Tuesday, July 27, 2010
பழங்குடியின மொழிகளுக்கு புத்துயிர்!
ஆந்திர மாநிலப் பகுதியில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழும் சில பழங்குடி இன மக்கள் பேசும் மொழிகளுக்கான வரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொழியின் ஒலியமைப்புக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த எழுத்துக்களை உருவாக்கியவர் ஆந்திர பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பிரசன்ன ஸ்ரீ என்பவர். கடந்த 19 ஆண்டுகளாக முயன்று அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தைக் கண்டுபிடித்ததுதான் மனித குலத்தின் நாகரிக வாழ்வைத் துவக்கி வைத்தது என்பது மானுடவியல் அறிஞர்கள் கூற்று. அந்த வகையில் இப்பழங்குடி மக்கள் அவர்களுக்குச் சொந்தமான நாகரிகத்தை உருவாக்கிக் கொள்ள பேராசிரியர் பிரசன்ன ஸ்ரீ வாய்ப்பளித்துள்ளார் என்று கூறலாம்.
உலகில் பேசப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ள சுமார் 7 ஆயிரம் மொழிகளுள் நூற்றுக்கணக்கான மொழிகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படாமலேயே அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன என்று மொழியியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அதில் சிலர் பாதிக்கும் மேலான மொழிகள் அந்த நிலையில்தான் உள்ளன என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள். கடந்த பத்து மாதங்களுக்குள்ளாக அந்தமானிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த கோரா, போ என்ற இரண்டு மொழிகள் அழிந்துள்ளன. அம்மொழிகளை அறிந்திருந்த இரண்டு அந்தமானியப் பழங்குடிப் பெண்கள் இறந்து விட்டதால் அவர்களோடு சேர்ந்து அவையும் அழிய வேண்டியதாகி விட்டது. தற்போது அம்மொழிகள் பேசத் தெரிந்த ஒருவர் கூட உலகில் இல்லை(பார்க்க பெட்டிச் செய்தி). இதுபோல் கணக்கிலடங்காத மொழிகள், குறிப்பாக பழங்குடியினரின் மொழிகள், அழிந்து போகக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
இதுபோக, புதிய தலைமுறையினர் அன்றாட வாழ்வில் தமது தாய்மொழியை குறைவாகப் பயன்படுத்துவது, கலாச்சார ரீதியில் மற்ற மொழிகள் ஆதிக்கம் செலுத்துவது, இன அடையாளத்தை வெளிப்படுத்துவதற்கான தயக்கம் மற்றும் தனது மொழியைப் பற்றிய தாழ்வான எண்ணம், மக்களின் நகர மோகம், அரசின் பாதகமான மொழிக்கொள்கை என ஒரு மொழி அழிவதற்கு ஏராளமான காரணங்களைப் பட்டியலிடலாம்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பெரும்பான்மையான மக்களால் பேசப்படும், பெரும் இலக்கியச் செல்வங்களைக் கொண்டிருக்கும் மொழிகளே இந்த பாதிப்புகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளப் போராடி வரும் நிலையில், எண்ணிக்கையில் மிகக்குறைவான பழங்குடியின மக்கள் பேசும் மொழிகள் குறித்துச் சொல்லத் தேவையில்லை. மேலும் வரி வடிவம் இன்றி பேச்சுவழக்கில் மட்டுமே இம்மொழிகள் பயன்படுத்தப்படுவது அவை நீடித்து நிற்கும் வாய்ப்புகள் குறைவு என்பதைக் காட்டுகிறது.
