Saturday, March 28, 2009

ஆகாய விமானம் எவ்வாறு செயல்படுகிறது?

மனிதன் வென்றான்! மனித குலம் தோன்றிய காலம் முதல் மனிதன் கொண்டிருந்த ஆசைகளுள் ஒன்று தான் பறக்க வேண்டும் என்பது. பறவைகளைப் போலத்தானும் பறக்க முடிந்தால் பலவற்றைச் சாதிக்கலாம் என்ற கனவை அவன் கொண்டிருந்தான்.இக்கனவுகள் கதைகளில் அல்லது புராணங்களில் வெளிப்பட்டுள்ளதை நாம் காண முடியும் கிரேக்கப் புராணங்களில் கூறப்பட்ட ஐகாரஸ் மெழுகினால் செய்யப்பட்ட இறகுகளைக் கொண்டு பறந்ததாகவும், சூரியனுக்கு அருகில் சென்ற போது மெழுகு உருகியதால் அவன் கீழே விழுந்ததாகவும் ஒரு கதை உண்டு. அதே போல இந்தியப் புராணங்கள் கருடன், அனுமன் உள்ளிட்ட பறக்கும் சக்தியுடைய கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளன. இது ஒருபுறமிருக்க நடைமுறையில் இதைச் சாத்தியமாக்கப் பலர் முயன்றனர். தன் தோள்களோடு மரத்தாலான இறகுகளைக் கட்டிக்கொண்டு குதித்தார் ஆலிவீர் என்பவர். முயற்சி தோல்வியுற்றது; அதன் பரிசு மரணம்! ஆயினும் தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்தகட்ட முயற்சியானது வீரத்தைத் தவிர்த்து விவேகத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. பிரெஞ்சுக்காரர்களான மான்ட்கோபயர் சகோதரர்கள் (Montgofier Brothers) பலூனைக் கண்டறிந்தனர். கூடையுடன் கூடியதாகப் பின்னால் அமைக்கப்பட்ட பலூன்களின் முன்னோடியாகும். இது இப்பலூனில் நெருப்பிலிருந்து வெளிவரும் வாயுவை அவர்கள் பயன்படுத்தினர். 1783 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரெஞ்சு அரச குடும்பத்தின் முன்னிலையில் அவர்கள் வெப்பக்காற்று பலூனைப் பறக்க விட்டனர். இதன் அடுத்தக் கட்டமாக ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆகாயக்கப்பல்கள் 1850 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. ஆனால் ஹைட்ரஜன் பலூன்கள் எளிதில் தீப்பிடித்து விபத்தினை உண்டாக்கும் ஆபத்துடையனவாய் இருந்தன.
உலகை மாற்றிய அற்புத வீரர்கள்:
1903 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் நாள் ஒரு குறிப்பிடத்தக்க பெருமையைக் கொண்டு விடிந்தது. ஆம்... அன்றுதான் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற பெயர்களைக் கொண்ட ரைட் சகோதரர்கள் தங்கள் கண்டுபிடிப்பை உலகிற்குக் காண்பித்தனர். அவர் உருவாக்கிய அந்த ஆகாய விமானம் அன்று 36 மீட்டர்கள் தூரத்திற்கு 62 வினாடிகள் பறந்தது. உலகம் ஆச்சரியத்தில் மூழ்கியது. அன்றுவரை மனிதன் பறப்பதற்காகப் பயன்படுத்திய பொருட்கள் அல்லது கண்டு பிடிப்புகள், காற்றைவிட இலேசான பொருட்கள்தான் காற்றில் மிதக்க அல்லது பறக்க முடியும் என்ற தத்துவத்தை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன. ஆனால் முதன்முதலாகக் காற்றைவிட கனமான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது அவ்விமானம். துணி மற்றும் குச்சிகள் கொண்டு உருவாக்கப்பட்டது அது. எனவே அது ஒரு அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் கருதப்பட்டதில் வியப்பில்லை. அதிசயம் என்பதையும் தாண்டி அதனை ஒரு தொழிட்நுட்பமாகப் பார்க்கும் வேலையை அன்றைய அறிவியல் செய்ததன் பயனாய் இன்று ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் பல்வேறு மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் வானில் உலா வருகிறது.
எவ்வாறு விமானம் பறக்கிறது?
"பெர்னாலியின் தத்துவம்" (Bernauli's Principle)காற்றில் அதைவிட கனமான ஒரு பொருள் எவ்வாறு மிதக்க பறக்க முடியும்? இதற்கு விடைகாண நாம் பெர்னாலியிடம் போவோம். "பாய் பொருட்களின் (வாயு மற்றும் திரவம்) ஓட்டம் அதாவது காற்றோட்டத்திலோ அல்லது நீரோட்டத்திலோ வேகம் குறைவாயிருக்கும் போது அழுத்தம் அதிகமாகவும், வேகம் அதிகமாயிருக்கும் போது அழுத்தம் குறைவாகவும் இருக்கிறது." இத்தத்துவமே ஆகாய விமானம் காற்றில் எழும்பக் காரணமாகும். ஆகாய விமானத்தின் இறகுகளுக்கு மேற்புறத்தில் மிகன் வேகமாகக் காற்றைச் செலுத்தும்போது அங்கே அழுத்தம் குறைகிறது; வெளிக்காற்றில் அழுத்தம் அதைக்காட்டிலும் அதிகம். எனவே வெளிக் காற்று விமானத்தை உயர்த்துகிறது. இதற்கு இறகுகளின் சிறப்பான வடிவமைப்பும் ஒரு காரணமாகும். இவ்வாறு பறத்தலின் முதல்கட்டம் நிறைவேறுகிறது. இது உயர்தல் (Lifting) என்று அழைக்கப்படுகிறது. இதில் பெறும் வெற்றி மட்டுமே மனிதனின் பறக்கும் கனவை நிறைவேற்றி விட முடியாது. ஊடுருவிச் செல்லல் (thrust) என்ற அடுத்த நிலையில் பறத்தலுக்கு மிகவும் அவசியமான காற்றோட்டம் செலுத்தப்படுகிறது. இக்காற்றோட்டம் இறகுகளை உயர்த்தி முன்னோக்கிப் பறத்தலுக்கு உதவி செய்கிறது. இதற்கு முன் இயக்கி (propeller) பயன்படுத்தப்படுகிறது. விமானத்தின் பாகங்களை அறிந்து கொள்வது இதனை நாம் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். விமானத்தின் இறகுகள் மேற்புறம் வளைவாகவும், அடிப்புறம் தட்டையாகவும் இருக்குமாறு அமைக்கப்படுகின்றன. இறகுகளின் இச்சிறப்பான வடிவமைப்பின் காரணமாக காற்று வீசும் பொழுது இறகுகளின் மேற்புறத்தில் வேகம் அதிகமாகவும், அடிப்புறத்தில் வேகம் குறைவாகவும் இருக்கும். பெர்னாலி கோட்பாட்டின் படி, இதன்காரணமாக மேற்புறம் அழுத்தம் குறைவாகவும், கீழ்ப்புறம் அழுத்தம் அதிகமாகவும் இருக்கும். இவை இரண்டும் இணைந்து செயல்படுவதால் விமானம் மேலே தூக்கப்படுகிறது. விமானத்தின் மற்றுமொரு முக்கியமான பாகம் அதன் ப்ரொபல்லர் ஆகும். ஜெட் விமானங்களில் இப்பாகம் இருக்காது. அது மற்றொரு முறையில் செயல்படுகிறது. அதைப்பின்னால் காண்போம். propeller- ஐ ஒரு பெரிய விசிறி என்று சொல்வதில் தவறு ஏதும் இல்லை. இது வளைவாக உள்ள தகவல்களைக் கொண்டுள்ளது. அவை காற்றைக் கிழித்துச் செல்லும் வண்ணம் கூர்மையாக இருக்கம். இவற்றின் வளைந்த தன்மை கிழிக்கப்படுகின்ற காற்றைப் பின்னுக்குத் தள்ளுகிறது. தள்ளப்பட்ட இக்காற்றானது விமானத்தை முன்னுக்குத் தள்ளுகிறது. இது நியூட்டனின் மூன்றாவது இயக்க விதியை அடிப்படையாகக் கொண்ட தாகும். நாம் எல்லோரும் நன்கு அறிந்த ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பதாகும் அது. முன்-இயக்கி காற்றைப் பின் தள்ளுவதை வினை என்போம். இங்கு எதிர்வினையானது காற்று. அதனைத் தள்ளுவதாகும். இதன் காரணமாக விமானம் முன் செல்கிறது.
ஜெட் விமானங்கள்:
ஜெட் விமானங்களும் நியூட்டனின் மூன்றாம் விதியைப் பயன்படுத்துகின்றன. இவற்றில் புரொப்பல்லர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. ஜெட் என்ஜின்கள் காற்றை, உள்ளிழுக்கின்றன. இதற்குப் பல்வேறு தகடுகளாலான ஒரு அமைப்பு உதவுகிறது. இழுக்கப்பட்ட காற்றானது ஒரு கலத்தில் சேகரிக்கப்பட்டிருக்கும் எரி பொருட்கலவை (fuel mixture) யுடன் கலந்து அதை எரியச் செய்கிறது. எரியும்போது, வெளிப்படும் காற்று மிகுந்த வேகத்துடன் வெளியிடப் படுகிறது. எந்த அளவுக்கு வேகத்துடன் காற்று வெளியிடப்படுகிறதோ, அவ்வளவு வேகத்துடன் விமானம் முன்னோக்கிச் செல்கிறது. இந்த முறையிலேயே விண்கலங்களும் (Rockets) செல்கின்றன. இத்தகு முறையில் செயல்படும் விமானங்கள் இரண்டாம் உலகப்போரின் போது முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டன. அதற்கு முன் இருந்த அனைத்து விமானங்களும் புரொப்பல்லர்-ஐப் பயன்படுத்தியே இயக்கப்பட்டன.இங்கு விமானம் பறப்பதைப் பற்றிய அடிப்படையான சில தகவல்கள் விளக்கப்பட்டுள்ளன. விமானத் தொழில் நுட்பமானது மிகவும் சிக்கலானதும் (complicated and challenging), சவால் நிறைந்ததும் ஆகும். இது மறுக்க முடியாத உண்மையாகும். ஆயினும் மனித மூளை இதனை வென்றுள்ளது. இன்னும் அத்தொழில்நுட்பம் என்பது இவ்வளவு சிக்கலாக இல்லாமல் மேலும் எளிமையானதாக ஆக்கப்படவும் கூடும்.

This is my first ever science article;published in KALAIKATHIR.

Saturday, March 14, 2009

வலைத்தளத்திற்கு வயது 20


தொலைத்தொடர்புத் துறையில் மிகபெரும் புரட்சியை ஏற்படுத்திய வேர்ல்டுவைடு வெப் (றுறுறு) என்று அழைக்கப்படும் வலைத்தளம் கண்டறியப்பட்டு மார்ச் 13ம் தேதியோடு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.  
1989ம் ஆண்டு மார்ச் மாதத்தில் டிம் பெர்னர்ஸ் லீ என்ற இளைஞர் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் (செர்ன்) ஒரு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். " தகவல் மேலாண்மை-ஒரு திட்ட அறிக்கை" என்று தலைப்பிடப்பட்டிருந்த அந்த அறிக்கையே வலைத்தளங்களுக்கான முன்மாதிரி வரைபடமாக மாறியது. டிம் பெர்னர்ஸ் லீ அப்போது செர்ன் மையத்தின் அணுத்துகள் ஆராய்ச்சி நிலையத்தில் மென்பொருள் வல்லுனராக இருந்தார். அங்கு நூற்றுக்கணக்கான அறிவியலறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பணிபுரிந்தனர். அவர்களின் ஆய்வு முடிவுகளை ஒருங்கிணைப்பதும், அதை ஒப்பிட்டு ஆய்வு செய்வதும் செர்ன் மையத்திற்கு மிகுந்த சவாலாக இருந்தது. மேலும் ஒவ்வொரு ஆய்வாளரும் தனித்தனியாக தங்கள் சொந்தக் கணினிகளைக் கொண்டு வந்து ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால் அங்கு ஒரு கடினமான சூழல் நிலவியது. டிம் லீ தான் ஆய்வாளர்களின் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்தார். முதலில் சில மென்பொருட்கள் மூலம் இதைச் செய்த அவர் கணினிகள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணியதன் விளைவே வலைத்தளமாக (வெப்) உருமாறியது. வெற்றி அவருக்கு எளிதாகக் கிடைத்து விடவில்லை. செர்ன் மையத்தின் கணினி வல்லுனர் ராபர்ட் கெய்லியாவுடன் இணைந்து அவர் மேற்கொண்ட முயற்சிகள் 1990ம் ஆண்டு டிசம்பர் 25 அன்றுதான் வெற்றியைப் பெற்றுத்தந்தன. அதன் பிறகும் டிம் லீ ஆய்வாளர்கள், அறிவியலறிஞர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களிடமும் விரிவான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 13 அன்று டிம் லீ, கெய்லியா மற்றும் அவர்களது சக தோழர்கள் செர்ன் ஆய்வு மையத்தில் கூடி வலைத்தளத்தின் பிறந்த நாளைக் கொண்டிடாடினர். •

சோசலிசப்பாதையில் பீடுநடை!



