போக்குவரத்து என்றாலே அதில் விபத்துகள் ஏற்படுவது இயல்பு. சாலையாக இருந்தாலும், ரயில்வே தண்டவாளமாக இருந்தாலும், வான்வெளியாக இருந்தாலும் விபத்துகளின்றி அவற்றை கற்பனை செய்வது அரிது. அதிலும் சாலைகள் விபத்துகளின் உறைவிடமாக உள்ளன. வளர்ந்த நாடுகள் ஓரளவு சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தியுள்ளன என்றாலும், வாகனப்போக்குவரத்து நிறைந்த இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. எனவே விபத்தில்லா போக்குவரத்து என்றால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும்.
எறும்புகளின் அணிவகுப்பை பொறுமையாக அமர்ந்து எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவை எப்படி முட்டல், மோதல் எதுவும் இல்லாமல் ஒரே நேர்கோட்டில் செல்கின்றன? உண்மையில் அவை விபத்தில்லாமல்தான் செல்கின்றனவா? அது எப்படி அவற்றிற்கு சாத்தியமாகிறது? ஒருவேளை அவை போக்குவரத்துக்கு விதிமுறைகள் ஏதாவது வகுத்து அதன்படி செயல்படுகின்றனவா? நமக்கிருக்கும் பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் இத்தனையையும் நம்மால் யோசிக்க முடியாதுதான். ஆனால் இதற்கும் மேலான பல்வேறு கேள்விகளுக்கு உயிரியல் ஆர்வலர்கள் விடை கண்டுள்ளனர். அவை வியப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்துவனவாக உள்ளன.
எறும்புகள் எதனால் வரிசையாக ஊர்ந்து செல்கின்றன? போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படாமல் அவை செல்லக் காரணம் என்ன? முதல் கேள்விக்கு விடை சொல்வது எளிது. எறும்புகளின் உடலில் சுரக்கும் பெர்மோன்(phermone) என்ற ஒரு வித வேதிப்பொருள் அவை வரிசையாக ஊர்வதை சாத்தியமாக்குகிறது. முன்னால் செல்லும் எறும்பு விட்டுச் செல்லும் அந்த வேதிப்பொருளைப் பின்னால் செல்லும் எறும்புகள் பின்பற்றிச் செல்வதால் அவை நேர்கோட்டில் செல்வது சாத்தியமாகிறது. எனவே இரண்டாவது கேள்விதான் ஆய்வுக்குரியது.
ஒவ்வொரு எறும்புக்கூட்டத்திலும் வேகமாக இயங்கும் எறும்புகள், மெதுவாக இயங்கும் எறும்புகள், சராசரி வேகத்தில் செல்பவை என்று 3 வகைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவற்றின் உடல் நீளத்தை வைத்து வேகம் அளவிடப்படுகிறது. மெதுவாகச் செல்பவை வினாடிக்கு 2 உடல் நீள அளவுக்கும், வேகமாகச் செல்பவை வினாடிக்கு 6 முதல் 10 உடல் நீள அளவுக்கும், சராசரி வேகத்தில் செல்பவை 4.7 உடல்நீள அளவுக்கும் செல்கின்றன என்று கூறும் ஆய்வாளர்கள், வரிசை என்று வரும்போது முன்னால் மற்றும் பின்னால் வரும் சக எறும்புகளுக்கேற்ப ஒவ்வொரு எறும்பும் தனது வேகத்தைத் தீர்மானிக்கிறது என்கிறார்கள். எனவே தறிகெட்ட இயக்கம் எதுவும் இல்லாமல் ஒரே சீராக எறும்புகளால் பயணிக்க முடிகிறது. உண்மையில் எறும்புகளின் இந்தப் பண்பு மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதாகும். ஏனெனில் சராசரி வேகத்தை பின்பற்றாமல் அதிவேகத்தில் செல்வதால்தான் பெரும்பாலான சாலைவிபத்துகள் நேரிடுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புறத்தடைகள் எறும்புகளின் போக்குவரத்தை சீர்குலைக்க முடியுமா? இதையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். சீராகச் செல்லும் ஒரு எறும்பு வரிசையின்-கூட்டில் இருந்து உணவு தேடிச்செல்லும் எறும்புகள், உணவு கொண்டு போகும் எறும்புகள் அடங்கிய வரிசை- இடையில் தடையை வைத்து, மெல்லிய திறப்பு மட்டும் விடப்பட்டது. அப்போது அவை செயல்பட்ட விதம் பிரமிப்பாக இருந்ததாம். ஒரு வரிசைதான் செல்ல முடியும் என்ற நிலையில், ஒரு வரிசை எறும்புகள் அப்படியே திறப்பை விட்டு சற்றுத்தள்ளி நின்று கொண்டனவாம். அதனால் அந்த வரிசை அப்படியே அசையாமல் சிறிது தூரத்திற்கு நீண்டு விட்டதாம். அதே நேரத்தில் எதிர் வரிசை எறும்புகள் போய்க்கொண்டே இருந்தன. பின்னர் சிறிது நேரம் கழித்து, எதிர் வரிசை எறும்புகள் நின்று விட விட்டுக்கொடுத்த எறும்புகள் சென்றனவாம். ஒருவேளை எதிர்வரிசை எறும்புகள் உணவுடன் வந்தால் உணவற்ற எறும்புகள் முழுமையாக அவை செல்லும் வரை பொறுத்திருந்துதான் சென்றன என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். மேலும் எண்ணிக்கையில் மிக அதிகமாகி விட்டால் அவை மூன்று வரிசையாக பிரிந்து விடும் என்று கூறும் அவர்கள், உணவைப் பாதுகாக்கும் நோக்கில் உணவு கொண்டு வரும் எறும்புகள் நடு வரிசையில்தான் விடப்படும் என்று கூறுகிறார்கள்.
எறும்புகளின் இப்பண்பு சமூக விலங்கியல் (socio biology) என்று அழைக்கப்படுகிறது. சமூகத்தின் நலனுடன் ஒப்பிடுகையில் தனிநபர் நலன் முக்கியமல்ல என்ற நோக்கில் செயல்படுவதே இப்பண்பிற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment