அறிவியல் அறிஞர் ஆர்க்கிமிடிஸைப் பற்றிய புகழ்பெற்ற கதை இது: பண்டைய கிரீஸ் நாட்டின் சிராக்கஸ் பகுதியின் மன்னன் ஹீரோ. ஒருநாள் அவனுக்கு ஒரு பொற்கொல்லன் கிரீடம் செய்து தருகிறான். ஆனால் முழுமையாகத் தான் அளித்த தங்கத்தைப் பயன்படுத்தாமல், பொற்கொல்லன் தன்னை ஏமாற்றி விட்டதாக ஹீரோ நினைக்கிறான். தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள உள்ளுர் அறிஞரான ஆர்க்கிமிடிஸை நாடுகிறான். அந்த கிரீடத்தை சேதப்படுத்தாமல், அது சொக்கத் தங்கத்தால் ஆனதுதானா என்பதைக் கண்டறிந்து தனக்கு நிரூபிக்குமாறு கட்டளையிடுகிறான். மிகவும் கடினமான இப்பணியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆர்க்கிமிடிஸ், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக குளிக்கச் செல்கிறார்.
மீதிக் கதை உங்களுக்குத் தெரிந்ததுதான். குளிக்கும் தொட்டியில் அமர்ந்த ஆர்க்கிமிடிஸ், தான் தொட்டியினுள் இறங்கியபோது தண்ணீர் வெளியேறுவதை கவனிக்கிறார். வெளியேறும் அந்த நீரின் அளவு தனது எடைக்குச் சமமானது என்று உணர்கிறார். பின்னர் குளியலறையில் இருந்து அப்படியே எழுந்து, “யுரேகா!” (கண்டுபிடித்து விட்டேன்) “யுரேகா!” என்று கத்தியபடி, ஆடை எதுவும் அணியாமலேயே அரண்மனையை நோக்கி ஓடுவார் என்று முடியும்.
படிக்கவும், கேட்கவும் சுவையாக இருக்கும் இச்சம்பவம், அச்சுப் பிசகாமல் இதேபோன்றுதான் உண்மையில் நடந்திருக்குமா? அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே அறிவியல் கூறுகிறது. ஒட்டுமொத்த அறிவியல் வரலாற்றில் ஒருபோதும் இவ்வளவு எளிதாக யுரேகா தருணங்கள் நிகழ்வதில்லை.
மனிதனின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட துறையில் ஏற்கனவே முயன்று பெற்ற அறிவின் தொகுப்பால் விளைந்தவையே தவிர, இதுபோன்ற யுரேகா தருணங்களால் தற்செயலாகக் கண்டறியப்பட்டவை அல்ல.
ஒரு கண்டுபிடிப்புக்குக் காரணமானவர் என்று நாம் குறிப்பிட்ட சில அறிவியல் அறிஞர்களைக் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையில் அவர்களது கண்டுபிடிப்பானது, அவர்களுக்கு முந்தைய மற்றும் சம காலத்திய அறிஞர்கள் பலர் பல்வேறு தருணங்களில் மேற்கொண்ட சிறிய சிறிய நோக்கீடுகளைச் (Observations) சார்ந்தது. அத்தகைய சிறிய விஷயங்களைக் குறித்த அறிவும், அவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை உணர்ந்து அவற்றை ஒன்றிணைக்கும் திறனும் அவர்களுக்கு வாய்க்கப்பெற்றதே குறிப்பிட்ட சில அறிஞர்களைப் பெரும் கண்டுபிடிப்புகளின் கதாநாயகர்களாக மாற்றியது.
விடாப்பிடியான தேடல்:
ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை எவ்வாறு கண்டறிந்தார்? இதற்கான பதிலாக நமக்கு ஒரு கதை காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது:
ஒருநாள், ஓர் ஆப்பிள் மரத்தின் கீழே நியூட்டன் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அரைத்தூக்கத்தில் இருந்தபோது, மரத்திலிருந்து ஒரு பழம் உதிர்ந்து அவர் தலை மீது விழுந்தது. அவர் திடுக்கிட்டு விழித்தார்...... யுரேகா! அவ்வளவுதான்! புவி ஈர்ப்பு விசையை நியூட்டன் கண்டறிந்து விட்டார். ஆனால், இக்கதைக்கும் உண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஒருகாலத்தில் இயற்கை நிகழ்வுகள் எவ்வாறு நிகழ்கின்றன என்பதை மனிதன் அறிந்திருக்கவில்லை. கடலில் அலைகள் எழும்புவது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது. பறவைகளைப் போல் தான் ஏன் பறக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவனை வாட்டியது. இக்கேள்விக்கான விடைகளை சிலர் தேட முனைந்தனர். இதற்குக் காரணம் என்ன என்று தங்களுக்குள் விவாதித்துக் கொண்டும் சில விளக்கங்களை அளித்துக்கொண்டும் இருந்தனர். இத்தகைய தேடல் அதிகம்; நிகழ்ந்த ஒரு காலகட்டத்தில், விவாதங்கள் அதிகம் நடந்த பகுதியில் நியூட்டன் வசித்தார். அப்போது கோள்களின் இயக்கம் பற்றிய பல்வேறு கருதுகோள்கள் பல்வேறு அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கணித அறிவு பல்கிப்பெருகிக் கொண்டிருந்தது. கால்குலஸ் எனப்படும் நுண்கணிதத்தின் அடிப்படைக் கட்டமைப்பு பண்டைய கிரேக்கம், பெர்சியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த கணிதவியல் அறிஞர்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த போதிலும் அது செம்மைப்படுத்தப்படவில்லை. இந்த முக்கியமான பணியை நியூட்டன் மற்றும் லீப்னிட்ஸ் ஆகியோர் அப்போதுதான் செய்து முடித்திருந்தனர்.
இவ்வாறு புவிஈர்ப்பு விசை என்ற உண்மையைக் கண்டறிய பல்வேறு அறிஞர்களின் முதுகில் நியூட்டன் சவாரி செய்ய வேண்டியிருந்தது. அத்துடன் பல்லாண்டு காலம் கடினமாக உழைத்து, பல்துறைகளில் (முதன்மையாக கணிதம், வானியல்) தான் பெற்ற அறிவையும் அவர் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஒருவேளை, அக்கடின உழைப்பின்போது தன்னைப் புத்துணர்வுடன் வைத்திருக்க அவர் ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டிருக்கலாம். அவ்வளவுதான்!
இதேபோன்ற ஒரு விடாமுயற்சியான தேடுதலின் விளைவாகத்தான் தடுப்பூசி கண்டறியப்பட்டது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை தீய ஆவிகளின் செயலாலும், கெட்ட காற்றின் மூலமாகவும் கொடிய நோய்கள் உருவாவதாக மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். நோய்களுக்குக் காரணம் ஆவிகள் அல்ல் கண்ணுக்குத் தெரியாத சில நுண்ணுயிர்களே நோய்களை உருவாக்குகின்றன என்று உலகுக்கு முதன்முதலில் லூயி பாஸ்டரும், அவரது குழுவினருமே எடுத்துக் காட்டினர். மேலும் நுண்ணுயிர்களின் வீரியத்தைக் குறைத்து (அல்லது செறிவூட்டி) மனித உடலில் செலுத்துவதன் மூலம் நோய்கள் ஏற்படாமல் தடுக்க இயலும் என்ற கருதுகோள் ஒன்றையும் அவர்கள் முன்வைத்தனர். வீரியம் குறைந்த ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரியைப் பயன்படுத்தி அந்த நோய்க்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை சிலரது உடலில் உருவாக்கவும் செய்தனர். உலகம் அறிந்த இக்கதையின் மறுபக்கம் அவ்வளவு உவப்பானது அல்ல.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ழீன்-ஜோசப் ஹென்றி டூசெய்ன்ட். கால்நடை மருத்துவரான அவர் லூயி பாஸ்டரின் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். அவரது ஆய்வுகள் மற்றும் கருதுகோள்கள் முழுவதையும் கற்றறிந்த ஹென்றி, பொட்டாசியம் டை-குரோமேட்டைப் பயன்படுத்தி ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரியை பலம்குன்றச் செய்யும் ஒரு வழிமுறையைக் கண்டறிந்தார். அதை வெற்றிகரமாக ஓர் ஆட்டின் உடலில் செலுத்திப் பரிசோதனையும் நிகழ்த்தினார். ஆனால் இதுகுறித்து பாஸ்டருக்கு தெரிவித்தபோது அவர் அதை ஏற்க மறுத்தார். அது தவறான வழிமுறை என்று கூறிய பாஸ்டர், பின் அதே வழிமுறையைப் பொது இடங்களில் நிகழ்த்திக் காட்டி தடுப்பு மருந்தைக் கண்டறிந்ததற்கான அனைத்துப் பெருமைகளையும் தனக்கே உரித்தாக்கிக் கொண்டார்.