லகின் மிகப்பெரிய பன்னாட்டு காகித ஆலைகளுள் ஒன்று அது. ஸ்மர்ஃபிட் கப்பா குரூப்ஸ் என்ற பெயரைக் கொண்ட அந்நிறுவனத்திற்கு வெனிசுலாவின் போர்ச்சுகீசா மற்றும் லாரா மாகாணத்தின் மத்தியப் பகுதியில் மிகப்பெரிய தைல மரத்தோட்டம் ஒன்று கடந்த வாரம் வரை இருந்தது. ஆம் கடந்த வாரம் வரை தான். இந்த வாரம் அது வெனிசுலா அரசுக்குச் சொந்தமாகிவிட்டது. நாடு முழுவதும் தற்போது மேற்கொண்டு வரும் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெனிசுலா அரசு இந்த தைல மரத்தோட்டத்தைத் தன் வயப்படுத்தியுள்ளது. "லாரா மற்றும் போர்ச்சுகீசா மாகாணத்தில் இருந்த மிகப்பெரிய அந்த தைல மரத்தோட்டம் பெருமளவில் நீரை உறிஞ்சி விடுகிறது. இதனால் அங்குள்ள பல நதிகள் நீரை இழந்து வருகின்றன," என்று கூறிய வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ், இத்தோட்டத்தில் உள்ள மரங்களை அழித்து வேறு உபயோகமான வழிகளில் பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்றார். மேலும் அவ்வாறு அம்மரங்களை அழித்த பின் புதிய பயிர்களை அவ்விடத்தில் விளைவிக்கப்போவதாகவும் கூறினார். ஆம். வெனிசுலாவில் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளுடன் சேர்ந்து விவசாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன. "உண்மையில், நிலச்சீர்திருத்தம் செய்வது தற்போதுள்ள விவசாய அமைப்பையும், நடைமுறைகளையும் மாற்றவே!" என்று வெனிசுலாவின் தேசிய நில நிறுவனத்தின் (ஏநnஉணரநடய'ள சூயவiடியேட ஐளேவவைரவந டிக டயனேள) தலைவர் யான் கார்லோஸ் லோயோ தெரிவித்தார். "விவசாயத்தை சிறுபான்மையினரான தனியாரின் கைகளிலிருந்து பிடுங்கி சமுதாயத்தின் சொத்தாக மாற்றுவது அவசியம். விவசாயம் வெனிசுலா மக்களின் சொத்து, அதாவது பொதுவுடைமை!" என்று முழங்குகிறார் அவர். அவர் தலைமையிலான ஐஎன்டிஐ மற்றும் தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் கடந்த திங்களன்று பாரினாஸ் மாகாணத்தில் 2800 ஹெக்டேர் அளவிலான (6 ஆயிரத்து 916 ஏக்கர்) தனியார் நிலங்களைக் கைப்பற்றி அரசுடைமையாக்கியுள்ளனர். இதுவரை அங்கு 5 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான (12,350 ஏக்கர்) நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களைக் கைப்பற்றுவது குறித்தும் வெனிசுலா அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. டகாரிகா பள்ளத்தாக்(கூயஉயசபையே எயடடநல) பகுதியில் உள்ள சுமார் 7 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை அரசுடைமையாக்குவது குறித்து அந்நாட்டின் விவசாயம் மற்றும் நில வளத்துறை அமைச்சர் எலியாஸ் ஜாவா மற்றும் ஆராகுவா