Friday, June 15, 2012

கடல்மட்ட உயர்வும் நிலத்தடி நீரின் சரிவும்!

புவி வெப்பமடைதல் காரணமாக வட, தென் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதும், அதன் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதும் சாமானிய மக்கள் மத்தியில்கூட இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. இன்னும் சில பத்தாண்டுகளில் ஏறக்குறைய 25 செ.மீ. வரை கடல்மட்டம் அதிகரிக்கும். இதே வேகத்தில் போனால், 2100-இல் ஏறக்குறைய 6 அடி வரை அதிகரிக்கும். அவ்வாறு நடந்தால் மாலத்தீவு உள்ளிட்ட பல பகுதிகள் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும். உலக மக்கள்தொகையில் ஆறு பேரில் ஒருவர் அகதியாகும் நிலை ஏற்படும். ஆறுகளின் கழிமுகப் பகுதிகளில் கடல் நீர் புகுவதால், தண்ணீரின் உப்புத் தன்மை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீரும் மாசுபடும். இதனால் உயிர்ச்சமநிலை பாதிக்கப்பட்டு, விரும்பத்தகாத பல்வேறு விளைவுகள் ஏற்படும். இவ்வளவு பாதகமான அம்சங்கள் இருப்பதால்தான், புவி வெப்பமடைதல் பிரச்னை இவ்வளவு தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், கடல் மட்டம் உயர்வதற்கு புவியின் வெப்பநிலை உயர்வது மட்டுமே காரணமல்ல என்கிறார்கள் ஜப்பானிய விஞ்ஞானிகள். தண்ணீரை வரைமுறையின்றிப் பயன்படுத்துவதும், நிலத்தடி நீரை அதிகப்படியாக உறிஞ்சுவதும் கடல் மட்டம் உயர மிக முக்கிய காரணம் என்கின்றனர். கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகா பகுதிகளில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளில் இருந்து உருகும் நீரைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக இப்போது நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. பொதுமக்களின் பயன்பாட்டுக்குப் பின் கழிவு நீராக மாறும் இந்த நீரின் பெரும்பகுதி சாக்கடைகள் மூலம் ஆறுகளிலும், ஓடைகளிலும் கலந்து பின்னர் கடலில் விடப்படுகிறது. குறைந்த அளவு நீரே மீண்டும் பூமிக்குள் போகிறது. இதனால் ஆறுகள் மூலமாக இயல்பாகச் சேருவதைவிட அதிகமான தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது. புவி வெப்பமடைவதன் காரணமாக எந்த அளவு உயர்ந்து கொண்டிருக்கிறதோ, அதே அளவுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 1 மி.மீ. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் கடல்மட்டம் உயர்கிறது என்கிறது ஜப்பானிய விஞ்ஞானிகளின் ஆய்வு. மனிதனால் கட்டப்பட்ட அணைகளின் மூலம் கடல்மட்ட உயர்வின் வேகம் சுமார் 40 சதவிகித அளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது நிலத்தடி நீர் முன்பைக் காட்டிலும் மிக வேகமாக உறிஞ்சப்படுவதால், இதுபோன்ற சில சாதகமான அம்சங்களும் இனிமேல் மனிதகுலத்துக்கு உதவாது என்கிறது இந்த ஆய்வு. ÷மனிதனால் வீணடிக்கப்படும் இயற்கை வளங்களில் நீரே பிரதான இடம்பிடிக்கிறது. நிலத்தடி நீராக இருந்தாலும், நன்னீராக இருந்தாலும் அதை மாசுபடுத்துவதையும், வீணடிப்பதையும் பற்றி நாம் அதிக அளவில் கவலைப்படுவதில்லை. கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் இப்போது, ஏறக்குறைய நிலத்தடி நீரே இல்லாமல் போய்விட்டது. இப்போது தனது தேவைக்கான கோதுமையை அந்நாடு இறக்குமதி செய்து வருகிறது. இப்போது குறைந்த அளவில் அந்நாட்டில் நடைபெற்று வரும் கோதுமை விவசாயம், 2016-ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலுமாக முடிவுக்கு வந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள். ÷இந்தியாவிலும் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் நிலத்தடி நீரின் பயன்பாடு அண்மைக் காலங்களில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ÷இவ்வளவு வேகமாக நீர்த்தேவை பெருகுவதற்கான காரணங்கள் என்ன? அண்மையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட வரைவு நீர்க் கொள்கை, மக்கள்தொகை உயர்வும், நகர்மயமாதல் பிரச்னையும், மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் நீர் வீணடிக்கப்படுவதற்கான காரணங்களாகச் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், பொதுச் சொத்தான நிலத்தடி நீர் தனிச் சொத்தாகக் கருதப்படுவதே அதன் வரைமுறையற்ற பயன்பாட்டுக்கான காரணம் என்கிறது. ÷மக்கள்தொகை உயர்வால் நீருக்கான தேவை பெருகுகிறது என்பது உண்மைதான். ஆனால், அதனை மட்டுமே இதற்குக் காரணம் காட்ட முடியாது. ஏனெனில், சாமானிய மக்களில் பெரும் பகுதியினர் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கான நீரைக் கூடப் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் 35 நகரங்களில் சராசரியாக ஒரு நாளுக்கு 2 மணி நேரம் கூட குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. நகரங்களிலேயே இப்படி என்றால், கிராமப்புறங்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. தொலை தூரத்தில் இருந்து தலைச்சுமையாக குடிநீர்ப் பானையை வீட்டுக்குக் கொண்டு வரும் பெண்மணிகள் இன்றும் இந்திய கிராமங்களில் வசிக்கிறார்கள். ÷பெரும் தொழிற்சாலைகளின் அபரிமிதமான வளர்ச்சியும் இன்று நீர்த்தேவை மிக அதிகமாகப் பெருக வழிவகுத்துள்ளது. நீர் மட்டுமல்லாமல், காடுகளும், கனிமங்களும் தொழிற்சாலைகளின் லாப வேட்டைகளுக்காக தாரை வார்க்கப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலே, மனிதகுலத்தை அச்சுறுத்தும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்து விடும்.

No comments:

Post a Comment