Saturday, August 29, 2009

இது கதையல்ல, நிஜம்....!



"ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சு. ஒரு நாள் ரொம்ப தூரம் பறந்து போயிட்டு வந்ததால அதுக்கு ரொம்ப களைப்பா இருந்துச்சு. தண்ணித் தாகமும் எடுத்துச்சு. சுத்திச் சுத்தி பாத்தா தண்ணியே இல்ல. சரினு சொல்லி கொஞ்ச தூரம் பறந்து போய் தேடிப் பாத்துச்சு. அப்ப ஒரு வீட்டு முன்னால ஒரு பானை இருந்ததைப் பாத்துச்சு. உடனே ரொம்ப சந்தோஷமா எறங்கிப் போயி பானையில உக்காந்து எட்டிப் பாத்துச்சு. ஆனா அதுல தண்ணி கொஞ்சமாத்தான் இருந்துச்சு. சரி முயற்சி பண்ணி பார்ப்போமேனு நெனச்சு மூக்க உள்ள விட்டுப் பாத்தா, தண்ணி எட்டுல. அதுக்கு அழுகை அழுகையா வந்துச்சு. தண்ணித் தாகம் வேற ரொம்ப அதிகமாயிடுச்சு. ரொம்ப தூரம் தேடிப்பாத்தும் தண்ணி கெடச்ச இடம் இதுதான். இதை விட்டுட்டு போக அதுக்கு மனசு வரல. சரி ஏதாவது பண்ணிப் பாக்கலாமேனு நெனச்சு உக்காந்து யோசிச்சுது. அது உண்மையாவே ரொம்ப புத்திசாலி காக்கா. திடீர்னு ஒரு யோசன வந்து பக்கத்துல கெடந்த கூழாங்கல்லையெல்லாம் எடுத்து பானைக்குள்ள போட்டுச்சு. ஒவ்வொரு கல்லா போடப்போட தண்ணி மேல வந்துச்சு. தண்ணி மூக்குக்கு பக்கத்துல வந்ததும் சந்தோஷமா குடிச்சுட்டு பறந்து போயுடுச்சு...."
நாம் சிறுவயதில் கேட்ட கதைதான் இது. தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்ற நீதியைக் கூறுவதாக உள்ள இப்புகழ்பெற்ற கதையை எழுதியவர் ஈசாப் என்ற கிரீ° நாட்டு அடிமை ஆவார். விலங்குகளையே கதாபாத்திரங்களாகக் கொண்டு இதுபோல் நூற்றுக்கணக்கான கதைகளை அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய இந்த அறிவுள்ள காகத்தின் கதை வெறும் கதையல்ல என்று அறிவியலறிஞர்கள் சொல்கின்றனர். ஈசாப்பின் காகம் மட்டுமல்லாமல் உலகில் உள்ள பெரும்பாலான காகங்களும் அறிவுடையவை என்று அவர்கள் கூறுகின்றனர். கல் மட்டுமல்லாது சிறு குச்சிகள் உள்ளிட்ட மற்ற பொருட்களையும் பயன்படுத்துவது குறித்து அவை தெரிந்து வைத்துள்ளன என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார்கள் அவர்கள்.
ரூக் எனும் ஒருவகைக் காகங்கள் இது போன்ற சூழ்நிலையை உருவாக்கும்போது -அதாவது ஒரு கருவியைப் பயன்படுத்தினால்தான் அதன் உணவைப் பெற முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கும்போது- கருவிகளை அனாயசமாகப் பயன்படுத்துகின்றனவாம்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்த ஆய்வுக்குழுவினர் 4 ரூக் வகைக் காகங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். ஈசாப் கதையில் வருவது போலவே ஒரு நீண்ட வாயுடைய கலத்தில் சிறிதளவு தண்ணீரை வைத்தனர். ஆனால் காகங்களுக்கு தாகம் ஏற்படும் வரை அவர்கள் காத்திருக்கவில்லை. மாறாக ஒரு சிறிய புழுவை உள்ளே விட்டனர். பக்கத்தில் ஒரு கற்குவியலை ஏற்படுத்தினர். புழுவைப் பார்த்த காகங்கள் அதை எப்படி எடுப்பது என்று நீண்ட நேரம் யோசிக்கவில்லை. கலத்தினுள் முதலில் எட்டிப்பார்த்தன. நீர்மட்டம் எவ்வளவு உள்ளது என்று பார்த்த பின்னர் சரியான அளவில் கற்களை உள்ளே போட்டு நீர்மட்டத்தை உயர்த்தி புழுவை எடுத்துச் சுவைத்தன. இரண்டு காகங்கள் முதல் சோதனையின் போதே தம் முயற்சியில் வெற்றிபெற்றன. மற்ற இரண்டும் அடுத்த முயற்சியில் வெற்றி பெற்றன. இந்த ஆய்வைச் செய்த விஞ்ஞானிகள்,எத்தகைய கற்களைப் பயன்படுத்துவது என்று கூட அவை எளிதில் கற்றுக்கொண்டன என்று கூறுகிறார்கள். சிறிதும் பெரிதுமான கற்கள் இருந்த குவியலில் அவை பெரும்பாலும் பெரிய கற்களையே தேர்ந்தெடுத்தனவாம். பெரிய கற்களைப் பயன்படுத்தினர்ல் தண்ணீர் சீக்கிரமே மேலே வந்து விடும் என்பதால்தான் அவை அவ்வாறு செய்கின்றன என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் அவர்கள். மற்றொரு தனிச் சோதனையையும் செய்து இதை அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
இதேபோல் நியூ காலிடோனியன் வகை காகங்கள் குறித்து நடத்தப்பட்ட சோதனையில் இதைவிட ருசிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வகைக் காகங்கள் தமது உணவை அடைய தொடர்ச்சியாக 3 கருவிகளைக்கூட பயன்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றன என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆக்°போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வில் ஒரு கலத்தில் சிறு புழு ஒன்று விடப்பட்டது. அருகே வேறு பல கலங்கள் இருந்தன. அவற்றில் சிறிதும் பெரிதுமான பல கொக்கிகள் வைக்கப்பட்டிருநதன. ஆனால் அவையும் புழுவைப்போலவே பறவைகளுக்கு எட்டாத ஆழத்தில் இருந்தன. அதே சமயத்தில் ஒரு சிறிய கொக்கி அருகே வைக்கப்பட்டிருந்தது. காகங்கள் என்ன செய்தன என்று யூகிக்க முடிகிறதா உங்களால்? முதலில் சிறிய கொக்கியை அவை அலகால் எடுத்தன. அதைக்கொண்டு நடுத்தரமான கொக்கியை எடுத்தன.(நடுத்தரமான கொக்கிகளை மட்டுமே சிறிய கொக்கிக்கு எட்டும் வகையில் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது) பின்னர் அந்த நடுத்தர நீளத்தில் உள்ள கொக்கியைக்கொண்டு நீண்ட கொக்கியை எடுத்தன. இதையடுத்து அந்த நீளமான கொக்கியின் உதவியால் அவை புழுவை எடுத்து உண்டன. ஒரு கதையைப் போன்று இருக்கிறது அல்லவா? சோதனை செய்யப்பட்ட 7 காகங்களில். 4 காகங்கள் இவ்வாறு 3 கருவிகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி புழுவை உண்டனவாம்.
இது உண்மையில் ஆச்சரியமானதுதான். இதுவரை கருவிகளைப் பயன்படுத்தும் ஆற்றல் மனிதனைத் தவிர உராங் உட்டான் குரங்குகளுக்கு மட்டுமே இருப்பதாகக் கருதப்பட்டது. தற்போது இதுபோன்ற சிலவகை காகங்களுக்கும் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் பல ஆய்வுகளும் நடந்து வருகின்றன. எதிர்காலத்தில் மேலும் பல உண்மைகளும் வெளிவரக்கூடும்.