மாநில ஆளுனர் ரபேல் ஐசியா ஆகியோர் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இங்குள்ள நிலம் நல்ல வளமான நிலம் என்றும், ஆனால் பயன்படுத்தப்படாமல் வீணாகக் கிடப்பதாகவும் எலியாஸ் ஜாவா கூறினார். விவசாய கூட்டுப்பண்ணைகளை அமைத்து மண்ணுக்கேற்ற பயிர்களைப் பயிரிடுவது சுற்றுச்சுழலுக்கேற்ற நகரமைப்புத்திட்டங்களை மேற்கொள்வது ஆகியவை அரசின் திட்டங்களாக உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆளுனர் ஐசியா இது குறித்து கூறுகையில் சோசலிசப் பாதையில் விவசாயத்தை திருப்புவதே அரசின் நோக்கம் என்றார். உணவு உற்பத்தி மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் என்ற ஒரு அரசு நிறுவனத்தை அமைப்பதே வெனிசுலா அரசின் தற்போதைய திட்டமாகும். அரசுடைமையாக்கப்பட்ட நிலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்ததாகவே இந்த மையத்தின் செயல்பாடு இருக்கும். விவசாய உற்பத்தியை உள்ளூர் சமூகத்தின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுறவு அமைப்பு நிர்வகிக்கும். இந்த கூட்டுப்பண்ணைகள் திட்டம் விவசாயத்தை சோசலிசப் பாதையில் திருப்புவதில் முக்கிய பங்காற்றுவதாகும். நிலத்தை ஏகபோக தனியார் முதலாளிகளிடமிருந்து பிடுங்கும் போது சாவேஸ் அரசு எவ்வித எதிர்ப்புகளையும் பொருட்படுத்துவதில்லை. ஐ.என்.டி.சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தை அணுகப்போவதாக மிகப்பெரிய எஸ்டேட் ஒன்றின் உரிமையாளரான டோபியாஸ் காரேரோ நகார் என்பவர் கூறியுள்ளார். ஆனால் அரசு சட்டப்படியான நடவடிக்கைதான் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2001ம் ஆண்டின் நிலச்சட்டம் மற்றும் 2008ம் ஆண்டில் போடப்பட்ட உணவுப்பாதுகாப்பு மற்றும் இறையாண்மை சட்டம் ஆகியவை மிகப்பெரிய எஸ்டேட்கள் மற்றும் நிலங்கள் சமூக நலனுக்கு எதிரானது என்று வரையறுக்கின்றன. மேலும் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும் போது அரசு தலையிடலாம் என்றும் அவை கூறுகின்றன. இதைக் கோடிட்டுக் காட்டிய ஐ.என்.டி.ஐயின் தலைவர் லோயோ அரசு தன் கடமையைத்தான் செய்துள்ளது என்று கூறினார். தற்போது லாரா மற்றும் போர்ச்சுகீசா மாகாணங்களில் மேலும் 12 பெரிய எஸ்டேட்களை அரசுடைமையாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. 2001ம் ஆண்டில் நிலச்சட்டம் அமலாக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை 60 ஆயிரம் ஹெக்டேர் நிலம் (1 லட்சத்து 48 ஆயிரத்து 200 ஏக்கர்) வெனிசுலாவின் யாராகுய் மாகாணத்தில் மட்டும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் வர்த்தகம்: தேவை அரசு கண்காணிப்பு!