இத்தகைய பின்புலத்தில்தான் பேராசிரியர் பிரசன்னஸ்ரீ யின் முயற்சி சாதனையாகிறது. பகதா, கதபா, ஜாதபு, வால்மீகி, கோலமா, போர்ஜா, கோயா, கோன்டா-டோரா, கோட்டியா, கோண்டு என பத்து பழங்குடியினரின் மொழிகள் இவரது 19 ஆண்டு கால உழைப்பில் எழுத்துக்களைப் பெற்றுள்ளன. எழுத்துகளை வடிவமைப்பதற்கு அம்மக்களின் மதம், கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றிலிருந்து பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்தியதாக பிரசன்னஸ்ரீ கூறுகிறார். பின்னர் அந்த அம்சங்களை, அவர்களது மொழியின் ஓசைக்கேற்ப எழுத்துக்களாக மாற்றியுள்ளார்.
“பழங்குடியினரின் பேச்சு மொழியின் ஒலியமைப்பை கவனமாக ஆராய்ந்து, அதற்கேற்ப தனித்த அடையாளங்களை உருவாக்கியுள்ளேன். இந்த அடையாளங்கள் அம்மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடிந்த வகையில் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் காணும் அம்சங்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. ஒரியா, தெலுங்கு, இந்தி, தேவநாகரி, பெங்காலி மற்றும் தமிழ் போன்ற மொழிகள் அவர்கள் பேசும் மொழிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியுள்ளன என்பதால் அவற்றில் இருந்தும் சில வடிவங்களைப் பெற்றுள்ளேன்,” என்று கூறும் பிரசன்ன ஸ்ரீ, இதைச் செய்து முடிக்க மிகுந்த சிரமங்களைச் சந்தித்துள்ளார். பணியின் போது மக்களிடமிருந்தும், மாவோயி°டுகளிடமிருந்தும் சில நேரங்களில் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டியிருந்ததாகக் கூறுகிறார்.
“போர்ஜா இன மக்கள் மிகுந்த கூச்சத்தன்மை கொண்டவர்கள். அவர்களுடன் நெருங்கிப்பழக எனக்கு பல மாதங்கள் பிடித்தது. எனது ஒலிநாடாவில் இருந்து வரும் பதியப்பட்ட அவர்களது ஒலிகள் அவர்களுக்கு அச்சமூட்டின. கேமராவின் மின்னும் ஒளியும் அவர்களுக்கு உவப்பாக இல்லை!” என்கிறார் பிரசன்ன ஸ்ரீ.
வரிவடிவம் கண்டறிந்தது பெரிதல்ல. அதைவிட முக்கியமான பணி அதனை மக்களிடம் சேர்ப்பதாகும். இப்பணியில் 132 பழங்குடியினத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான ஊக்கம் கொடுக்கும் வகையில் 10 பேர் செயல்படுவதாகவும் பிரசன்ன ஸ்ரீ கூறுகிறார். இக்குழுவினர் இந்த வரிவடிவத்தை ஆரம்பப்பள்ளிக் குழந்தைகளுக்கும், சுய உதவிக்குழுப் பெண்களுக்கும் கற்பித்து வருகின்றனர். 167 கிராமங்களில் உள்ள முதியோர் கல்வித்திட்ட மையங்களிலும் இப்பணி நடந்து வருகிறது.
பேராசிரியர் பிரசன்ன ஸ்ரீயின் முயற்சிக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும், வரவேற்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அழியும் நிலையில் உள்ள மொழிகளைக் காப்பதற்காகச் செயல்பட்டு வரும் அறிஞர்கள் அவரைப் பாராட்டியுள்ளனர்.
பேராசிரியர் பிரசன்ன ஸ்ரீ யின் இந்தச் சாதனை, பேராசை பிடித்த ஏகபோக தனியார் சுரங்க நிறுவனங்களின் கோரப்பிடியில் இருந்தும், அவர்களுக்குத் துணை செய்யும் கொள்கைகளை வெட்கமின்றிக் கடைப்பிடிக்கும் அரசுக்கும் எதிராக, தங்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடி வரும் பழங்குடி மக்களுக்கு மற்றொரு ஆயுதமாகப் பயன்படக் கூடும். கோரிக்கைகளை அவர்கள் வென்றெடுக்க மனமார வாழ்த்துவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment