Monday, July 27, 2009

ஆழிப்பேரலையிலிருந்து விடுதலை?



டிசம்பர் 26, 2004.... இத் தேதியை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஆம்... அன்றுதான் சுனாமி என்று அழைக்கப்படும் ஆழிப்பேரலையின் சீற்றத்தில் சிக்கி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட அலையே சுனாமியாக மாறி இப்பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
இயற்கையை மனிதன் முற்றிலுமாக வென்று விடவில்லை என்பதை எடுத்துக்காட்டுவது போன்று சுனாமியின் கோரத்தாண்டவம் இருந்தது. இத்தகைய பேரிடர் ஏற்படப் போவதை விஞ்ஞானிகளால் முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. சுனாமியால் நிகழ்ந்த இப்பெரும் சோகத்தை விதியின் திருவிளையாடல் என்றும், கடவுளின் கோபம் என்றும் பலர் பலவாறாக கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் அறிவியல் எப்போதும் போல் சத்தமில்லாமல் தனது கடமையைச் செய்து கொண்டிருந்தது. அறிவியலறிஞர்களின் இடைவிடாத இந்த ஆராய்ச்சியின் பலனாய் தற்போது சுனாமியை முன்கூட்டியே கண்டறிவதில் குறிப்பிடும்படியான தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்ட ரேடார் கருவிகளைக் கொண்டே ஏற்படப் போகும் சுனாமியைக் கண்டறியலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விஞ்ஞானி காடின் என்பவர் தலைமையிலான அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுனாமி அலை ஏற்படும்போது கடல் நீரின் மேற்பரப்பின் தன்மை மாறி விடும் என்பது கண்டறியப்பட்டது. இதுநாள் வரை சுனாமி அலைகள் ஏற்படுவதை நீரின் தன்மையை வைத்துக் கண்டறிய முடியாது என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் அந்த நம்பிக்கையை இந்த ஆய்வு தகர்த்துள்ளது. கடந்த 1994 ம் ஆண்டு ஹவாய் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள், பேரலை ஏற்பட்டபோது கடலில் மிகப்பெரிய நிழல் ஏற்பட்டதைக் காட்டின. இதேபோல் 1996 ம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமியின்போது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களும் ஒருவகையான நிழல் ஏற்பட்டதைக் குறிப்பிட்டிருந்தன. இந்த அம்சத்தை காடின் தலைமையிலான ஆய்வாளர்கள் கூர்ந்து கவனித்தனர். 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இதனை அவர்கள் நேரில் உறுதி செய்தனர். இந்த அம்சம் போன்றே கடல் நீரின் தன்மையிலும் அடிப்படையான சில மாறுபாடுகள் ஏற்பட்டதை அவர்கள் கண்டனர்.

"சுனாமியின் முன்னோடி அலை கரையை நோக்கி முன்னேறும்போது கடல் நீரை பெருமளவில் கலக்குகிறது(stir). அப்போது கடல் நீரின் வண்ணம் அடர்த்தியாவதுடன் கடினத்தன்மையும் ஏற்படுகிறது. இந்தக் கடின நீரே அலைக்கு இணையான நிழலை கடலில் ஏற்படுத்துகிறது" என்று தங்கள் ஆய்வுரையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிழலின் அளவு ஏற்படும் சுனாமியின் வேகத்தையும் வலிமையையும் பொறுத்தது. இந்த நிழலை விண்வெளியில் சுற்றி வரும் ரேடார் கருவிகளைக் கொண்டு காண முடியும் என்பதால் எதிர்காலத்தில் உயிர்களைக் காக்க இம்முறை பயன்படக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர். "மைக்ரோவேவ் ரேடார்கள் என்று அழைக்கப்படும் நுண்ணலை ரேடார் கருவிகள் புவியைச் சுற்றி வருகின்றன. இவற்றால் பல கிலோமீட்டர் தூரம் பரந்த கடலின் மேற்பரப்பைத் துல்லியமாக கண்டுணர முடியும். கடலின் மேற்பரப்பைக் கண்டறிவதற்கென்றே பிரத்யேக மென்பொருட்களை இவற்றில் உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் சுனாமியை முன்கூட்டியே எளிதில் கண்டறிய முடியும்,"என்று காடின் கூறுகிறார்.
தற்போதைய நிலையில் சுனாமியை முன்கூட்டியே கண்டறிய இரண்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்று கடல் நீரின் அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகளைக்கொண்டு சுனாமியைக் கண்டறிவதாகும். பசிபிக் பெருங்கடல் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இந்த முறையிலேயே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. "டார்ட்"(Deep ocean Assesment and Reporting of Tsunamis)) என்று அழைக்கப்படும் இம்முறையில் பயன்படுத்தப்படும் கருவிகள் கடலில் குறிப்பிட்ட இடங்களில் அமைந்திருக்கும். பசிபிக் பெருங்கடல் முழுவதும் மொத்தம் 39 இடங்களில் இதற்கான மையங்கள் உள்ளன. கடல் நீரில் ஏற்படும் அழுத்த மாறுபாடுகளைக் கணக்கிடும் இக்கருவிகள் சுனாமி ஏற்படும் சிறிது நேரத்திற்கு முன் எச்சரிக்கை விடுக்கும். இந்த முறை துல்லியமான ஒன்று.
மற்றொரு முறை கடல் நீரின் உயரத்தை அளக்கும் கருவிகளைக் கொண்டு(altimeter)
சுனாமியைக் கண்டறிவதாகும். விண்வெளியில் உள்ள சில செயற்கைக்கோள்களில் இதற்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த முறை அவ்வளவு துல்லியமானதல்ல என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

No comments:

Post a Comment