ந.இராதாகிருஷ்ணன்
விவசாயம் சார் தொழிற்துறை மக்கள் நலனை மனதில் கொள்ளாமல் வெறும் இலாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்கி வருகிறது என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று. வீரிய ரகப்பயிர்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் என்று புதிய, புதிய பெயர்களில் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை தொடர்ந்து விரிவாக்கி வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் 26 விஞ்ஞானிகள் மற்றும் சில பூச்சியியல் அறிஞர்கள் அந்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையிடம் அண்மையில் ஒரு அறிக்கை சமர்ப்பித்தனர். தாங்கள் உருவாக்கும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு வேளாண் வர்த்தக நிறுவனங்கள் அறிவு சார் சொத்துரிமை (யீயவநவே சiபாவள) பெற்று விடுவதால் அந்த ரகப் பயிர்களைத் தங்களால் சுதந்திரமாக ஆய்வு செய்ய முடிவதில்லை என்று அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பது இதுதான்: "மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் முக்கிய பிரச்சனையான விவசாய ஆராய்ச்சிகளில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையும் தெளிவான வழிகாட்டுதல்களும் இல்லை. இலாப வெறி கொண்ட பன்னாட்டு உயிரியல் தொழில் நுட்ப நிறுவனங்கள் சிலருக்கு வரைமுறையற்ற அளவில் ஆராய்ச்சிக்கு பண உதவி செய்து தங்களுக்கு விருப்பமான முறையில் பயிர்களை உருவாக்குகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்ட ரகங்களில் விஞ்ஞானிகள் சுதந்திரமாக ஆய்வு மேற்கொள்ள முடிவதில்லை. இத்தகு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமே ஒரு ரகம் சிறந்த பலன்களைக் கொண்டதா, மக்களுக்கு நன்மை பயப்பதா என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இதற்கு கம்பெனிகள் தொடர்ந்து இடையூறு விளைவித்து வருகின்றன. அதே வேளையில் அக்கம்பெனிகள் அவர்களது கண்டுபிடிப்புகளை பெரும் முன்னேற்ற முள்ளவை என்றும் இலாபகரமானவை என்றும் கூறிக் கொள்கின்றன. போதுமான ஆய்வுகள் நடத்தப்படாமல் ஒரு பயிர் சிறந்தது என்று எப்படித் தீர்மானிக்க முடியும்?" இதுவே அவர்களது கேள்வியாகும். இது உண்மையிலேயே மிகவும் நியாயமான வாதமாகும். பொது சுகாதாரத்துறையில் மருந்து கம்பெனிகளின் தலையீடு மருத்துவர்களிடையே முரண்பட்ட ஆர்வங்களையும், ஒழுங்கீனங்களையும், ஊழலையும் ஏற்படுத்தி இருப்பதை அறிவோம். இதை கட்டுப்படுத்தி பொது மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஒரு மருந்து நிறுவனம் கண்டறிந்த மருந்தை தர நிர்ணய சோதனைகளுக்கு உட்படுத்தி அதன் பின்னரே மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் தேவையான சமயத்தில் கிடைக்க செய்ய வேண்டிய பொறுப்பும் அதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும் கடமையும் அரசுக்கு இருக்கிறது. ஏறக்குறைய வேளாண் வர்த்தக நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இதே போன்ற நடைமுறைகளைத்தான் அரசு கடைப்பிடிக்க வேண்டும். பல்வேறு தாவர இனங்களை வளர வொட்டாமல் தடுத்து அவைகளின் இருத்தலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை வேரறுப்பதும் மக்களுக்கு உணவு உத்தரவாதம் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசர அவசியத்தேவையாகும். பன்னாட்டு கம்பெனிகளில் இலாபநோக்கத்தை மேலும் வளர்த்தெடுக்கும் விதத்தில் அறிவியல் ஆய்வுகளை நடத்தி பரிந்துரைகளை வெளியிட்டு வரும் விவசாய பல்கலைக்கழக விஞ்ஞானிகள், விவசாயத்துறை உயர் அதிகாரிகள் மீது தொடர் கண் காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். பொதுமக்களின் நல வாழ்வுக்கு வேளாண் துறையில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள் மீது அறிவியல் அறிஞர்கள் சுதந்திரமாக ஆய்வு செய்வது அவசியம். தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கே அதிகளவில் அரசுகள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஆனால் அவை உணவுப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதோடு பல்வேறு எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துபவையாகும். திசு வளர்ப்பு முறை, பல்லுயிர்ப் பாதுகாப்புக்கு உறுதி நல்கும் விவசாய நடைமுறைகள் ஆகியவை மரபணு மாற்றுப் பயிர் வகைகளுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தால் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. இவற்றுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதும் அரசின் இன்றியமையாத கடமையாகும்.

