Saturday, April 17, 2010

வாலு போச்சு; மூளை வந்தது!


எலியின் வாலில் உள்ள இணைப்புத் திசுக்களில் இருந்து நேரடியாக, செயல்படும் மூளை செல்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி மரியஸ் வெர்னிக் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இச்சாதனையைப் புரிந்துள்ளது. பொதுவாக இத்தகைய செல்களை உருவாக்க மிக நீண்டதும், களைப்பு ஏற்படுத்துவதுமான வழிமுறைகளை விஞ்ஞானிகள் கையாண்டு வருகின்றனர். முதலில் திசுக்கள் செயல்படும் பல்வகை ஆற்றல் கொண்ட செல்களாக (Active Pluripotent Cells) மாற்றப்படும். அதன் பிறகு இவை நரம்பு செல்களாக (நியூரான்கள்) மாற்றப்படும். பல நேரங்களில் இந்த வழிமுறைகள் எந்த விதப் பலனையும் ஏற்படுத்தாமல் போவதும் உண்டு. இந்நிலையில்தான் தற்போது புதிய அதிவேக முறை கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில் விஞ்ஞானிகள் குழு எலியின் வாலில் உள்ள சில வகை இணைப்புத் திசுக்களை நேரடியாக வளரும் செல்களுக்குள் செலுத்தியது. இதையடுத்து அந்தச் செல்கள் நேரடியாக நியூரான்களாக மாற்றப்பட்டன. இம்முறை அதிவேகமானது மட்டுமல்லாமல் எதிர்பார்த்த பலன்களை விரைவில் தருவதாகவும் உள்ளது என்று விஞ்ஞானி வெர்னிக் கூறுகிறார். இவ்வாறு உருவாக்கப்பட்ட செல்கள் நரம்பு செல்களைப் போன்று மற்ற செல்களிடம் இருந்து சைகைகளைப் பெறவும், சைகைகளை அனுப்பவும் செய்கின்றன என்கிறார் அவர்.
இந்த தனித்தனி மூளை செல்கள் இணைந்து விரைவில் எலியின் மூளையாக மாறும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். தீவிரமாக அச்செல்களைக் கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு மாறினால் அது மருத்துவ உலகிற்குப் பெரும் நன்மையைத் தருவதாக இருக்கும். பார்க்கின்சன் நோய் போன்றவற்றையும், சில வகை நரம்புக் கோளாறுகளையும் சரிசெய்ய இயலும். மன நல மருத்துவத்திலும் இது பெரிதும் பயன்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.