Saturday, November 28, 2009

வெள்ளை யானையும் அதன் குட்டியும்!


அவர்கள் இருவரும் அந்த ஊரிலேயே மிகவும் பிரபலமான பொய்யர்கள். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் அவர்கள் அவிழ்த்து விடும் பொய்களால் அந்த ஊரே அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.
ஒருநாள் அவர்களில் ஒருவன் ஒன்றுமில்லாத ஒரு வெட்டவெளியைக் காட்டிக் கூறினானாம்: ‘‘அதோ பார் வெள்ளை யானை போகிறது,’’ என்று. சுற்றியிருந்தவர்கள் திருதிரு வென்று விழித்துக் கொண்டிருக்கையிலேயே மற்றவன் கூறினான்: “ஆமாம், ஆமாம் அதன் குட்டியும் போகிறது!’’
இது முன்பொரு காலத்தில் நடந்த கதையல்ல. வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மீண்டும், மீண்டும் தொடர்ந்து நடந்து வரும் கதைதான். ஆனால் ஒரே ஒரு சின்ன வித்தியாசம்: ஒவ்வொரு முறையும் வெட்டவெளியில் யானைக்கு பதிலாக வேறொன்று தோன்றுகிறது. இந்த முறை தோன்றியிருப்பது ‘லவ் ஜிஹாத்’.
அது என்ன லவ் ஜிஹாத்?
உருது மொழியில் ஜிஹாத் என்றால் போராட்டம் என்று பொருள். இ°லாமிய மதத்தின் இழந்த பெருமையை மீட்பதற்காக போர் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, அம்மதத்தில் உள்ள மிகச்சிலர் செய்யும் வன்முறை வெறியாட்டங்கள் இந்தப்பெயரால் குறிப்பிடப்படுகின்றன. இதனை புனிதப்போர் என்றும் அவர்கள் அழைப்பதுதான் கொடுமையானது. சரி இதற்கும் ‘லவ்’வுக்கும் என்ன சம்பந்தம்? இவை இரண்டையும் ஏன் ஒன்றாக இணைக்க வேண்டும்? இதன் பொருள் என்ன?
இதுபோன்ற கேள்விகளை எழுப்பி யாரும் மண்டையைப் போட்டு உடைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இது துவேஷம் கொண்ட இந்துத்துவா கும்பலின் வெறிபிடித்த பழைய கூச்சல்தான். ‘அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதன் மூலம் இந்திய இ°லாமியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது’,என்றும், ‘இதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்’, என்றும் அவர்கள் செய்து வரும் வக்கிரமான பிரச்சாரம்தான் இப்போது இந்தப் பெயரில் புதிய உருவெடுத்திருக்கிறது. இலாபவெறி கொண்ட ஊடகங்களால் இது ஊதிப் பெரிதாக்கப்படுகிறது: அவ்வளவுதான். இதுவரை இ°லாமியக்குடும்பங்களை இவ்வாறு தூற்றியவர்கள் இப்போது இந்துப்பெண்களுக்கு ஆபத்து என்று கிளம்பியிருக்கிறார்கள்.
அழகான இ°லாமிய இளைஞர்கள் இந்துப்பெண்களை முதலில் காதல் வலையில் வீழ்த்துவார்களாம். பின்னர் அவர்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்வார்களாம். இதன் முக்கிய நோக்கம் இந்தியாவில் இ°லாமியர்களின் தொகையை உயர்த்துவதுதானாம். ஏராளமான குழுக்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்,இதற்கு ஏராளமான பணம் செலவிடப்படுவதாகவும் சிறிதும் இடைவெளியின்றி அவர்கள் அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.
முதலில் இந்த அபத்தம் கேரள பத்திரிகை ஒன்றில் புலனாய்வு என்ற பெயரில் வெளியானதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கு இயங்கி வரும் ‘இந்து ஜனஜக்ருதி சமிதி’ என்ற மதவெறி அமைப்பு இதைக் கையில் எடுத்துக்கொண்டது. பின்னர் கர்நாடகத்திலும் இதுபோன்று நடப்பதாகக் கூறி தென் கர்நாடக இந்துத்துவா கும்பல்களும் இதை ஒரு பிரச்சனையாகக் கையிலெடுத்தன. ஆயிரக்கணக்கான இந்துப் பெண்கள் இவ்வாறு இஸ்லாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அரசு இதில் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இவர்களின் கோரிக்கையை(?) ஏற்று கேரள, கர்நாடக உயர் நீதிமன்றங்களும் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில் இது ஆதாரமற்ற ஒரு வதந்தி என்று கேரள காவல்துறை டி.ஜி.பி மறுப்பு தெரிவித்தார். எந்தப் பெண்ணும் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என்று அவர் கூறினார். கர்நாடக காவல்துறையும் இது வதந்திதான் என்று தெரிவித்துள்ளது. இதற்கு ஆதாரமாக அவர்கள் சில புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளனர்.
தெற்கு கர்நாடகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களில் 3 ஆயிரம் இந்துப் பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் இந்து ஜனஜக்ருதி சமிதி தெரிவித்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள கர்நாடக காவல்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாத இறுதி வரை காணாமல் போன பெண்கள் வெறும் 404 பேர்தான் என்றும், அதிலும் 332 பேர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டார்கள் என்றும் கூறியுள்ளனர். இன்னும் 57 பேரின் விவரங்களைத்தான் தேட வேண்டியுள்ளது. இதிலும் இந்து அமைப்புகள் கூறுவது போல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மனதுக்குப் பிடித்தவர்களுடன் சேர்ந்து வாழ வீட்டை விட்டுச் சென்ற பெண்களைப் பொறுத்தவரை (1) அவர்கள் இந்துக்கள் அல்லாதோருடனும் சென்றிருக்கிறார்கள், (2) இந்துக்களுடனும் சென்றிருக்கிறார்கள். (3) இந்துப்பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள், (4) இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள்.
மேலும் இதுபோன்று காணாமல் போன ஒரு பெண் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தொடர் கொலைகாரனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 22 வயதான அப்பெண் அவனால் கொலை செய்யப்பட்ட 27 வது நபர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த ஆதாரங்கள் லவ் ஜிஹாத் என்று இந்து மதவெறியர்கள் கூறிவருவது வெறும் கற்பனையே என்று தெளிவுபடுத்தியுள்ளன. இருந்தும் இதுகுறித்த வழக்குகளை விசாரித்த கேரள, கர்நாடக உயர்நீதிமன்றங்கள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளன. விசாரிப்பதில் தவறில்லை. ஆனால் இதுபோன்ற மதவெறியர்களின் பொய்மையில் நீதி மயங்கியதால்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் சேதுசமுத்திரத்திட்டம் கூட இன்னும் கனவாகவே நீடிக்கிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

No comments:

Post a Comment