தற்செயல் நிகழ்வுகள்
தற்செயலாக நிகழும் சில சம்பவங்கள் கூட சில கண்டுபிடிப்புகளில் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. இருப்பினும் பாஸ்டரின் சொற்களில் கூற வேண்டுமானால், “விழிப்புடன் இருக்கும் மூளைக்கு மட்டுமே அதிர்ஷ்டம் உதவி செய்கிறது!” தற்செயலாக நிகழும் கண்டுபிடிப்புகளில் இரு குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களை உன்னிப்பாக கவனிக்கும் திறனுடன் இணைந்த ஓர் உள்ளார்ந்த ஆர்வத்தை ஒருவர் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக, துறையைப் பற்றிய அறிவும், பயிற்சியும் பெற்றவராக அவர் இருக்க வேண்டும். அறிவியல் கொள்கைகளைவும், விதிகளையும் பற்றிய தெளிவான புரிதல் இல்லாத, நிகழ்வுகளைக் கூராய்வு செய்யும் திறனும் பயிற்சியும் இல்லாத ஒருவரால் இத்தகைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவே முடியாது.
பெனிசிலின்
நம் வாழ்க்கையை மாற்றியமைத்த கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு பெனிசிலின். இதுவும் தற்செயலாக நிகழ்த்தப்பட்ட ஒரு கண்டுபிடிப்புதான். இதைப்பற்றிய ஒரு சுவையான கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். தனது ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை மேற்கொண்டிருந்த அலெக்ஸாண்டர் ஃபிளெம்மிங் சில பரிசோதனைத் தட்டுகளை சுத்தப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டார். சில நாட்கள் கழித்து அவற்றைப் பார்த்தபோது அதில் வளர்ந்திருந்த பூஞ்சை தட்டிலிருந்த பாக்டீரியாக்களைக் கொன்றிருந்தது தெரியவந்தது. அவ்வளவுதான் பெனிசிலின் கண்டறியப்பட்டுவிட்டது. ஆனால் இக்கதைக்குப் பின் ஏராளமான உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.
நுண்ணுயிர்களால் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்த ஃபிளெம்மிங், இத்துறையில் மிகுந்த புலமை கொண்ட மிகச்சிறந்த நுண்ணுயிரியலாளர் ஆவார். முதலாம் உலகப்போருக்குப் பின் வந்த பல பத்தாண்டுகளை அவர் பாக்டீரியங்களைக் கொல்லும் நுண்ணுயிர்களைக் கண்டறிவதில் மட்டுமே செலவிட்டார். முதல் உலகப்போரின்போது, பாக்டீரியங்களால் ஏற்பட்ட நோய்த்தொறறை விட ஆன்டிசெப்டிக் பயன்பாடே அதிகமான வீரர்களைக் கொன்றது என்ற உண்மையைக்; கண்டறிந்ததற்காக அவர் ஏற்கனவே பெயர்பெற்றிருந்தார். ஆன்டிசெப்டிக்குகள் புண்களின் மேற்பகுதியில் இருந்த பாக்டீரியங்களை மட்டுமே தாக்கி அழித்ததும், காயங்களின் ஆழத்தில் இருந்த பாக்டீரியங்களை அவற்றால் அணுகமுடியாததால், பாக்டீரியங்கள் சில காலம் உறக்க நிலையில் இருந்து பின் தொற்றுகளை ஏற்படுத்தியதுமே இதற்குக் காரணம் என்றார் அவர். அதேபோல், மூக்கு துவாரங்களில் உற்பத்தியாகும் கோழை, கண்ணீர் போன்ற உடல் திரவங்கள் பாக்டீரியங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்று கண்டறிந்ததும் அவர்தான்.
ஃபிளெம்மிங் தனது விடுமுறையைக் கழிக்கச் செல்லும் முன் தனது ஆய்வகக் கருவிகளை ஒழுங்குமுறையில் வரிசைப்படுத்தி வைத்திருந்தார். விடுமுறைக்குப் பின் ஆய்வகத்திற்குத் திரும்பியவுடன், வைத்துவிட்டுச் சென்ற கருவிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் ஆய்வு செய்தார். அதில் இரண்டு தட்டுகளில் பூஞ்சை வளர்ந்திருந்தது. அதில் அவரது கவனத்தை ஈர்த்தது இதுதான்: பூஞ்சை வளர்ந்திருந்த தட்டுகளில், அப்பூஞ்சையைச் சுற்றி இருந்த பாக்டீரியங்கள் இறந்து கிடந்தன. இத்தகைய ஒரு தருணத்துக்காகவே பல்லாண்டுகளாகக் காத்திருந்த ஃபிளெம்மிங்கைத் தவிர வேறு யாராலும் இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையேயான தொடர்பை அந்த மின்னல் நொடியில் கண்டுணர்ந்திருக்க முடியாது என்று உறுதியாகக் கூறலாம். இதன்பிறகு பல ஆண்டுகளை அவர் அப்பூஞ்சையை ஆய்வு செய்வதிலும், அதைத் தனிமைப்படுத்துவதிலுமே செலவிட்டார். அதன் விளைவாகத்தான் பெனிசிலின் நமக்குக் கிடைத்தது. மற்ற எவரைக் காட்டிலும் அதிக விழிப்புடன் இருந்த அம்மனிதருக்கு அதிர்ஷ்டம் உதவியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
எக்ஸ்-கதிர்கள்
இக்கண்டுபிடிப்புக்குச் சற்றும் குறைந்ததல்ல எக்ஸ் கதிர்களின் (X-Rays) கண்டுபிடிப்பு. ஒரு தற்செயலான தருணத்தில் நிகழ்ந்த இக்கண்டுபிடிப்பு இயற்பியல் துறையையும், நவீன மருத்துவத்தையும் புரட்டிப்போட்ட ஒன்று. இதைக் கண்டறிந்த ரான்ட்ஜன், முந்தைய நபர்களைப் போலவே, இக்கண்டுபிடிப்பை நிகழ்த்துவதற்கான அத்தனை தகுதிகளையும் கொண்டிருந்தவர்; அதற்கான ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தவர். ஒளிக்கதிர்களின் பாதைகள் குறித்த ஆய்வு செய்து கொண்டிருந்த அவர், ஒருநாள் கேதோடு கதிர்களை உமிழும் குழாயை ஒளிபுகாத் தன்மை கொண்ட ஒரு கருப்புத் துணியால் மூடும்போது, அருகில் சில அடி தொலைவில் இருந்த ஒரு திரையில் சில ஒளிக்கதிர்கள் தோன்றுவதைக் கண்டார். ஒளிஉமிழ் விளக்குகள் உமிழும் ஒளியைப் போன்று அந்த ஒளிக்கதிர்கள் இருந்தன. இயற்பியலிலும், அதன் ஓர் அங்கமான ஒளியியலிலும் அவருக்கிருந்த அபரிமிதமான புலமையே, வெறும் கண்ணுக்குப் புலப்படாததும், மெல்லிய திடப்பொருட்களின் வழியே ஊடுருவிச் செல்லும் தன்மைகொண்டதுமான எக்ஸ்-கதிர்களை அவருக்கு அடையாளம் காட்டியது. எனவே, இக்கண்டுபிடிப்பு தற்செயலாக நிகழ்ந்த போதிலும், அதற்கான முழுத்தகுதியும் வாய்க்கப்பெற்ற ஒருவராலேயே நிகழ்த்தப்பட்டது என்பது கண்கூடு.
பாஸ்டரைசேஷன்:
லூயி பாஸ்டர் மீதான களங்கத்தைத் துடைத்து அவர் இழந்த புகழை மீட்டெடுக்க என்னை இப்போது அனுமதியுங்கள். அவரது மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றான “பாஸ்டரைசேஷன்”, தற்செயல் நிகழ்வுகளும், ஓய்வறியாத தேடலும் ஒருங்கிணைந்து ஒரு கண்டுபிடிப்பை எவ்வாறு நிகழ்த்துகின்றன என்பதற்குச் சிறந்த சான்றாகும்.
