10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரும் காலங்களை கவனித்திருப்பீர்கள். முடிவு வெளிவந்து மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்தபின்பு மாணவர்கள் வீட்டுக்குப் போகிறார்களோ இல்லையோ, நேராக வேலைவாய்ப்பு அலுவலகங்களைத் தேடி ஓடுவது தமிழகத்தில் வழக்கமான காட்சியாக உள்ளது. வேலை கிடைக்கிறதா என்பது வேறு விஷயம். பதிவு செய்து கொண்டால் நல்லதுதானே; எப்போதாவது ஒருநாள் உதவும் என்ற எண்ணத்தில் இந்தப்பதிவுகள் செய்யப்படுகின்றன. இதில் குறை கூற எதுவும் இல்லை. நிரந்தர வேலை கிடைக்காதா என்ற ஏக்கமும், பரிதவிப்புமே இதற்குக் காரணம். நிலைமை இவ்வாறு இருக்க, மன்மோகன் அரசு திடீரென வேலைவாய்ப்பகங்களை `நவீன' மயப்படுத்துவது குறித்து யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறைக்கான இணையமைச்சர் ஹரீஸ் ராவத், இனிமேல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாணவர்களுக்கான கலந்தாய்வுக் கூடங்களாகச் செயல்படும் என்று கூறியிருக்கிறார்.
"பல்வேறு துறைகளிலும் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையிலான கலந்தாய்வு மையங்களாக இனிமேல் வேலைவாய்ப்பகங்கள் செயல்படும். இனிமேல் வேலைவாய்ப்பகங்களில் அதிகளவில் கலந்தாய்வுகள்தான் நடைபெறும்", இவ்வாறு கூறியுள்ள அவர், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் பகாசுர நிறுவனமான நௌக்ரி. காம் (சூயரமசi.உடிஅ) உள்ளிட்டவற்றோடு இணைந்து செயல்படும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்றிருக்கிறார். அதாவது இந்த `நவீன மயமாக்கும்' பணி அரசு, தனியார் கூட்டுடன் (ஞரடெiஉ-ஞசiஎயவந- ஞயசவநேசளாiயீ) செயல்படுத்தப்படுமாம்.
இது வேலைவாய்ப்பகங்களைத் தனியார் மயப்படுத்துவதற்கான திட்டமேயன்றி வேறல்ல. ஏற்கனவே வேலைவாய்ப்பகங்கள் நலிவடைந்த நிலையில்தான் உள்ளன. தமிழகத்தை எடுத்துக்கொண்டால் கடந்த 1985 ம் ஆண்டு வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 10 லட்சமாக இருந்தது. அப்போது பணியாற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை 1150 ஆகும். ஆனால் தற்போது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 65 லட்சம். இது 1985 உடன் ஒப்பிடுகையில் 6.5 மடங்கு அதிகம். ஆனால் தற்போது வேலைவாய்ப்பகங்களில் பணியாற்றுவோர் எண்ணிக்கை வெறும் 528 தான். போதுமான ஊழியர்களை நியமனம் செய்யாமல் நவீனமயப்படுத்துவது குறித்து யோசிப்பது விந்தையாகத்தான் உள்ளது.
இரண்டாவதாக `பலதுறைகளிலும் உள்ள வாய்ப்புகளை' மாணவர்களுக்கு எடுத்துக் கூறும் கலந்தாய்வுக் கூடமாக வேலை வாய்ப்பகங்கள் செயல்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது, 'வழிகாட்டுதலுடன்' அவற்றின் கடமை முடிந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேலைவாய்ப்பகம் என்பது வேலையைக் காட்டுவதுடன், அதனைப் பெற்றுத்தருவதாகவும் இருக்க வேண்டும். வேலையை அடையாளம் காட்டுவதுடன் தனது பொறுப்பு கழிந்தது என்று கூறுவதாக இருக்கக் கூடாது.
இதுவரை 4 1/2 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டுக் காத்திருப்பதாக அமைச்சரே தனது பேட்டியில் கூறியிருக்கிறார். அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான வகையில் நிரந்தரப்பணியை ஏற்படுத்தித் தருவது குறித்துதான் கவலைப்பட வேண்டுமே தவிர வேறு எதையும் அரசு யோசிக்கக் கூடாது. இதுவரை வேலைவாய்ப்பகங்களில் இலவசமான சேவைதான் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு, பதிவுமூப்பு குறித்த செய்திகளை மாவட்ட ஆட்சியர்கள் வழங்கும் போது `வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இலவச சேவைதான் வழங்கப்படுகிறது. இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என்று கேட்டுக் கொள்வதைக்கூட இதுவரை நாம் கண்டிருக்கிறோம். இந்நிலையில் இதிலும் தனியார் கூட்டை அனுமதித்தால் அது பெரும் கொள்ளைக்கே வழி வகுக்கும். ஒவ்வோராண்டும் பெயர்களைப் பதிவு செய்வதற்காகக் குவியும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பார்த்து, அதில் கிடைக்கும் லாபத்தை கணக்குப்போட்டே தனியார் இதில் ஈடுபட முன் வந்திருக்க வேண்டும். அதற்கு அரசும் துணை போவதுதான் வேதனையானதாகும்.
நிதி இல்லையா?அண்மையில் மாநிலங்களவையில் பேசிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால் நாட்டில் இன்னும் 275 மாவட்டங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அரசால் துவங்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். `போதுமான நிதி இல்லை' என்ற வழக்கமான பல்லவியைப் பாடியே இவர்கள் அரசு-தனியார் கூட்டுறவையும், அதன் மூலம் மறைமுகமாக தனியார் மயத்தையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அரசின் நிதி வரவைப் பெருக்க ஏராளமான வழி வகைகள் உள்ளன. ஆனால் அதை வேண்டுமென்றே வீணடித்துக் கொண்டு, திரும்பத்திரும்ப தனியார் மயம் வேண்டுமென்று அரசு அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக மத்திய பட்ஜெட்டையே எடுத்துக்கொள்ளலாம். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் (2009-10), வருமான வரி செலுத்துவோருக்கான 10 சதவீத சர்சார்ஜ் நீக்கப்பட்டுள்ளது. இது ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளோருக்கே பலனைத்தருமே தவிர சாதாரண ஏழை மக்களுக்கு இதன் மூலம் எந்த நன்மையும் இல்லை. மேலும் அரசுக்கு இதனால் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும். இந்த 10 ஆயிரம் கோடி ரூபாயை இழக்காமல் வசூலித்தால் எதற்காக தனியாருடன் கூட்டு சேருவதைப் பற்றி யோசிக்க வேண்டும்?
No comments:
Post a Comment