-பிரேக்கர் முறையில் அந்த செட் தீர்மானிக்கப்பட்டது. டைபிரேக்கரில் முதலில் ராடிக்தரான் சிறப்பாக விளையாடினார். பெடரரின் சர்வீஸ்களை எளிதில் முறியடித்த அவர் 6-2 என்று முன்னிலையில் இருந்தார். ஒரு புள்ளி எடுத்திருந்தால் அந்த செட் அவர் கைவசம் வந்திருக்கும் என்ற நிலையில் பெடரர் ஆவேச ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்ன நடந்தது என்று மற்றவர்கள் (எதிராளி உட்பட) யோசிக்கும் முன்பாகவே அவர் புள்ளிகளைக் குவித்து, அந்த செட்டைக் கைப்பற்றினார். இதுதான் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானித்த நிகழ்வாகும். இதன் பிறகு அதே டை-பிரேக்கர் முறையில் 3 வது செட்டையும் கைப்பற்றிய பெடரர் 3-6 என்ற புள்ளிக்கணக்கில் 4 வது செட்டை இழந்தார்.
விம்பிள்டன் போட்டிகளில் இறுதி செட்டான 5 வது செட் டை-பிரேக்கர் முறையில் தீர்மானிக்கப்படுவதில்லை. எனவே, இதில் இருவரும் 6 புள்ளிகளை எடுத்த பின்பும் ஆட்டம் நீண்டு கொண்டே சென்றது. இருவரும் தங்களது சர்வீசை இழக்காமல் இருந்ததால், யார் மற்றவரது சர்வீசை முறியடிக்கிறாரோ அவர் வெற்றி பெறுவார் என்ற நிலை இருந்தது. ஆனால் அது விரைவில் நடைபெறும் சாத்தியக்கூறு இருப்பதாகவே தோன்றவில்லை. 3 1/2 மணி நேரம் விளையாடிய பின்பும் களைப்படையாமல் இருந்த இருவரும் நாட்கணக்கில் கூட விளையாட தாங்கள் தயார் என்பது போல விளையாடிக் கொண்டே இருந்தனர். டெரரைப் பொறுத்தவரை அவரது சர்வீஸ் மிகச்சிறப்பாக இருந்தது. எதிராளியால் தொட முடியாத `ஏஸ்' களை அவர் 50 முறை போட்டார். (விம்பிள்டன் சாதனையை நிகழ்த்தியவர் குரோஷிய வீரர் இவோ கார்லோவிச் - 51 ஏஸ்கள்) எனவே அவர் ராடிக்கின் ஒரு சர்வீஸை முறியடித்தாலே வெற்றி பெற்று விடுவார் என்ற நிலை இருந்தது. கடந்த 2004 மற்றும் 2005 ம் ஆண்டுகளில் பெடரரிடம் விம்பிள்டனை இழந்திருந்த ராடிக் இந்த முறை எப்படியும் வென்று விடுவது என்ற ரீதியில் விடாப்பிடியாக விளையாடினார். மிகச்சிறந்த வீரரான அவர் இதுவரை ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைத் தான் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. (யுஎஸ் ஓபன்- ஆண்டு) மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றிந் இறுதியாட்டத்தில் நுழைந்திருந்த சுவர் ஆவேசமாகவும், துடிப்புடனும் விளையாடினார்.
ஆனால் வரலாற்றைத் தள்ளிப்போடும் அவரது முயற்சி பெடரரின் முன்பு நீண்ட நேரம் பலிக்கவில்லை. போட்டியின் 77 வது கேமில் ராடிக் செய்த தவறு பெடரரின் வெற்றிக்குக் காரணமாகியது. இப்போது இல்லாவிட்டால் எப்போதும் இல்லை என்ற ரீதியில் உறுதியுடன் விளையாடிய பெடரர் இறுதியாக வென்றுவிட்டார்.
கடந்த மே மாதம் நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் வெற்றி பெற்ற பெடரர் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். ஆனால் இந்த முறை ஒரு பெரிய கடமையை நிறைவேற்றி முடித்த மகிழ்ச்சியும் திருப்தியும் அவரது முகத்தில் தெரிந்தது. ஆனால் வார்த்தைகளில் அதே எளிமை இருந்தது. "இது மிகவும் சந்தோஷமான உணர்வு. ஆனால் நான் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக விளையாடவில்லை. ஆனால் அதே வேளையில் இச்சாதனையைப் படைத்திருப்பது சிறப்பானது தான்", இந்த எளிமைதான் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. போட்டியைக் காண- தனது சாதனை முறியடிக்கப்படுவதைக்காண கலி போர்னியாவிலிருந்து வந்திருந்த பீட் சாம்ப்ராஸ் பெடரரின் இந்த எளிமையான பண்பைப்பாராட்டினார். "பெடரர் ஒரு பிதாமகன் தற்போது அவர் டென்னிஸ் விளையாட்டின் உருவகமாக மாறியுள்ளார். இப்பொழுதுதான் அவருக்கு வயது 27. எனவே அவர் இன்னும் பலமுறை இங்கும் (விம்பிள்டன்) மற்ற போட்டிகளிலும் வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. 18 அல்லது 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அவர் வெல்லக்கூடும்," என்றார் சாம்ப்ராஸ்.

No comments:

Post a Comment