ஒயினில் உள்ள மூலக்கூறுகளை நுண்ணோக்கியின் உதவியால் ஆராய்ந்து கொண்டிருந்த பாஸ்டர், அதில் ஓவல் வடிவிலான ஈஸ்ட்டுகளுடன் சேர்ந்து குச்சி வடிவிலான சில நுண்ணுயிரிகளும் கலந்திருப்பதைக் கண்டறிந்தார். இதன்பிறகு தனது ஆய்வைத் தீவிரப்படுத்திய அவர், ஈஸ்ட்டுகள் சர்க்கரை மூலக்கூறுகளை ஆல்கஹாலாகவும், குச்சி வடிவிலான நுண்ணுயிர்கள் (அசிட்டோபாக்டர் அசிட்டி) சர்க்கரைக் கரைசலை அசிட்டிக் அமிலமாகவும் மாற்றுவதை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தினார். இந்த பாக்டீரியங்கள் ஒரு கரைசலில் உருவாகும்போது, ஈஸ்டுகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, ஆல்கஹாலை புளிப்பாக மாற்றும் அமிலங்களை வேகமாகச் சுரக்க ஆரம்பித்து விடுகின்றன.
ஆல்கஹாலை நொதிக்கச் செய்யும் இவ்வினையானது ஈஸ்ட் செல்களின் அமைப்பு மற்றும் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டதே அன்றி அவற்றின் அழிவுக்குக் காரணமானது அல்ல என்பது பாஸ்டரின் புகழ்பெற்ற கூற்றாகும். அசிட்டோபாக்டர் இன்று ஒயினில் இருந்து வினிகர் தயாரிக்க நமக்குப் பயன்படுகிறது.
இக்கண்டுபிடிப்பின் அடுத்தகட்டமாக திரவங்களை அவற்றின் தன்மை கெடாமல் குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடாக்கி, அவற்றில் உள்ள நுண்ணுயிர்களைக் கொல்லும் ஒரு வழிமுறையை உலகுக்கு வழங்கினார் அவர். அவரின் பெயராலேயே இம்முறை இன்று பாஸ்டரைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக, இந்தக் கண்டறிதல்கள் “நோய்களுக்கான கிருமிக் கொள்கை”யை விளக்க அவருக்கு உறுதுணையாக இருந்தன. இவ்வாறு தனது கண்டறிதல்களை கண்டுபிடிப்பாக மாற்றும் வல்லமை கொண்ட அறிவும் திறனும் வாய்க்கப்பெற்றவராக பாஸ்டர் விளங்கினார்.
மேற்கண்ட அனைத்துக் கதைகளிலும் ஒரு பொதுவான அம்சம் உண்டு. சிறந்த கண்டுபிடிப்புகள் அவற்றுக்குத் தேவையானதும், பொருத்தமானதுமான புதிய கருவிகள் கண்டறியப்பட்ட பின்னரே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அத்தகைய சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருந்த கருவிகள் கண்டறியப்பட்டது ஒரு தனி வரலாறு ஆகும்.
(சுனில் லக்ஷ்மண், பெங்களுரில் இயங்கி வரும் ஸ்டெம் செல் பயாலஜி அண்டு ரீஜெனரேட்டிடிவ் மெடிசன் நிறுவனத்தில் அறிவியலாளராகப் பணியாற்றி வருகிறார். எவ்வாறு செல்கள் இயங்குகின்றன என்பது குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். இக்கட்டுரை முதன்முதலாக thewire.in இணைய இதழில் வெளியானது.
மூலக் கட்டுரையை வாசிக்க கீழே உள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்...
http://thewire.in/2015/12/20/crosstalk-to-boldly-go-from-collecting-facts-to-making-discoveries-17459/
http://thewire.in/2016/01/20/crosstalk-when-an-apple-fell-on-newtons-head-and-stories-on-the-process-of-discovery-19604/
http://thewire.in/2016/02/22/crosstalk-when-galileo-saw-some-moons-and-other-stories-of-invention-22303/
இக்கட்டுரை கீற்று இணைய இதழில் 25 மார்ச் 2016 அன்று வெளியிடப்பட்டது.
தமிழில்: நந்தா
Sorry for the very late reply. Thanks for the comment.
ReplyDelete