நீங்கள் மட்டுமா; நானும்தான்..!


ஸ்வீடன் நாட்டின் ஃபுருலிக் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு சிம்பன்சி குரங்கின் வினோதமான செயல் மனிதனைப் பற்றி விஞ்ஞானிகள் கொண்டிருந்த சில கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சான்டினோ என்ற 31 வயதான அந்த சிம்பன்சி தன்னைக் காண வரும் பார்வையாளர்களை நோக்கிக் கற்களை எறியும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக சிம்பன்சி குரங்குகள் கற்களை எறியும் பழக்கத்தைக் கொண்டுள்ளன என்பதால் சான்டினோவின் இச்செயல் வியப்பானதல்ல. ஆனால் கல்லை எறிவதற்காக அக்குரங்கு மேற்கொள்ளும் மற்றொரு நடவடிக்கைதான் ஆச்சரியப்படுத்துவதாகும். பார்வையாளர்கள் மீது எறிவதற்கான கற்களை அக்குரங்கு முன்கூட்டியே சேகரித்து அருகில் குவித்து வைத்துக் கொள்கிறது என்பதுதான் அது. பார்வையாளர்கள் கூட்டத்தை விரும்பாத சான்டினோ பூங்கா திறக்கப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாகவே கற்களை வீசத்தொடங்கி விடுமாம். அவ்வாறு வீசுவதற்கான கற்களை பூங்கா மூடியிருக்கும் போது சேகரித்து அருகில் வைத்துக் கொள்கிறது. சிதறிக்கிடக்கும் கற்களை பொறுக்கி எடுப்பதோடு மட்டுமல்லாமல், அருகிலுள்ள கான்கிரீட் தரையை கைகளால் குத்தி அதிலிருந்தும் தேவையான அளவுகளில் கற்களை எடுத்துக் கொள்கிறது என்று பூங்கா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பலநாட்கள் ரகசியமாக சான்டினோவின் நடவடிக்கைகளை கண்காணித்ததில் இந்த வியப்பான தகவல் தெரிய வந்துள்ளது. குளிர்காலங்களில் பூங்கா பலநாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் போது சான்டினோ இச்செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்தி விடுகிறது என்று மேலும் ஆச்சரியப்படுத்துகிறார்கள் அவர்கள். சான்டினோவின் இந்த வினோத நடவடிக்கையிலிருந்து பார்வையாளர்களைக் காப்பாற்ற வேண்டி பூங்கா ஊழியர்கள் அதன் அருகிலிருந்த கற்களை அப்புறப்படுத்தினார்கள். ஆனால் அதன் பிறகும் சான்டினோ 50 முறை கற்குவியலை உருவாக்கியது. 18 முறை கான்கிரீட் தளத்தைப் பெயர்த்து கற்களை உருவாக்கியது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே ஊகித்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்து செயல்படும் திறன் மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்று விஞ்ஞானிகள் இதுவரை கருதி வந்தனர். ஆனால் சான்டினோவின் இச்செயல் விலங்குகளும் கூட எதிர்காலத்திற்காக திட்டமிட்டு அதன்படி செயல்படுகின்றனவோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. "இதுபோன்று முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவதற்கு குறிப்பிடத்தக்க அறிவாற்றல் தேவை. எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே ஊகித்து அறியும் திறனும் இதற்கு வேண்டும். இதுவரை இத்திறன் மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்றுதான் நினைத்து வந்தோம்," என்கிறார் இந்த ஆய்வுக்குழுவின் தலைவரும், விஞ்ஞானியுமான மத்தியாஸ் ஒஸ்வாத். இந்நிலையில் சான்டினோவைக் கட்டுக்குள் கொண்டு வர அறுவை சிகிச்சை செய்ய உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.